படத்தில் நடிப்பின் தாக்கம் கொஞ்சம் அதிகமாக இருந்திருக்கும். ஆனால், அது கமலின் வழக்கமான வெற்றிப் படங்களில் ஒன்றாகவே இருந்திருக்கும்.
இப்படி யோசித்துப் பாருங்கள். தேவர் மகன் படத்தில் ரஜினி நடித்திருந்தால் எப்படி இருக்கும்? ரஜினி நன்றாகவே நடித்தாலும், படம் வெற்றி பெற்றாலும், அந்தப் படத்திற்குக் கிடைத்த சிறப்பைப் பெற்றிருக்க முடியாது. அதுபோலத்தான் பாட்ஷா படமும். பாட்ஷா படம் முழுக்கவும் ரஜினிக்காகவே உருவாக்கப்பட்டது. கமல் உள்ளிட்ட எந்த நடிகர் நடித்தாலும், அது ரஜினியின் நடிப்பைப் போல வராது. ஆயினும், கமல் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
பாட்ஷா படத்தைப் பார்த்தால், அதில் மிகப்பெரிய லாஜிக் ஓட்டைகள் இருக்கும். கமல் அந்த லாஜிக் ஓட்டைகள் இல்லாமல், தெளிவாக அடைத்திருப்பார். பல நடிகர்களும் மாறியிருப்பார்கள்.
ஆட்டோக்காரன் பாடல் மட்டும் மாறியிருக்காது. கமலும் அது போன்ற பாடல்களில் ஆடியுள்ளார்.
பாட்ஷாவாக ரஜினி தாடி வைத்திருப்பார். கமலுக்கு வெறும் தாடி மட்டும் பொருத்தமாக இருக்காது. அதனால், அவர் சத்யா படத்தில் வந்தது போன்ற கெட்டப்பில் வந்திருப்பார்.
மாணிக்கம் – மாணிக் பாட்ஷா ஆன கதையில் எந்தவித அழுத்தமும் இருக்காது. திரைப்படத்தில் இடையில் சொருகப்பட்ட விளம்பரக் காட்சியைப் போல, சிறிதும் ஒட்டாமலும் அழுத்தம் இல்லாமலும் இருக்கும். அந்த நண்பருக்காக ரஜினி தாதாவாக மாற வேண்டிய அவசியம் இருக்காது. சரண் நல்ல நடிகர் என்றாலும், அந்தக் கதாபாத்திரத்தில் போதிய அழுத்தம் இல்லை. இந்த இடத்தில் கமல் ஸ்கோர் செய்திருப்பார். சரணுக்குப் பதிலாக அந்த இடத்தில் இளைய திலகம் பிரபுவை நடிக்க வைத்திருப்பார். பிரபு ஐந்து நிமிடங்களில் கமலைவிட அழுத்தமாக நடித்து, அனைவரையும் கலங்க வைத்துச் சென்றிருப்பார்.
பாட்ஷா மும்பையில் இருக்கும் போது ரகுவரனின் மகள் கைக்குழந்தையாக இருப்பாள். அப்போது பாட்ஷாவுக்கு 25 வயது இருக்கும். அந்தப் பெண் நக்மாவாக, 20 வயது பெண்ணாக இருக்கும் போது ரஜினிக்கு 45 வயது ஆகியிருக்கும். ஆனால், படத்தில் நக்மா, தேவன், ரகுவரன், ரஜினியின் குடும்பத்தினர் என அனைவருக்கும் வயது ஆகும் போது, ரஜினிக்கும் அவரது அல்லக்கைகளுக்கும் மட்டும் வயது ஆகாதது போலக் காட்டப்பட்டிருக்கும். இந்தக் காட்சியை கமல் வேறு விதமாக மாற்றியிருப்பார். ரகுவரனின் மகள் பள்ளி இறுதி ஆண்டு படிப்பதைப் போல சில மாற்றங்கள் செய்திருப்பார்.
கமலுக்கு அப்பாவாக விஜயகுமாருக்குப் பதிலாக நாகேஷ் நடித்திருப்பார். நாகேஷ் இறக்கும் காட்சியில் அதிக சென்டிமென்ட் காட்டியிருப்பார். இந்தக் காட்சிகளால் படத்தில் சோகம் அதிகரித்திருக்கும். ரஜினியின் நண்பராக ஜனகராஜ் நடித்திருப்பார்; கமலின் தேர்வும் அவர்தான். கவுண்டமணியை போட்டிருந்தால், கமலையே கலாய்த்து, தாதா பாட்ஷாவை பிரியாணி மாஸ்டர் ஆக்கியிருப்பார். சிறிய வில்லன் கதாபாத்திரத்தில் ஆனந்தராஜுக்குப் பதிலாக வேறு மொழி நடிகரை நடிக்க வைத்திருப்பார்.
கமலின் தம்பியான போலீஸ் கதாபாத்திரத்தில் ரமேஷ் அரவிந்த் நடித்திருப்பார். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமான வில்லன் ரகுவரனுக்குப் பதிலாக நாசர் நடித்திருப்பார். நாசர், ரகுவரனைவிட கொடூரமான வில்லனாக நடித்திருப்பார். படம் நாயகன் போல, அதன் அடுத்த பாகம் போல, நிறைய நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படமாக இருந்திருக்கும்.
ரஜினி நடித்த பாட்ஷாவின் ஹைலைட்டே ரஜினிதான். படத்தில் இரண்டே நடிகர்கள்தான் முக்கியமாகத் தெரிவார்கள்; ஒருவர் ரஜினிகாந்த், இன்னொருவர் ரகுவரன். அதனால்தான் படம் அதிக விறுவிறுப்பாக இருக்கும். ரஜினியைப் போன்றே ஸ்டைலிஷ் தாதாவாக ரகுவரனும் இருப்பார். இருவரின் நடிப்பும், இசையமைப்பாளர் தேவாவின் பின்னணி இசையும் படம் முழுவதையும் ஆக்கிரமித்திருக்கும்.
சரணும் விஜயகுமாரும் இறக்கும் காட்சிகள்தான் படத்தின் இரண்டு திருப்புமுனைகள். அந்தக் காட்சிகளில் வராத சோகம், ரஜினியை கொடிக்கம்பத்தில் கட்டிவைத்து ஆனந்தராஜ் அடிக்கும் போது, பலருக்கும் ரஜினியின் நடிப்பைப் பார்த்து கண்கள் கலங்கிவிடும். அந்த மிக அழுத்தமான சோகக் காட்சிக்குப் பிறகுதான், ஆனந்தராஜை ரஜினி கட்டிவைத்து அடிக்கும் போது, அழுத ரசிகர்கள் கைதட்டி, விசிலடித்து, சிரித்து மகிழ்வார்கள். அதற்காகத்தான் அந்த மாஸ் காட்சி.
ரஜினியின் காட்சிகளைக் காட்டும் போது, அவரது பாடிகார்ட்களை அடிக்கடி காட்டி விறுவிறுப்பை ஏற்படுத்துவார்கள். பிளாஷ்பேக் காட்சிக்கு மாஸ் ஏற்றும் வகையில் முந்தைய காட்சிகள் அமைந்திருக்கும். இறுதியில் ரஜினிதான் பாட்ஷா என்று தெரிந்து படம் முடிவுக்கு வரும்.
படம் முழுவதும் ரஜினியின் பேண்டசி ஹீரோயிசத்திற்காகவே உருவாக்கப்பட்டிருந்தது. ரஜினியின் ஹீரோயிசத்தைத் தூக்கிக் காட்டவே ரகுவரனை ஸ்டைலிஷ் வில்லனாக நடிக்க வைத்திருப்பார்கள். இந்தப் படம் முழுவதும் ரஜினிக்கு மட்டுமே பொருத்தமானது.
