தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் பெயர் பெற்றவர் நடிகர் விஷ்ணு விஷால். கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர் நடித்த பல படங்கள் வெற்றிபெற்றுள்ளன.
‘கட்டா குஸ்தி’க்கு பிறகு விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்துள்ள அடுத்த படம் ‘ஆர்யன்’. ராட்சசன் படத்தின் வரிசையில் ஹாரர்-திரில்லர் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இப்படம் குறித்து பேசிய விஷ்ணு விஷால் கூறியதாவது:
“கொரோனா காலத்தில் தான் ‘ஆர்யன்’ படத்தின் கதையை கேட்டேன். கதையை கேட்ட உடனே இதில் நடிக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். ராட்சசனுக்கு பிறகு மீண்டும் ஒரு திரில்லர் படம் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனால் அது வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதையும் விரும்பினேன். இந்த படம் அதற்கு சரியான எடுத்துக்காட்டு. இது ராட்சசன் மாதிரி அல்ல, ஆனால் ரசிகர்கள் எதிர்பார்க்காத பல அம்சங்கள் இதில் உள்ளன.
‘கட்டா குஸ்தி’ படத்தை தொடங்கும் முன்பே இதற்காக 15 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் சில காரணங்களால் தாமதமானது.
வெப் சீரிஸ் பணிகளுக்காக நான் மற்றும் இயக்குநர் பிரவீன் மும்பை சென்றிருந்தபோது, நடிகர் அமீர்கானை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர், இந்தப் படத்தின் கதையை கேட்க விருப்பம் தெரிவித்துள்ளார். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கதை மட்டும் அல்லாமல், சினிமா தொடர்பான பல விஷயங்களைப் பற்றியும் பேசினோம். கதையை கேட்ட பிறகு, இந்தப் படத்தின் இந்தி பதிப்பில் வில்லனாக தான் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த வாய்ப்பு பின்னர் உருவாகவில்லை.
அமீர்கான் நடிக்க நினைத்த அந்தக் கதாபாத்திரத்தில் தற்போது செல்வராகவன் நடித்திருக்கிறார். நாங்கள் படத்தை தொடங்கும் போதே வில்லன் கதாபாத்திரத்துக்கு அவர் சரியான தேர்வு என நினைத்திருந்தோம்.
எனக்கு ‘பான் இந்தியா’ கான்செப்டில் நம்பிக்கை இல்லை. தற்போது பான் இந்தியா படங்கள் கடவுள் சார்ந்த அல்லது மிகுந்த கமர்ஷியல் கதைகள் மட்டுமே. ‘ஆர்யன்’ படம் அதற்கே முற்றிலும் மாறானது. இது எத்தனை மொழிகளில் வெளிவந்தாலும், எந்த ஒரு மொழியிலாவது பாராட்டுகள் கிடைத்தால் அதுவே எனக்கு பெரும் மகிழ்ச்சி.”
இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்தார்.
