பா. ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் “டான்சிங் ரோஸ்” என ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர் நடிகர் ஷபீர் கல்லரக்கல்.
சமீபத்தில் வெளியான மதராசி மற்றும் தண்டகாரண்யம் ஆகிய இரு படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த அவர், ஒரே மாதத்தில் இரண்டு படங்கள் வெளியாகியதை முன்னிட்டு ரசிகர்கள், இயக்குநர்கள் மற்றும் ஊடகங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
“என் நடிப்பில் வெளியாகிய மதராசி மற்றும் தண்டகாரண்யம் ஆகிய இரண்டு படங்களும் தொடர்ந்து வெளிவந்துள்ளதால், இது என் வாழ்வில் மறக்க முடியாத தருணமாக அமைந்துள்ளது. அந்த கதாபாத்திரங்களுக்கு ரசிகர்கள் அளித்த அன்பும், ஊடகங்கள் பகிர்ந்த பாராட்டும் என் பயணத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளது.
ரசிகர்களின் பாராட்டுச் சொற்கள் எனக்கு மேலும் ஊக்கமளித்து, எதிர்காலத்தில் இன்னும் சவாலான கதாபாத்திரங்களைத் தேடி முழுமையாக பணியாற்றும் உறுதியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர்கள் ஏ.ஆர். முருகதாஸ், அதியன் அதிரை தோழர் ஆகியோருக்கு எனது இதயபூர்வ நன்றிகள். ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ், நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் லெர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் உறுதியான ஆதரவிற்கும், எனது பயணத்திற்கு உயிரூட்டும் ரசிகர்களின் அன்பான வரவேற்பிற்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.”
