வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடி இனமான நாயாடிகள் உயர் சமூகத்தினாராலும் கொடிய மிருகங்களாலும் தொல்லைக்கு ஆளாகின்றனர். இதனால் தங்களை பாதுகாத்துக் கொள்ள பில்லி சூனியம், கூடு விட்டு கூடு பாயும் சக்தி போன்ற மந்திர தந்திரங்களை கற்றுக் கொள்கிறார்கள்.
இருந்தாலும் நாயாடிகள் அழிக்கப் படுவது மட்டும் நிற்கவே இல்லை. இந்நிலையில் காட்டுக்குள் மறைந்து வாழும் நாயாடிப் பெண்ணை வேட்டைக்கு வரும் மன்னர் பார்த்து அவரது அழகில் மயங்கி விடுகிறார்.
பின்னர் அந்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டு காட்டுக்குளேயே அரண்மனையை உருவாக்கி அங்கேயே வாழ்ந்து வருகிறார். மனிதர்களை பிடித்து வந்து இருவரும் ஒன்றாக நரபலி கொடுக்கின்றனர்.
இதனால் பொங்கி எழுந்த மக்கள் அவர்களை அரண்மனையிலேயே வைத்து எரித்து விடுகின்றனர். தற்போது நாயாடியை எரித்த இடத்தில் ரிசார்ட் ஒன்றை கட்ட ஒருவர் திட்டமிடுகிறார்.
அந்த இடத்தில் அமானுஷ்ய மற்றும் துஷ்ட சக்திகள் இருக்கிறதா என்று கண்டு பிடித்து கூறும் படி பட்டணத்தில் யூடியூப் சேனல் நடத்தி வரும் ஆதர்ஷ் மற்றும் அவர்களது நண்பர்களை அந்த நபர் அணுகுகிறார்.
வருமானம் இல்லாமல் இருக்கும் அவர்களும் பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த காட்டிற்குள் செல்கிறார்கள். அந்த இடத்தில் அமானுஷ்ய சக்திகள் இருப்பதை அவர்கள் உணர்கிறார்கள். அந்த அமானுஷ்ய சக்திகளால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. அதில் சிலர் இறந்து விடுகிறார்கள்.
ஆதர்ஷ் மற்றும் மீதி நண்பர்கள் அந்த இடத்தில் இருந்து தப்பினார்களா இவர்களை குறி வைத்து அந்த காட்டிற்குள் வரவழைத்ததன் பின்னணி என்ன இறுதியில் நடந்தது என்ன என்பது தான் படத்தின் மீதிக் கதை.
நாயகனாக ஆதர்ஷ் நாயகியாக காதம்பரி இருவரும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்கள்.
படத்தில் நடித்த பிற கலைஞர்கள் நிவாஸ்,பபின், ரவிச்சந்திரன்,கீதா லட்சுமி,அரவிந்தசாமி ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளனர்.
பின்னணி இசை படத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் வனப் பகுதிகளை அழகாக படமாக்கி கண்களுக்கு விருந்து படைத்துள்ளார்.
இயக்குனர் ஆதர்ஷ் மதிகாந்தம் படத்தின் ஆரம்ப காட்சிகளை மெதுவாக நகர்த்தி இருக்கிறார். அமானுஷ்ய சக்திகளால் நண்பர்கள் சிலர் கொல்லப்படும் காட்சிகள் பதைபதைக்க வைக்கிறது.
இரண்டாம் பாதியில் அமானுஷ்ய உருவம், திடீர் தீ பற்றுவது, காட்டில் இருந்து தப்பிக்க முயலும் போது ஒவ்வொரு முறையும் புறப்பட்ட இடத்திற்கே வந்து நிற்பது என படம் விறுவிறுப்பாக செல்கிறது.
கிளைமாக்ஸ் யாரும் எதிர்பார்க்காத ஒன்று.
மொத்தத்தில் திரைக்கதையில் கூடுதல் கவனத்தை செலுத்தி இயக்கி இருந்தால் படம் சிறப்பாக இருந்திருக்கும்.
படத்தை காண விருப்பமுள்ளவர்கள் AP international OTT ல் காணலாம்.
