மூக்குத்தி அம்மன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், டாக்டர் ஐஷரி கே. கணேஷ் தயாரிப்பில், வெற்றி இயக்குநர் சுந்தர் C இயக்கத்தில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள “மூக்குத்தி அம்மன் 2” படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
முதல் பாகமான மூக்குத்தி அம்மன் பக்தி, நகைச்சுவை மற்றும் சமூக அக்கறை மிக்க கருத்துகளுடன் குடும்ப ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதே பாதையில், இன்னும் பிரம்மாண்டமான அனுபவத்தை வழங்கும் வகையில், கமர்சியல் சினிமாவில் தனித்துவத்தை நிரூபித்துள்ள இயக்குநர் சுந்தர் C இயக்கத்தில், நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் நயன்தாராவுடன் பல முன்னணி நடிகர்களும் இணைந்துள்ளனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இத்திரைப்படம், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஐஷரி கே. கணேஷ் தயாரிக்கிறார்.
இதுகுறித்து தயாரிப்பாளர் டாக்டர் ஐஷரி கே. கணேஷ் தெரிவித்துள்ளார்:
“மூக்குத்தி அம்மன் ஒரு படம் மட்டுமல்ல, மக்களின் மனதை ஆழமாக தொட்ட படைப்பு. பக்தி, மர்மம், நகைச்சுவை ஆகிய அனைத்தையும் இணைத்து, ஒரு மாபெரும் திரையரங்க அனுபவத்தை வழங்குவதே எங்கள் நோக்கம். இந்த ஃபர்ஸ்ட் லுக், அந்த பிரம்மாண்ட உருவாக்கத்தின் ஒரு முன்னோட்டம் மட்டுமே.”
தெய்வீகமும் மாயமும் நிறைந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் கோடை கால விடுமுறையில் இப்படம் திரையரங்குகளில் வெளியாக படக்குழு திட்டமிட்டுள்ளது.
