Lingam JioHotstar

தெற்கத்தி டெர்மினேடர் என்று சொல்லப்பட்ட லிங்கத்தின் கதை – வெப்சீரிஸ் – ஹாட்ஸ்டார்.

10 / 100 SEO Score

தெற்கத்தி டெர்மினேடர் என்று சொல்லப்பட்ட லிங்கத்தின் கதை. கதை எனக்கு ஏற்கனவே தெரிந்த போதிலும் இந்தத் திரைக்கதையும் இயக்கமும் சாலச்சிறப்பாக அமைந்து எங்குமே அலுப்புதட்டவில்லை. நிறுத்தி நிதானமாக சொல்ல வந்த கதையைத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்கள்.

“இயக்கம் : எழுத்தாளர், லக்ஷ்மி சரவணக்குமார்.”

தொடர் ஆரம்பித்ததுமே ஆறு நிமிடங்களுக்கு நீள்கின்ற சிங்கிள் ஷாட் உத்தி காண்போரை கதைக்குள் இழுத்துக் கொள்கிறது.. லிங்கம், அவனுக்கொரு காதலி, எதிர்காலக் கனவு, நண்பன், நண்பனின் குடும்பத்தில் அவனொரு அங்கம், என அமைதியாக ஆரம்பிக்கின்ற கதை, அவனின் கனவு கலைந்து, வீண்பழி சுமந்து, மெதுமெதுவாக வேறு வழியேயின்றி வன்முறையின் பாதைக்கு தள்ளப்படுகிறான். அடுத்தவர்களின் பயத்தில் பெருகுகின்ற மரியாதையும் மமதையும் எத்தகைய அழிவுகளுக்கு இட்டுச் செல்லும் என்பதை, துணிச்சல் என்கிற பெயரில் எத்தனை பேருக்கு பகடைக்காயாக ஆவோம் என்பதை லிங்கத்தின் எழுச்சியை வைத்தே எழுதி இருக்கிறார் இயக்குனர. இலக்கியவாதி இயக்குனர் ஆவதின் அனுகூலங்கள் இவை. ஏனெனில் இந்தத் தொடர் முழுக்க முழுக்க நாயகத் துதிபாடும் தொடராக மாறியிருக்க வேண்டியது. லிங்கத்தின் ஆகிருதியை முன்வைத்தே வளர்ந்திருக்க வேண்டியது. அதனைச் செப்பனிட்டு வாழ்வின் அழிவுகளை முன்னிலைப் படுத்தியதால்தான் கவனிக்கத்தக்க தொடராக ஆகியிருக்கிறது.

லிங்கத்தின் மீது கொலைப்பழி விழுந்த பிறகு, கடைக்காரர் அவனிடம் பணம் வாங்க மறுப்பது, “நாயகன்” திரைப்படத்தின் “இனிமே அப்படிதான்” காட்சியின் இன்னொரு வெர்சன். அவன் முதலில் இப்படி என்னை யாரும் அச்சமாகப் பார்க்காதீர்கள் என்றுதான் கோபப்படுகிறான். பிறகு அந்த அச்சத்தின் ருசிக்குப் பழகிவிடுகிறான்,

இன்னொரு சமயத்தில் ஊரில் பெரிய தலைக்கட்டான அண்ணாச்சியின் ஆட்களை லிங்கம் அடித்துவிட அண்ணாச்சிக்கு அது அவமானமாகி விடுகிறது, லிங்கத்தை அழைத்து ஆனமட்டும் அடித்துத்துவைத்து அனுப்பும்போது, இடுப்பில் சொருகி வைத்திருந்த கத்தியை எடுத்து கீழே போடுவான். நான் அனுமதித்ததால்தான் உங்களால் என்னை அடிக்க முடிந்தது இல்லையென்றால் முடியாது என்பது போலான ஸ்டேட்மென்ட். புதுப்பேட்டையில் அழகம்பெருமாளிடம் தனுஷ் வாள்கத்தியை உருவுகின்ற காட்சியின் இன்னொரு வெர்சன். That “இந்தக் கத்தியை வச்சிக்கிட்டாடா என்கிட்ட அடிவாங்கிட்டு இருந்த”

வேறு சில திரைப்படங்களும் நினைவுக்கு வந்தன, அவையெல்லாம் லிங்கத்தின் கதையைக் கேள்விப்பட்டு அதிலிருந்து இன்ஸ்பைர் ஆகி எழுதப்பட்டவை என்பதால் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.

கதைக்குள் இரண்டு காதல் இருக்கிறது, லிங்கத்தின் காதல், திரு-வின் காதல், எனக்கு திரு-வின் காதலியைத் தான் பிடித்தது, இரண்டு காதலிகளிடமுமே ஒரு நேர்மையும் சுயமரியாதையும் இருக்கிறது. திரு-வின் காதலிக்கு சற்றே அதிகமாக! அதனால் தான் அவள் திரு-வை பிரிவாள்.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்தத் தொடரில் உணர்வுப் பூர்வங்கள் மிக நன்றாகத் தொழில்பட்டிருக்கின்றன. நண்பன் திரு-வின் வீட்டோடு லிங்கத்தின் உறவு, ஒரு நிலையில் லிங்கமும் திரு-வும் எதிரெதிராக முட்டிக்கொண்டு நிற்க இருவருக்குமே எதுவும் ஆகிவிடக் கூடாதென இருவீட்டாருமே பதைபதைப்பது. திருவின் அம்மா தனது மூத்த பிள்ளை துரையை விட்டுவிடச் சொல்லி லிங்கத்திடம் கெஞ்சுவது. இறுதியில் அம்மாவே லிங்கத்தின் தலை வேண்டுமெனக் கேட்பது. பகை வளர்வது. என சூழ்நிலை உண்டாக்கிய சுழலுக்குள் அனைவரும் சிக்கிக் கொள்கிறார்கள்.

இது பருவம் ஒன்று. இதில் முழுக்க லிங்கத்தின் எழுச்சியும், நண்பன் திரு-வுடன் பகைமை வளர்வதும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இரண்டாவது பருவத்தில் லிங்கமும் திரு-வும் ஆடிக்கொண்ட பகையாட்டம் இருக்கும்.

வன்முறையும் வசைச்சொற்களும் மிகுந்திருக்கும் தொடர் என்பதைக் கவனத்தில் கொண்டு காணவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top