மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளியான குறைந்த பட்ஜெட் க்ரைம் த்ரில்லர் திரைப்படமான “Baby Girl (2026)” தற்போது தமிழ் டப்பிங்குடன் Jio Hotstar OTT தளத்தில் வெளியாகியுள்ளது. 2026 ஜனவரி 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம், வெளியான முதல் 15 நாட்களிலேயே சுமார் 1.70 கோடி ரூபாய் வசூல் செய்து நல்ல வரவேற்பைப் பெற்றது. 2026 பிப்ரவரி 13 முதல் OTT-யில் வெளியானதால் மேலும் அதிகமான பார்வையாளர்கள் இந்த படத்தை பார்க்க தொடங்கியுள்ளனர்.
தொடர்ந்து நான்கு தோல்விப் படங்களை சந்தித்திருந்த நடிகர் நிவின் பாலிக்கு இந்த படம் எதிர்பாராத வெற்றியாக அமைந்துள்ளது. “சர்வம் மாயா” படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஒரு ஹிட் படம் அவருக்கு கிடைத்துள்ளது.
சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்த மருத்துவமனை திடீரென்று பரபரப்பானதற்கு காரணம் பிறந்த குழந்தை ஒன்று காணாமல் போய்விட்டது. தாமதமின்றி காவல்துறை விசாரணையில் இறங்குகிறது. சந்தேகத்தின் சாயல் பலரிடம் படர்ந்தாலும், அந்த மருத்துவமனையின் பணியாளர் சானல் மேத்யூ மீது குத்திட்டு நிற்கிறது. அதைச் செய்தியாக கசிந்து, அவனை குற்றவாளியாக சித்தரித்து அவனின் மனைவியையும் நிலை குலையச் செய்கிறது.
குழந்தை கிடைத்ததா, அந்த இளைஞன் சானல் மேத்யூ நிலை என்னவானது என்பதுதான், பாபி சஞ்சய் திரைக் கதையை, அருண் வர்மா இயக்கி, சோனி லைவ் தளத்தில் தமிழ் வசனங்களுடன் வெளியாகி உள்ள ‘பேபி கேர்ள்’ மலையாளத் திரைப்படத்தின் மொத்தக் கதை.
குழந்தை திருட்டு அல்லது காணாமல் போவது என்பது வழக்கமான ஒரு கதை என்றாலும், அதன் மீதான காவல்துறையின் அக்கறையும், அக்குழந்தையை கண்டுபிடிப்பதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளும், விறுவிறுப்பும் உணர்வுபூர்வமுமான திரைச் சித்திரமாக அமைந்திருப்பது, ஈர்ப்பைத் தருகிறது.
பணியில் சற்று அசிரத்தையாக இருந்ததால் பழிக்கு ஆளாகி தவிப்பதும், அதனை துடைத்து மீள்வதுடன் குழந்தையையும் கண்டுபிடிக்க வேண்டும் என்கிற ஆதங்கத்துடன் செயல்படுவதுமான மனோநிலையை நடிப்புத் திறனால் நிவின் பாலி ( சானல் மேத்யூ ) வெகுச் சிறப்பாகவே வெளிப்படுத்துகிறார்.
உயர் அதிகாரிகளின் ஏச்சு பேச்சுக்கு இலக்காகி அவமானப்படுத்தப்பட்டாலும், எடுத்துக் கொண்ட முயற்சியில் சற்றும் தளராமல் செயல்படும் காவல் சார் ஆய்வாளர் ராகேஷ் நாராயணனாக அபிமன்யு ஷம்மி திலகன், சகோதரியின் மேலுள்ள பாசத்தால் தவறுக்கு மேல் தவறாக செய்தாலும், அவள் மீதான அன்பைப் பொழியும் ரிஷியாக சங்கீத் பிரதாப், ஒரு பக்கம் மோசமான குணம் கொண்ட கணவன், இன்னொரு பக்கம் சொந்தக் குடும்பத்தில் ஆதரவற்ற நிலை, இதற்கிடையில் குழந்தை மீதான அபரிதமான பாசம் இவற்றுக்குள் ஊடாடும் மனநிலையுடன் ரிதுவாக லிஜோமால் ஜோஸ், தத்தம் பாத்திரப்படைப்பை முழுமையாக உள் வாங்கி, மிக அருமையாக வெளிப்படுத்தி உள்ளது பாராட்டுக்குரியது.
அஜீஸ் நெடுமங்காட் ( உதவி சார் ஆய்வாளர் அக்பர்), ஜாஃபர் இடுக்கி ( செக்யூரிட்டி சுகுமாரன்), அதிதி ரவி (மனைவி சினி), மைதிலி நாயர் (மீனாட்சி), அக்ஷய பிரசாந்த் (ஆகாஷ்) போன்ற துணைப் பாத்திரங்களும் நடிப்பில் சோடை போகவில்லை.
ஃபைஸ் சித்திக் ஒளிப்பதிவும், சிஎஸ் சாம் பின்னணி இசையும், ஷஜித் குமரன் படத்தொகுப்பும், படத்தின் விறுவிறுப்புக்கு பெரிதும் துணை நிற்கின்றன. என்றாலும், நீளத்தைச் சற்று குறைத்திருக்கலாம்.
குழந்தையை பறிகொடுத்தவர்கள், என்னதான் கொஞ்சம் வெறுப்பு இருந்தாலும், எந்தவித படபடப்பும் பரிதவிப்பும் இல்லாமல் காண்பதும், குழந்தை காணவில்லை என்று எச்சரிக்கை மணி ஒலித்ததும், முதலில் செய்ய வேண்டியது மருத்துவமனையில் இருந்து வெளியேறும் அனைத்து வாயிலையும் அடைப்பதுதான், அத்தனை பணியாளர்கள் இருந்தும் அவர்கள் எவரும் அதனை செய்யாததும், நெருடலாகத்தான் உள்ளன.
அதேபோன்று, குற்றவாளியை கண்டறிந்து குழந்தையை மீட்டிட ஒருபுறம் தீவிர அக்கறையோடு காவல்துறை செயல்பட்டாலும், இன்னொரு புறம் அந்தக் குழந்தை தொடர்பான பிரச்சனைகள் தொடர்பானவர்களுக்குள்ளேயே தீர்வு பெற்று விடுவதை காவல்துறை அறியாதிருப்பது வியப்பைத் தருகிறது !
எனினும், குழந்தை திருட்டு என்கிற கருவை, விறுவிறுப்பான திரை கதையாக்கி, நான்கு முதன்மை பாத்திரங்களின் சிறப்பான பங்களிப்பால், தொய்வையும் பொருட்படுத்தாமல், பார்க்கும்படி செய்திருப்பதற்காக இயக்குனர் அருண் வர்மாவை பாராட்டவே செய்யலாம்.
