பல வகையான குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் வெகு சிறப்பாக நடித்துப்
பல தரப்பட்ட ரசிகர்கள் மனங்களைக் கவர்ந்தவரான நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் இன்று தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
பின்னணிக் குரல் கலைஞராக (டப்பிங்) தன்னுடைய திரைப் பயணத்தைத் தொடங்கிய பாஸ்கர் ஒரு சிறந்த நடிகராக உருமாறியதற்கு சினிமாவுக்கு வருவதற்கு முன் நாடக நடிகராக அவருக்கு இருக்கும் நீண்ட அனுபவம் கைகொடுத்திருக்கக்கூடும்.
தன் அக்கா ஹேமமாலினியைப் பின்பற்றி பாஸ்கரும் திரைப்பட டப்பிங் கலைஞரானார். தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படும் படங்களில் பெரும்பாலும் நகைச்சுவை நடிகர்களுக்கு அவர் டப்பிங் பேசினார்.
பின்னர் தொலைக்காட்சிகளுக்கென்றே பிரத்யேகமான மொழிமாற்றம் செய்யப்பட்ட ஆங்கிலப் படங்கள் பலவற்றில் பலவகையான கதாபாத்திரங்களுக்கு அவருடைய அபாரமான குரல் திறன் பயன்பட்டது.
விசு இயக்கத்தில் 1987இல் வெளியான ‘திருமதி ஒரு வெகுமதி’ பாஸ்கர் நடித்த முதல் திரைப்படமானது. தொடர்ந்து விசுவின் படங்களிலும் மற்ற இயக்குநர்களின் படங்களிலும் ஒரே ஒரு காட்சியில் தலைகாட்டும் கதாபாத்திரங்களில் நடித்துவந்தார்.
எம்.எஸ்.பாஸ்கர் என்னும் பெயரை அனைவரும் அறிந்துகொள்ளவும் அவரை வியந்து பாராட்டவும் வைத்தது ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ நெடுந்தொடரில் அவர் ஏற்ற பட்டாபி கதாபாத்திரம்தான்.
பட்டாபி கதாபாத்திரத்தை வைத்தே ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ தொடரை இன்றும் ரசிகர்கள் நினைவுகூர்கிறார்கள்.
விஜயகாந்த் நடித்த ‘எங்கள் அண்ணா’ படத்தில் எந்நேரமும் மதுபோதையில் இருந்தபடி வடிவேலுவை வெறுப்பேற்றுகிறவராக பாஸ்கர் நகைச்சுவை நடிப்பிலும் தன் மேதமையை வெளிப்படுத்தியிருப்பார். ஒரு குடிகாரரின் உடல் மொழியையும் பேசும் விதத்தையும் அவ்வளவு சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்.
இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய், அஜித் என முன்னணி நட்சத்திர நடிகர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார் பாஸ்கர்.
அடுத்த சில ஆண்டுகளில் வெளியான கமல்ஹாசனின் ‘தசாவதாரம்’ திரைப்படத்தில் டூரிஸ்ட் கைடு போன்ற கதாபாத்திரத்தில் அமெரிக்க வில்லனான ஃப்ளெச்சரிடம் தமிழ் கலந்த ஆங்கிலம் பேசுபவராக நகைச்சுவையில் அசத்தியிருந்த விதத்தில் கமலின் பத்து வேடங்களையும் தாண்டி தனி முத்திரை பதித்தார் பாஸ்கர்
‘மொழி’ படத்துக்குப் பின் எம்.எஸ்.பாஸ்கர் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரானார்.
அவருடைய சிறந்த நடிப்பு வெளிப்பட்ட திரைப்படங்களின் எண்ணிக்கை மிகப் பெரியது.
எம்.எஸ்.பாஸ்கருக்கு அடுத்த உயரத்தைப் பெற்றுத்தந்த திரைப்படம் ஸ்ரீகணேஷ் இயக்கிய ‘8 தோட்டாக்கள்’. இதில் நாயகனுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் அவருக்கு. விதியின் கொடூரமான விளையாட்டுகளால் கொலைக் குற்றவாளியாகிவிடும் காவலராக மிகச் சிறப்பாக நடித்திருந்தார் பாஸ்கர்.
தனது குற்றங்களின் பின்னணியை விளக்கும் அந்த நீண்ட வசனத்தை அவர் பல உணர்வுகளை வெளிப்படுத்தி ஒரே ஷாட்டில் பேசிய விதம் அவருடைய நடிப்பின் உச்சம் எனலாம்.
தூய தமிழிலும் தமிழின் அனைத்து வட்டார வழக்குகளிலும் பிழையின்றிப் பேசத் தெரிந்தவர் என்பது அவருடைய இன்னொரு தனிச்சிறப்பு.
இத்தகைய அபார திறமையும் பன்முக நடிப்பாளுமையும் மிக்க நடிகரான எம்.எஸ்.பாஸ்கர் இன்னும் பல நூறு படங்களில் நடிக்க வேண்டும். அவருக்கு நடிப்புக்கான பல விருதுகள் கிடைக்க வேண்டும். ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் அவர் பல்லாண்டு வாழ்ந்து தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்வித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துவோம்.
