‘மனிதன் தெய்வமாகலாம்‘திரைப்படம் இயக்குனர் “டென்னிஸ் மஞ்சுநாதன்” இயக்கத்தில் வெளிவந்த அவரது மூன்றாவது படம். ஒரு கிராமத்தின் வெளிப்படையான பிரச்சனையை மட்டுமல்லாமல் அதன் உள்ளார்ந்த சமூக அமைப்பு, மனித மனநிலை, பெண்களின் நிலை, அறியாமை, அதிகாரம் மற்றும் மனிதன் தெய்வமாக மாறும் தருணத்தைப் பற்றிய ஆழமான சமூக-தத்துவ திரைப்படமாக உருவாகியுள்ளது.
கதை ஒரு சாதாரண கிராமத்தை மையமாக கொண்டு தொடங்குகிறது. அந்த கிராமத்தில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, குறிப்பாக சாலை மற்றும் போக்குவரத்து வசதி இல்லாதது மக்கள் வாழ்க்கையை மெதுவாக அழித்து கொண்டிருக்கிறது. மக்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய அவஸ்தை, அவசர காலங்களில் மருத்துவ உதவி கிடைக்காத நிலை, பொருளாதார பின்னடைவு, கடன் வாங்க வேண்டிய கட்டாயம், வட்டி கட்ட முடியாமல் குடும்பங்களும் குறிப்பாக பெண்களும் அவமானத்திற்கும் அடக்குமுறைக்கும் ஆளாகும் நிலை போன்றவை அந்த ஊரில் சாதாரண வாழ்க்கையாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
மக்கள் இந்த பிரச்சனைகளை பிரச்சனையாகவே பார்க்காமல் “இது தான் வாழ்க்கை” என்று நினைத்து அறியாமையில் கடந்து செல்கிறார்கள். அந்த அறியாமையே அந்த ஊரை கட்டுப்படுத்தும் மறைமுக அதிகாரமாக மாறுகிறது.
இந்த சூழ்நிலையில் பல வருடங்களாக அந்த ஊரின் துயரத்தை மனதில் வைத்து வாழும் ஒரு பெரியவர் இருக்கிறார், அவர் அந்த ஊருக்காக பல முயற்சிகள் எடுத்து வருகிறார். அவர் எடுத்த முதல் படி அந்த ஊரின் உண்மையான முதல் கதாநாயகனின் முயற்சியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் மாற்றம் வேண்டுமென்ற எண்ணம் முதலில் அவரிடமே உருவாகிறது, ஆனால் அவர் எடுத்த முயற்சி மட்டும் போதவில்லை.
அந்த முயற்சி ஒரு தொடக்கம் மட்டுமே, அதற்குப் பிறகு இன்னும் கடுமையான முடிவு எடுக்க வேண்டும் என்று உணர்ந்து இரண்டாவது கதாநாயகனாக வரும் “செல்வராகவன்” அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். இதனால் கதை ஒரு முக்கியமான மாற்றத்தை அடைகிறது. இதனால் பெரியவர் முதல் கதாநாயகனாக இருந்தாலும் உண்மையான மாற்றத்தை உருவாக்கும் ரியல் கதாநாயகன் செல்வராகவன் என்பதைக் படம் மெதுவாக உணர்த்துகிறது.
அவர் கதாபாத்திரத்தில் வரும் நகைச்சுவை தருணங்கள், மனிதத் தன்மையுள்ள காதல், இயல்பான ரொமான்ஸ், சண்டை தெரியாத மனிதன் போல இருக்கும் ரியலிஸ்டிக் ஃபைட் காட்சிகள் அனைத்தும் ஹீரோயிசம் இல்லாத உண்மை மனிதரை காட்டுகிறது.இது படத்திற்கு ஒரு வின்டேஜ் அமைதியான காட்சியமைப்பை உருவாக்குகிறது.
இந்த கிராமத்தில் பெண்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதற்கான உயிருள்ள எடுத்துக்காட்டாக “கௌசல்யா” நடித்த கதாபாத்திரம் வருகிறது. அந்த ஊரில் பெண்கள் சந்திக்கும் தினசரி இழுவைகள், மன அழுத்தங்கள், பேச முடியாத வேதனைகள், ஏற்றுக்கொண்டு வாழும் மனநிலை ஆகியவற்றின் பிரதிநிதியாக அவர் இருக்கிறார். அதாவது அந்த ஊரில் பெண்கள் எல்லாரும் இப்படித்தான் அமைதியாக துன்பத்தை கடந்து செல்கிறார்கள் என்பதற்கான சின்னமாக “கௌசல்யா” மாறுகிறார்.
இந்த சமூகத்தில் மாற்றம் உள்ளிருந்து வர முடியாத நிலையில், வெளியிலிருந்து ஒருவர் வர வேண்டும் என்ற கருத்தை படம் வலுவாக முன்வைக்கிறது, அதற்கான வடிவமாக புதியதாக திருமணம் செய்து அந்த ஊருக்கு வரும் “குஷி ரவி” கதாநாயகி இருக்கிறார். ஊர் மக்களால் காப்பாற்ற முடியாத ஊரை வெளியில் இருந்து வந்த ஒரு பெண்ணே காப்பாற்ற முடியும் என்ற சின்னமாக அவர் உருவாக்கப்படுகிறார்.
ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்திருந்த அநீதிகளை யாரும் கேள்வி கேட்காத நிலையில் அவர் மட்டும் கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார். அந்த கேள்வியே மாற்றத்தின் விதையாக மாறுகிறது; ஆனால் அந்த மாற்றம் பெண் ஒருவரால் மட்டும் முடியாது. அந்த பெண் உருவாக்கும் விழிப்புணர்வு ஒரு ஆண் மனிதனின் செயலாக மாறும்போது தான் சமூக மாற்றம் நடக்கிறது என்பதை படம் காட்டுகிறது.
அதாவது கதாநாயகி மாற்றத்தின் காரணம், ஆனால் அந்த மாற்றத்தை செயலாக மாற்றி ஊரை காப்பாற்றும் ரியல் கதாநாயகன் செல்வராகவன் என்பதே படத்தின் அடிநாதமாகிறது.
வில்லன் அமைப்பை பிரதிபலிக்கும் “மீம் ரவி” நடித்த கதாபாத்திரம் அரசியல் அதிகாரம், பணப்பலம் மற்றும் சமூக கட்டுப்பாட்டின் உருவமாக இருந்து.மக்களின் அறியாமையை பயன்படுத்தி அநீதிகளை சாதாரணமாக்கும் சக்தியை காட்டுகிறது.
இந்த முழு கதையின் மிக ஆழமான குறியீடாக “அமுதா”என்ற சிறுமி இருக்கிறாள். அந்த ஊரில் பெண் குழந்தைகள் பிறக்கவே கூடாதென்ற மனநிலையை உருவாக்கிய சமூகத்தின் சின்னமாக அமுதா மாறுகிறாள். அந்த சிறுமியை ஊர் மக்கள் காப்பாற்ற முடியவில்லை என்பது அந்த சமூகத்தின் தோல்வி, அந்த இடத்தில் பிறப்பதே தவறு போல தோன்றும் நிலையை படம் உருவாக்குகிறது.
அதனால் அமுதா இந்த உலகத்தை ஏற்க மறுக்கும் ஒரு அமைதியான ஆன்மா போல சித்தரிக்கப்படுகிறாள். அடுத்த பிறவி கிடைத்தாலும் இந்த இடத்தை தேர்வு செய்யாமல் இருக்கலாம் என்ற ஒரு மறைசெய்தி போலவும் அது விளங்குகிறது, இது நேரடியாக சொல்லப்படாமல் ஒரு குறியீடாக மட்டுமே வைக்கப்பட்டுள்ளது.அதாவது ஒரு சமூகத்தில் பெண்கள் வாழ முடியாத நிலை உருவானால் அந்த சமூகத்தின் எதிர்காலமே அழிந்துவிடும் என்பதைக் படம் உணர்த்துகிறது.
பெரியவர் எடுத்த முதல் முயற்சி மாற்றத்தின் தொடக்கம், கதாநாயகி உருவாக்கிய கேள்வி விழிப்பு, செல்வராகவன் எடுத்த கடுமையான முடிவு செயல்பாடு — இந்த மூன்றும் சேர்ந்து தான் அந்த ஊரை காப்பாற்றுகிறது. இதன் மூலம் மனிதன் தெய்வமாக மாறுவது அற்புத சக்தியால் அல்ல, மனிதர்களுக்காக எடுத்த பொறுப்பான முடிவால் தான் என்பதே படத்தின் இறுதி கருத்தாகிறது.
திரைப்படம் ஆரம்பத்திலிருந்தே ஒரு சாதாரண கதை போல நகரவில்லை; சில விடுகதைகள் மூலம் பேசும் திரைப்படமாக அமைந்துள்ளது. படத்தின் பல இடங்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ விடுகதைகள் கேட்கப்படுகின்றன. ஆனால் அந்த விடுகதைகள் குழந்தைகளுக்கான விளையாட்டு அல்ல — சமூகத்தைப் பற்றிய கேள்விகள்.
அந்த விடுகதைகளை கேட்கும் மனிதன் செல்வராகவன் ; அவன் கேள்விகளை கேட்கிறவன் மட்டுமல்ல, அந்த கேள்விகளின் உண்மையான அர்த்தம் என்ன என்பதை உள்ளுக்குள் புரிந்துகொண்டவன்.
இந்த படத்தில் முக்கியமான விஷயம் என்னவென்றால், விடுகதை கேட்பவர்கள் நிறைய பேர் இருக்கலாம், ஆனால் பதில் தெரிந்தவர்கள் மிகவும் குறைவு. அந்த பதிலை உணர்ந்தவர்கள் மூன்று நிலைகளில் இருக்கிறார்கள்:
மாற்றத்தை தொடங்கும் பெண் என்ற வகையில் “குஷி ரவி”, இன்னும் மாசுபடாத உண்மையை உணரும் நிர்ப்பாவமான மனம் என்ற வகையில் “அமுதா” என்ற சிறுமி, மற்றும் அந்த உண்மையை செயலாக மாற்றும் மனிதன் செல்வராகவன்.
அதாவது படம் சொல்லும் கருத்து — விடுகதை என்பது வார்த்தைகளில் இல்ல, வாழ்க்கையில்தான் இருக்கிறது; கேள்வி எல்லாருக்கும் கேட்கிறது. ஆனால் பதில் தெரிந்தவர்கள் மட்டும் செயல்படுகிறார்கள். குஷி ரவிக்கு அந்த சமூக அநீதியின் பதில் தெரியும் என்பதால் அவள் கேள்வி கேட்கிறாள்; அமுதாவுக்கு அந்த உலகம் ஏன் தன்னை ஏற்கவில்லை என்ற உணர்வு இருக்கிறது என்பதால் அவள் அமைதியான பதிலாக மாறுகிறாள்; செல்வராகவன் அந்த விடுகதையின் முழு அர்த்தத்தை புரிந்துகொண்டதால் இறுதியில் செயல் எடுக்கும் மனிதனாக மாறுகிறான்.
பெண்கள் இல்லாத ஊர் ஊராக இருக்காது, பெண்களை காப்பாற்றுபவனே தெய்வம், எதிர்காலத்தை காப்பாற்றுபவனே தெய்வம். ஒரு ஊரை வீட்டாக பார்க்க வேண்டும், ஊரில் நடக்கும் அநீதிகளை அறியாமையால் கடந்து போகக்கூடாது, சமூக அமைதியின் பெயரில் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்களை சாதாரணமாக ஏற்கக் கூடாது என்பதைக் நினைவூட்டும் வலுவான சமூக விழிப்பு திரைப்படமாக மனிதன் தெய்வமாகலாம் திகழ்கிறது.
இறுதியில் இந்த படம் சொல்ல வருவது மிகவும் எளிமையான ஆனால் ஆழமான உண்மை — தெய்வம் வெளியில் இல்லை, ஒரு மனிதன் மற்ற மனிதர்களின் வாழ்க்கையை காப்பாற்ற முடிவு எடுக்கும் அந்த நொடியிலேயே மனிதன் தெய்வமாகிறான்.
