தமிழ் திரைப்படப் பாடல்களில் பழமொழிகளும் சொலவடைகளும் பயன்படுத்தப்படும் விதம் எப்போதும் ரசிக்கத்தக்க ஒரு அம்சமாகவே இருந்து வருகிறது. தத்துவம், காதல், நகைச்சுவை, சோகம், கேலி, கிண்டல் என எந்த உணர்வை எடுத்துக்கொண்டாலும், அதற்குள் ஒரு பழமொழியையோ சொலவடையையோ நயமாக நுழைத்து பாடலாசிரியர்கள் பாடலுக்கு தனி சுவை சேர்த்திருப்பதை கவனிக்கலாம்.
உதாரணமாக, பாமா விஜயம் திரைப்படத்தின் ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ பாடலில் அன்றாட வாழ்க்கைச் சிக்கலை நகைச்சுவைத் தொனியில் சொல்வதற்காக பழமொழி நயமாகப் பயன்படுத்தப்படுகிறது. வாழ்வே மாயம் திரைப்படத்தின் ‘தேவி ஸ்ரீதேவி’ பாடலில் வரும் ‘எடத்த கொடுத்தா மடத்த புடிப்ப’ என்ற வரியும், திருமதி பழனிச்சாமி திரைப்படத்தின் ‘ரெண்டுல நீ ஒண்ணத் தொடு மாமா’ பாடலில் வரும் ‘தும்பவிட்டு வாலத் தொடலாமா’ என்ற வரியும் குறும்பும் கேலியும் கலந்த சொல்வேலையை வெளிப்படுத்துகின்றன.
அதேபோல் அண்ணாமலை திரைப்படத்தின் ‘ஒரு பெண்புறா’ பாடலில் வரும் ‘கோழி மிதிச்சி குஞ்சு சாகுமா?’ என்ற வரி தத்துவார்த்தமான கேள்வியாக ஒலிக்கிறது. டும் டும் டும் திரைப்படத்தின் ‘தேசிங்கு ராஜா’ பாடலில் ‘சுண்டக்காயி எட்டணா, சொமக்கூலி பத்தணா’, ‘சும்மா ஆடாதே சோழியன் குடுமி’ போன்ற சொலவடைகள் கேலி, கிண்டல் கலந்த மகிழ்ச்சியான பாவிப்பை நினைவூட்டுகின்றன.
இப்படியாக திரைப்பாடல்களில் பழமொழிகளையும் சொலவடைகளையும் பயன்படுத்தியவர்கள் கண்ணதாசன், வாலி, வைரமுத்து, நா.முத்துக்குமார் உள்ளிட்ட பல முக்கிய பாடலாசிரியர்கள். ஆனால், இந்தப் பாணியை தனக்கே உரிய அடையாளமாக மாற்றியவர் யார் என்றால், தயக்கமின்றி டி. ராஜேந்தர் பெயரையே சொல்லலாம்.
டி. ராஜேந்தரின் பாடல்களை கவனித்துப் பார்த்தால், பழமொழிகளை பாடலுக்குள் புகுத்துவது என்பது அவரிடம் ஒரு திட்டமிட்ட பாணியாகவே இருந்திருக்கலாம் என்று தோன்றும். கடவுள் வாழும் கோவிலிலே பாடலில் வரும் ‘கண்கெட்ட பிறகு சூரிய உதயம்’, கட்டடிப்போம் கட்டடிப்போம் காலேஜுக்கு பாடலில் வரும் ‘அவள நினைச்சு உரல இடிச்ச கதையப் போல’ போன்ற வரிகள் இதற்குச் சான்று.
அதிலும் ஒரு தாயின் சபதம் திரைப்படப் பாடல்களை எடுத்துக்கொண்டால், இந்த சொல்விளையாட்டு இன்னும் தெளிவாகத் தெரியும். ‘சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது’ பாடலில் ‘பூனைக்கு மணிய கட்டுறது யாரு?’ என்றும், ‘ராக்கோழி கூவயில’ பாடலில் ‘கொஞ்சம் எடத்தத்தான் விட்டுப்புட்டா மெல்ல மடத்தத்தான் புடிப்பீங்களே’ என்றும், ‘திருமணந்தான் நடக்குதுங்க’ பாடலில் ‘கல்யாணந்தான் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுதாம்’ என்றும் பல சொலவடைகள் வரிசையாக இடம்பெறுகின்றன.
அதேபோல் என் தங்கை கல்யாணி திரைப்படத்தின் ‘போட்டானே மூணு முடிச்சித்தான்’ பாடலை எடுத்துக்கொண்டால், அது முழுக்க முழுக்க பழமொழிகளும் சொலவடைகளும் பின்னிப் பிணைந்த ஒரு பாடலாகவே தோன்றும். ‘நாய் வாலுன்னு நிமித்த பாத்தது’, ‘பெத்த மனம் பித்துடா, பிள்ளை மனம் கல்லுடா’, ‘புடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு’, ‘பெண் புத்தி பின் புத்திதான்’, ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ போன்ற வரிகள் அனைத்தும் பாடலின் உடலாகவே மாறிவிடுகின்றன. இதனால், பழமொழிகளை வெறும் அலங்காரமாக அல்லாமல், பாடலின் மையக் குரலாகவே பயன்படுத்தியவர் டி.ஆர். என்ற எண்ணம் வலுப்பெறுகிறது.
மேலும், ஒளவையாரின் ‘மதியாதார் தலைவாசல் மிதியாதே’ என்ற வாக்கின் பொருளை நினைவூட்டும் விதமாக, ‘வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது’ பாடலில் வரும் ‘அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்’ என்ற வரி குறிப்பிடத்தக்கது. ஒரு தலைக்காதலில் அலையும் மனநிலையைச் சொல்ல இந்தப் பழமொழி சாயலைப் பயன்படுத்திய விதம் டி. ராஜேந்தரின் சொற்பயன்பாட்டுத் திறனை நினைவுபடுத்துகிறது.
தமிழ் திரையிசைப் பாடல்களில் பழமொழிகளும் சொலவடைகளும் வெறும் வார்த்தை விளையாட்டு அல்ல. அவை பாடலுக்கு மண்ணின் மணத்தையும், மக்கள் மொழியின் நெருக்கத்தையும், அன்றாட வாழ்க்கையின் அனுபவச் சுவையையும் சேர்க்கும் கருவிகள். அதனால்தான் இத்தகைய வரிகள் பல ஆண்டுகள் கடந்தும் நம் நினைவில் நிலைத்திருக்கின்றன.
இப்படியாக, தமிழ் திரைப்படப் பாடல்களில் நீங்கள் கவனித்த பழமொழிகள் அல்லது சொலவடைகள் இடம்பெற்ற பாடல்கள் என்னென்ன? நினைவில் நிற்கும் பாடல்களையும் வரிகளையும் பகிருங்கள். சேர்த்து தொகுத்து வைத்தால், அது தமிழ் திரைப்பாடல்களின் ஒரு சுவாரஸ்யமான பட்டியலாக மாறலாம்.
