பிரவீன் இயக்கத்தில், விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள ‘ஆர்யன்’ திரைப்படம் வரும் அக்டோபர் 31 அன்று வெளியாக உள்ளது. இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சவுத்ரி, செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைத்துள்ளவர் சாம் சி.எஸ். இது கிரைம் திரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ளது.
படத்தைப் பற்றி விஷ்ணு விஷால் கூறியதாவது:
“இந்த படத்தில் நான் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளேன். என் மகன் பெயரான ‘ஆர்யன்’ என்பதையே தலைப்பாக வைத்துள்ளேன். மும்பையில் ஒருமுறை நடிகர் அமீர்கானை சந்தித்தபோது, படத்தின் ஒன்லைன் கதையை பகிர்ந்தேன். அவருக்கு அது பிடித்து, முழுக் கதையையும் கேட்க விரும்பினார். அந்த இரவு 10 மணி முதல் அதிகாலை வரை கதையை கேட்டார். வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்டார். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அது சாத்தியமாகவில்லை. அவருக்குப் பதிலாக இயக்குநர் செல்வராகவன் நடித்துள்ளார், அவர் கேரக்டர் பேசப்படும்.”
“படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. இதில் நான் நடித்த போலீஸ் கேரக்டர் மிகவும் வித்தியாசமானது. இது ஒரு போலீஸ், உளவியல், கிரைம் திரில்லர் என்றாலும் ‘ராட்சசன்’ படத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஒரு கட்டத்தில் நான் தயாரிப்பாளராக மாறியதால், தற்போது படங்கள் வேகமாக வர ஆரம்பித்துவிட்டன. ஒரு ஆண்டில் ‘எஃப்.ஐ.ஆர்’, ‘கட்டா குஸ்தி’ என இரண்டு ஹிட் படங்கள் கொடுத்தேன்,” என கூறினார்.
“எல்லா படங்களையும் நான் தயாரிக்க வேண்டுமென்று இல்லை, ஆனால் சில காரணங்கள் என்னை தயாரிப்பாளராக ஆக்கியது. என் படங்களில் நாயகிக்கு எப்போதும் முக்கியத்துவம் இருக்கும். இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒரு நிருபராக நடித்துள்ளார்.”
“எனக்கு காமெடி கதைகள் மிகவும் பிடிக்கும். பல காமெடி படங்களில் நடித்திருக்கிறேன், ஆனால் இப்போது அப்படி கதைகள் குறைந்துவிட்டன. அடுத்ததாக ‘கட்டா குஸ்தி 2’ வருகிறது. மேலும் அருண்ராஜ் இயக்கத்தில் ஒரு பாக்சிங் படம், சதீஷ் இயக்கத்தில் ஒரு லவ் ஸ்டோரி ஆகிய இரண்டிலும் நடிக்கிறேன். நான் 60–65 வயது வரை சினிமாவில் இருக்க ஆசைப்படுகிறேன். கிரிக்கெட் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது,” என்று விஷ்ணு விஷால் தெரிவித்தார்.
