திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்று நடிகரும் சமூக சேவகருமான ராகவா லாரன்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அவர் திருச்சி கிழக்கில் களமிறங்க உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தனது எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் இதுகுறித்து விரிவாக பேசியுள்ளார்.
“எம்.எல்.ஏ சார்” என அழைக்கும் மக்களுக்கு நன்றி
வீடியோவில் பேசிய ராகவா லாரன்ஸ், படப்பிடிப்புக்காக செல்லும் இடமெல்லாம், “திருச்சி கிழக்கில் நீங்கள் நிற்க வேண்டும்”, “வாங்க எம்.எல்.ஏ சார்” என்று மக்கள் அன்புடன் அழைப்பதாக குறிப்பிட்டார். அந்த அன்புக்கு நன்றி தெரிவித்த அவர், அரசியலில் ஒரு தர்மம் இருப்பதாகவும், அதையே தான் கடைபிடிக்க விரும்புவதாகவும் கூறினார்.
விஜய் தொண்டர்களின் உழைப்பை மதிக்க வேண்டும்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஹீரோவாக இருந்த காலத்திலிருந்தே அவருக்காக உழைத்த ஆரம்பகால தொண்டர்கள் ஏராளமாக உள்ளனர். கட்சி தொடங்கிய பிறகும் அடிமட்டத்தில் இருந்து உழைத்து வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் உழைப்பை மதிக்க வேண்டும் என்றும், திருச்சி கிழக்கு தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது முழுமையாக விஜய்யின் முடிவு என்றும் லாரன்ஸ் தெரிவித்தார்.
மேலும், “அவர் யாரை வேட்பாளராக அறிவித்தாலும், மக்கள் விஜய்யின் முகத்திற்காகவே வாக்களிப்பார்கள். அந்த இடத்தில் நான் நேரடியாக சென்று நிற்பது அரசியல் தர்மத்திற்கு ஏற்றதல்ல” என்று கூறினார்.
“விதை போட்டவருக்கே பலன் கிடைக்க வேண்டும்”
அரசியலை ஒரு மரத்துடன் ஒப்பிட்ட லாரன்ஸ், “யாரோ ஒருவர் விதை போட்டு, செடியை வளர்த்து, மரமாக்கி, அது கனியளிக்கும் நேரத்தில் அந்தப் பழத்தை நான் பறித்துக் கொள்ள முடியாது. விதை போட்டவருக்கே அதன் பலன் கிடைக்க வேண்டும். அதுதான் அரசியல் தர்மம்” என்று விளக்கினார்.
முதலில் உறுப்பினர்… பிறகு பொறுப்பு
அரசியலுக்கு வர வேண்டுமென்றால் முதலில் ஒரு சாதாரண உறுப்பினராக கட்சியில் சேர வேண்டும் என்றும், குறைந்தது மூன்று முதல் நான்கு ஆண்டுகள் கட்சிக்காக உழைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
“கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே என்பதுதான் என் கொள்கை. உழைப்பை பார்த்து கட்சித் தலைமை ஒரு பொறுப்பை வழங்கினால், அதன் மூலம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அதுதான் சரியான அரசியல் பாதை” என்றார்.
Do your duty. Don’t expect anything in return.
— Raghava Lawrence (@offl_Lawrence) June 30, 2026
As announced earlier, here is my clarification regarding the Trichy election and my recent press meet.
Thank you all for your love and support 🙏🏼#serviceisgod pic.twitter.com/JlIlkxVKdr
விஜய்யிடம் உதவி கேட்க விருப்பம்
அரசியல் பதவியை விட சமூக சேவையே தனது முன்னுரிமை எனக் கூறிய லாரன்ஸ், கடந்த காலத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தற்போதைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரிடம் சமூக நலத்திட்டங்களுக்காக உதவி பெற்ற அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.
அதேபோல், “நடிகராக இருந்தபோதே பல குழந்தைகளுக்கு உதவி செய்த விஜய், நாளை முதல்வராக வந்தால் இன்னும் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு உதவ முடியும். அந்த உரிமையோடு அவரிடம் உதவி கேட்க விரும்புகிறேன். அவர் உதவினால் அதை வெளிப்படையாக மக்களிடம் கூறுவேன்” என்றும் தெரிவித்தார்.
“திருச்சி கிழக்கில் மட்டும் இல்லை… எதிர்கால அரசியலுக்கு வாய்ப்பு”
இறுதியாக, “நான் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்றுதான் கூறுகிறேன். அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்லவில்லை. அரசியல் தர்மத்தையும் பொறுமையையும் கடைபிடித்து, சரியான நேரத்தில் அரசியலுக்கு வருவேன்” என்று ராகவா லாரன்ஸ் தனது விளக்கத்தை நிறைவு செய்தார்.
