K.Bhagyaraj

காலத்தின் கண்ணாடி மட்டுமல்ல… நிகழ்காலத்திற்கு சாட்சியும் கூட… பாக்யராஜ் திரைபயணம்!

6 / 100 SEO Score

அப்படி ஒரு கண்ணாடியாகத் தன் சினிமாவை அமைப்பவர்கள் ஒரு சில இயக்குநர்கள்தான். சிலர் தங்களின் கடந்த காலத்தை நிகழ்காலத்தில் படம்பிடித்துக் காட்டுவது ஒரு வகை. சுப்ரமணியபுரம் படத்தில் 80-களின் காலத்தை காட்டியது போல்.

ஆனால் உண்மையான 80-களின் காலம் எப்படி இருந்தது? இதைக் காட்டிய இயக்குநர்களில் தலையானவர் என்று சொன்னால் அவர் பாக்யராஜ்.

சுவரில்லாத சித்திரங்கள் என்கிற படம். அதில் கவுண்டமணி ஒரு பெட்டிக்கடை தையலகம் வைத்திருப்பார். இந்த பெட்டிக்கடைகள் 80-களில் ஒவ்வொரு சிறு நகரங்களிலும் காணப்பட்டன. வெற்றிலை-பாக்குக் கடை, தையற்கடை, லாட்டரிச் சீட்டுக்கடை, பூக்கடை என பல கடைகள் இயங்கி வந்தன. பின்னாளில், 1985-க்குப் பிறகு அரசே Snack Kiosk என்கிற ஸ்டீல் பெட்டிகளை அமைத்து, ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் வைத்து உணவுகளைப் பரிமாறச் செய்தது. பாக்யராஜ் அந்தப் படத்தில் வைத்த ஒரு செட் பிராப்பர்ட்டிதான் 80-களின் வாழ்க்கையில் சிலருக்கு ஆதாரமாக இருக்கிறது.

தூறல் நின்னு போச்சு படத்தை எடுத்துக்கொள்வோம். இதுபோல ஒரு கிளாசிக் படத்தைப் பார்க்கவே முடியாது. இதில் பெண் பார்க்க பாக்யராஜ் தனது டிராக்டரில் பெற்றோர், உறவினர்களை அழைத்து வருவார். ஒவ்வொரு நிலச்சுவான்தார் வீட்டிலும் மோட்டார் வாகனம் என்றால் டிராக்டர்தான். அதுபோல எத்தனை கி.மீ. ஆனாலும் வாலிபர்களுக்குச் சைக்கிள் பயணம்தான். கிராமங்களில் சைக்கிளுக்கு அழகான குஞ்சங்கள் தொங்கும் கைப்பிடிகள், சைக்கிள் சக்கரக் கம்பிகளுக்குள் மணியைக் கோர்த்து வைத்து, சக்கரம் சுழலும் போது மணி எழுப்பும் ஓசைக்காக அன்றைய வாலிப அண்ணாக்கள் செய்த அழகு இன்றைய கே.டி.எம். பைக்குக்குக்கூட கிடையாது.

இதில் வேறொரு விஷயம், சைக்கிளுக்கு ஆயில் போடும் சிறிய ஆயில் கன். அதை நகைச்சுவை நடிகர் சிவராமன் கையில் ஊற்றி முகத்தில் பூசச் சொல்வார் பாக்யராஜ்.

பாக்யராஜ் சுலக்ஷணாவைச் சந்திக்க வரும் போது அந்த ஊரில் நம்பியார் சிலம்பப் பயிற்சிக்கூடம் வைத்திருப்பார். கிராமங்களில் பள்ளி வாத்தியாரோடு, சிலம்ப வாத்தியார், கூத்து வாத்தியார் என பல கலைகளும் அன்றைய கிராமங்களில் இருந்தன. இந்த சிலம்ப வாத்தியார் நம்பியார்தான் ஊருக்குள் மருத்துவரும்கூட. தடுக்கி விழுந்தால் மருத்துவமனைகள் இருக்கும் இன்றைய காலகட்டத்தில், நமக்குத் தெரியாத ஒன்று கிராம வைத்தியர் தரும் ஒரே வேளை மருந்தில் வைரஸ் காய்ச்சலே ஓடிவிடும். இதே நேரத்தில் அரசே கிராமத்துக்குக் கிராமம் நோயாளிகளைச் சென்று பார்க்க செவிலியர்களை நியமித்ததும் உண்டு. புதிய வார்ப்புகள் படத்தில் உஷா போல.

பெரும் நிலம் வைத்து விவசாயம் செய்பவர்களுக்கு பெரும் தொந்தரவு பன்றிகள். இரவில் அவை உள்ளே நுழைந்து பயிரை நாசம் செய்துவிடும். 80-களின் விவசாயிகள் மின்சார வேலி அமைத்து, இரவு ஒன்பது மணிக்கு ஊர் அடங்கியதும் அந்த மின் பவரை ஆன் செய்துவிடுவர். அதிகாலையில் ஆஃப் செய்துவிட்டு, பன்றி அடிபட்டிருக்கிறதா என்று வேலியைச் சுற்றித் தேடுவதுண்டு. பாக்யராஜ் சுலக்ஷணாவுடன் ஓடிப்போகத் தீர்மானித்து மின் வேலியில் கை வைத்து ஷாக் அடித்து விழுந்துவிடுவார். ஒரு சமூகச் சூழல் நாயகனின் காதலுக்கு வில்லனாக அமைந்தது பாக்யராஜின் அற்புதச் சிந்தனை. இதைத் தாண்டி இப்படி ஒரு பழக்கம் இருந்ததை நாற்பது ஆண்டுகள் கழித்து நமக்கு ஆதாரமாக இருக்கிறது என்பது பெரிய விஷயம்.

முந்தானை முடிச்சு படத்தில் பாக்யராஜ் படிக்கும் பள்ளிக்குச் சத்துணவு வரும். அன்றைய நாட்களில் இன்று போல் பள்ளியிலேயே சமைக்கும் ஆயாக்கள் கிடையாது. ஒரு இடத்தில் சமைத்து எல்லாப் பள்ளிகளுக்கும் சப்ளை செய்வார்கள். அந்த சத்துணவைத்தான் டிரைவர் நளினிகாந்த் ஒரு ஹோட்டலுக்கு விற்றுக் காசு வாங்குவார். அன்றைய அரசு ஊழியரின் ஊழல் அப்படி. சத்துணவுத் திட்டம் இருந்ததும், இப்படி எல்லாப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டதும், அதை வாங்கி விற்றுக் காசு பார்த்த ஹோட்டல் முதலாளிகளும் இருந்தனர் என்பதற்கு அழகான சாட்சியம் இப்படம். நளினிகாந்துக்கும் பாக்யராஜுக்கும் நடக்கும் சண்டைக் காட்சி நமக்குத் தெரிவிப்பது, சாப்பாட்டில்கூட திருட தயங்க மாட்டான் நம் ஆள் என்பதே.

அதே முந்தானை முடிச்சு படத்தில் தீபா ஒரு ஆசிரியை. ஈராசிரியர் பள்ளி போல. அன்று கிராமங்களில் “அனைவருக்கும் கல்வி” என்கிற திட்டத்தில் மாணவரல்லாத, படிக்காத வயதானவர்களுக்காக இரவு வகுப்புகள் நடத்தப்பட்டன. படிக்காத வயதானவர்களை வகுப்புக்கு அழைத்து, எழுதவும் படிக்கவும் கற்றுக்கொடுக்க அரசு எடுத்த முயற்சி, நாம் தமிழர்களை நூறு சதவீதம் படித்தவர்களாக்க எவ்வளவு முயற்சிகளை கடந்துவந்திருக்கிறோம் என்பதைப் பறைசாற்றுகிறது. இன்றைய சி.பி.எஸ்.இ. பள்ளிக் குழந்தைகளுக்கு இப்படியும் பள்ளிகளும், ஆசிரியர்களும், திட்டங்களும் இருந்தன என்று சொன்னால் நம்புவார்களா?

ஊர்வசி போன்ற வயதில் மூத்த, வயதுக்கு வந்த “தடிப்பய மாதிரி சுத்துறா” பெண்கள் சிறுவர்களோடு ஆடு, மாடு மேய்க்க, மாங்காய் அடிக்க, கம்மாய்க்கரை, வாய்க்கால் வரப்பெல்லாம் சுற்றி வருவதெல்லாம் இன்று நடக்குமா? ரோட்டில் குழி தோண்டி, இலை வைத்து மூடி, அதில் எல்லோரையும் விழ வைக்க கிராமங்களில் சிறுவர்கள் செய்யும் அந்தக் குறும்புதான் எவ்வளவு அழகு! ஒவ்வொரு கிராமத்திலும் அன்று மழலைப்பட்டாளங்கள் மாலை ஆறு மணியானால் அடிக்கும் கூத்துகள் அடடா…

இன்னும் நிறைய சொல்லலாம். பாக்யராஜ் என்கிற கலைஞன் ஏதோ சினிமா எடுத்தான், நடனமாடினான், காசு பார்த்தான் என்று சொல்வதைவிட, அவர் படங்களில் அவருக்கே தெரியாமல் வைத்த காலக்கண்ணாடிகள் எத்தனை, எத்தனை!

எத்தனையோ இயக்குநர்கள் இருந்தும், நூறு படங்களுக்கு மேல் எடுத்தும், இதுபோன்ற ஒரு காலக்கண்ணாடியாகத் திரையைக் காட்ட முடியவில்லையே. இதே பாக்யராஜ்கூட பின்னாளில் தன்னை முன்னிலைப்படுத்தி நாயகனான போது இந்த சமாச்சாரங்களை மறந்துபோனார்.

ஆனாலும் அவரின் ஆரம்பகாலப் படங்களை யார் பார்த்தாலும், சமூகச் சூழல் அன்று இப்படி இருந்ததா என்று ஆச்சரியப்படுவார்கள். 80-க்கு முன்பும் 50 ஆண்டுகள் தமிழ் சினிமா இருந்தது. அப்போதும்கூட இதுபோன்ற நிகழ்காலத்திற்குச் சாட்சியாக இருக்கும் படங்கள் இல்லை என்பதும் துரதிர்ஷ்டம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top