அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது’ என்று ஒரு சில நடிகர் நடிகைகளைச் சொல்லுவார்கள். அந்தப் பட்டியல் மிகச்சிறியதுதான். சின்னஞ்சிறிய பட்டியலுக்குள், விஸ்வரூபமெடுத்து நிற்கும் முக்கியமான நடிகை காந்திமதி.
சில படங்களில் அவரது கேரக்டரின் மூலம் அம்புட்டு பேரையும் கவனிக்க வைச்சுப்புடுார். குறிப்பாக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய கதவு திறந்த படம், மிகப்பெரிய பாதையையே உருவாக்கித் தந்த படம் என்றெல்லாம் போற்றப்பட்டு, மொத்த திரையுலகையும் தமிழ் உலகையும் வியக்க வைத்தது பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’. படத்தில் சப்பாணி, மயிலு, பரட்டையன், டாக்டர் எல்லோரும் நம் நினைவில் நிற்கிறார்கள்.
அதேபோல் இன்றைக்கும் நம் மனதில் நிற்கிற குருவம்மா கேரக்டரை அவ்வளவு சுலபமாக எவரும் மறந்துவிடமுடியாது.
சுவரில்லாத சித்திரங்கள், மண்வாசனை, கரகாட்டக்காரன், , முத்து போன்ற பல படங்களில் இவரது கதாபாத்திரங்களை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.
அக்காவாக நடிப்பார். உருகுவார். அம்மாவாக நடிப்பார். பாசம் பொழிவார். மாமியாராக நடிப்பார். மிரட்டியெடுப்பார். ‘கால்கேர்ள்’ வைத்து வியாபாரம் செய்வார். கொஞ்சிக்குழைவார். எந்தக் கதாபாத்திரம் என்றில்லாமல் அசத்துவார்.
நல்ல கதாபாத்திரமோ நெகட்டீவ் கதாபாத்திரமோ அதில் தன் முத்திரையைப் பதித்துவிடுவார். செட்டிநாட்டு பாஷை, மதுரை பாஷை, கோவை பாஷை, சென்னை பாஷை என்பதெல்லாம் காந்திமதிக்கு சரள பாஷை. சகஜ பாஷை. ஆனால் எந்த பாஷையில், எந்தக் கேரக்டராக இருந்தாலும், கொஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சம் இழுத்துப் பேசுகிற காந்திமதி ஸ்டைல்தான்… டாப்டக்கர்!
ஒரு கட்டத்தில் சினிமா மார்க்கெட் குறைந்த பிறகு மை டியர் பூதம், கோலங்கள் போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். ஏன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முத்து படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.அக்காவாக நடிப்பார். உருகுவார்.
காந்திமதி சினிமாவில் கவனம் செலுத்தியதால் தன்னுடைய சொந்த வாழ்க்கையை கோட்டை விட்டார். சரியான வயதில் திருமணம் செய்து கொள்ளாமல் விட்டதால் கடைசிவரை அவரால் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போய்விட்டது.
இவர், தன்னுடயை தங்கையின் உதவியோடு வாழ்ந்த போது, அவர்களின் குழந்தையையும் வளர்த்து வந்துள்ளார். ஆனால் பணம் இருக்கும் வரை சொந்தம் இருக்கும் என்ற வசனத்திற்கு ஏற்ப அவர் சம்பாதிக்கும் வரை அவரை தங்கத்தட்டில் வைத்து தாங்கிய அவரது தங்கை காந்திமதிக்கு புற்றுநோய் வந்து அவஸ்தைப்பட்ட போது கண்டுகொள்ளவில்லையாம்.
மேலும், காந்திமதி கடைசி காலத்தின்போது அவருக்கு தண்ணீர் கூட கொடுக்கக்கூட ஆளில்லாமல் தனிமையில் மனம் நொந்தே இறந்துவிட்டாராம்.
காலங்கள் இவரை மறந்தாலும், இவர் நடித்த அற்புதமான திரைப்படங்கள் என்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும். நடிப்பு மகாராணி காந்திமதி நினைவு நாள் இன்று.
