தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களில் நடித்தவர் நடிகை ஊர்வசி. சிறுவயதிலேயே நடிப்பை தொடங்கிய அவர், 8-வது வயதில் மலையாள திரைப்படம் விடரும் மொட்டுக்கள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதே படத்தில் அவரது சகோதரி கல்பனாவும் அறிமுகமானார்.
பின்னர் 1979-ல் வெளிவந்த கதிர்மண்டபம் படத்தில், ஜெயபாரதியின் மகளாக நடித்தார். தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
மொத்தம் மூன்று சகோதரிகள் — ஊர்வசி, கல்பனா, கலாரஞ்சனி — மூவரும் சினிமாவில் நடித்து புகழ்பெற்றவர்கள். இதில் கல்பனா சின்ன வீடு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். கலாரஞ்சனி சில படங்களில் மட்டும் நடித்தார். ஆனால், ஊர்வசி தான் நீண்ட காலம் முன்னணி நடிகையாகவும் குணச்சித்திர நடிகையாகவும் தனித்த அடையாளம் பெற்றார்.
13-வது வயதில் தொடரும் உறவு (1983) படத்தில் ஹீரோயினாக அறிமுகமான ஊர்வசி, அந்த படம் மூன்று ஆண்டுகள் கழித்து 1986-ல் தான் திரையரங்குகளில் வெளிவந்தது. அதற்குள் அவர் நடித்து முடித்த பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு படமே, ஹீரோயினாக திரையரங்குகளில் வெளியான அவரது முதல் படம்.
அதன் பின் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எவ்விதமான கதாபாத்திரமாக இருந்தாலும் — காமெடி, கண்ணீர், கோபம், பொறாமை — அதை இயல்பாகவே வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவர்ந்தவர். அதனால் தான் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் அவரை “நடிப்பின் அரக்கி” என புகழ்ந்தனர்.
சமீபத்தில் வெளியான உள்ளொழுக்கு படத்திலும் நடித்துள்ள அவர், இன்றுவரையும் தன்னுடைய நடிப்புப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.
