நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பரிமளா, சுதந்திரம் தம்பதியினர் தங்களது மகள்கள் பராசக்தி மற்றும் மதுமிதா ஆகியோருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
எப்போதும் இரண்டு மகள்களுக்கு இடையே தினமும் சண்டை சச்சரவுகள் கலாட்டாக்கள் என அந்த குடும்பத்தின் வாழ்க்கை இயல்பாக நகர்கிறது.
இந்த நிலையில் மதுமிதாவிற்கு உள்ளூர் ரவுடி வெர்கீஸ் தினமும் பின் தொடர்வது, தொடர்ந்து காதலிக்க சொல்லி வற்புறுத்துவது என தொல்லை கொடுக்க ஆரம்பிக்கிறார்.
நாளுக்கு நாள் வெர்கீஸ்ஸின் தொல்லை எல்லை மீறிப் போக மதுமிதா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார். வெர்கீஸ்ஸின் குடும்பத்தினரும் மறைமுகமாக மதுமிதாவிற்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.
இந்த பிரச்சினையில் இருந்து வெளிவர என்ன செய்யலாம் என்று குடும்பமே குழம்பி நிற்கையில், வெர்க்கீஸின் கதையை முடித்து விடுவது தான் சரியான தீர்வு என்று முடிவு செய்த அடுத்த நாள் வெர்கீஸ் மர்மமான முறையில் தீர்த்துக் கட்டப்படுகிறார்.
இந்த வழக்கை விசாரிக்க வரும் காவல் துறை அதிகாரி எம்பெருமான் பலரை சந்தேகப்பட்டாலும் பரிமளாவின் குடும்பத்தினர் மீது தனிக் கவனம் செலுத்துகிறார்.
விசாரணை தீவிரமடையும் போது பரிமளாவின் குடும்பத்தினரே தங்களில் யாரோ ஒருவர் தான் இதனை செய்திருக்கக் கூடும் என்று ஒருவரை ஒருவர் சந்தேகப் படுகிறார்கள். பின்னர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் காவல் துறையின் சந்தேக வளையத்திற்குள் வருகிறார்கள்.
வெர்க்கீஸின் மரணத்திற்கு காரணம் யார் அதன் பின்னணி என்ன எம்பெருமான் குற்றவாளியை கண்டு பிடித்தாரா இறுதியில் நடந்தது என்ன என்பது தான் படத்தின் மீதிக் கதை.
பரிமளாவாக ஜெயராம் சுதந்திரமாக ஊர்வசி படத்திற்கு மிகப் பெரிய பலமாக இருக்கிறார்கள். கணவன் மனைவியாக இருவரும் அடிக்கும் கவுண்டர்கள், டைமிங் நகைச்சுவை மற்றும் இயல்பான நடிப்பு என பல இடங்களில் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.
வீட்டு உரிமையாளர் நிற்பதைப் பார்த்து வாங்க உள்ள போய் பேசலாம் என்று கூறும் போதும் நீயும் ரௌடியா அவன் யார் பாண்டன் எனக்கு அதெல்லாம் மறந்து போச்சு ஒரு flow வா பார்த்தா நல்லா இருக்கும் இந்த உலகத்தில யாரையும் பார்க்க முடியாது கடன் வாங்கி கடமையை செய்யணுமோ என்று நடிப்பில் தெறிக்க விட்டிருக்கிறார் ஊர்வசி.
சுடுகாட்டுக்கு போகணும்பாங்க கூடவே போவியா நெத்தியிலா அடிக்க முடியும் இதுக்கு ஒரு விதத்தை சொல்லுங்க ரெண்டு அக்யூஸ்டுகளை புடிச்சு வைச்சிருக்காங்க சுர்னு இழுங்க என்று பேசும் காட்சிகளிலும் ஊர்வசி கலக்கி இருக்கிறார்.
நடுத்தர வர்க்க மக்களை அந்த ஆண்டவன் நிம்மதியா இருக்க விட மாட்டான் என்று பேசும் காட்சியில் ஜெயராமின் நடிப்பு கவனிக்க வைக்கிறது.
எம்பெருமானாக மிஷ்கின் காவல் துறை அதிகாரியாக வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளார். முதலில் சாதாரணமாக இருக்கும் அவரது கதாபாத்திரம் படத்தின் இறுதியில் நம் கவனத்தை ஈர்த்து விடுகிறது. எப்போதும் பார்க்கும் காவல் துறை அதிகாரியாக இல்லாமல் தனித்துவமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து விடுகிறார்.
ஜெயராமை பார்த்து நல்ல வேளை fail ஆன என்று சொல்லும் காட்சி செம்ம.
வீட்டு உரிமையாளராக யோகி பாபுவின் நடிப்பு ரசிக்க வைக்கிறது.
துணைக்கு நானும் போட்டுமா நம்பர் சொல்லுங்க எந்த மூஞ்சியப் பாத்தாலும் திருட்டு மூஞ்சி மாதிரி இருக்கும் சார் என்று பேசும் காட்சிகளில் யோகி பாபு நன்றாக நடித்துள்ளார்.
வெர்கீஸ்ஸாக சாண்டி மாஸ்டருக்கு இந்த படம் ஒரு முக்கியமான படமாகும். நடன இயக்குனர் என்கிற அடையாளத்தை தாண்டி வில்லத்தனமும் நகைச்சுவையும் கலந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.
மகள்களாக நடித்துள்ள சஞ்சனாவும் அனந்திகாவும் இன்றைய நடுத்தர குடும்பத்தில் உள்ள பெண்களை பிரதிபலித்து நடித்திருக்கிறார்கள். இருவருடைய சண்டை, குறும்புத்தனங்கள் மற்றும் பேச்சு ஆகிய அனைத்தும் இயல்பாக இருக்கிறது.
படத்தில் நடித்த பிற கலைஞர்கள் அனைவரும் தங்களது பங்களிப்பை அருமையாக செய்திருக்கிறார்கள்.
பின்னணி இசை மற்றும் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவாளர் காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியுள்ளார்.
இயக்குனர் பாண்டிராஜ் இன்றைய கால பெண்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனையை கதைக்களமாக அமைத்து, அதனை சோகமாக இல்லாமல் நகைச்சுவையாக சொல்ல முயற்சி செய்துள்ளார்.
இயக்குனரின் முயற்சி சில இடங்களில் ரசிக்க வைக்கிறது. திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையை விறுவிறுப்புடன் இயக்க முயற்சி செய்து அதில் ஓரளவிற்கு வெற்றி பெற்றுள்ளார். கிளைமாக்ஸ் காட்சியில் இயக்குனர் கூறும் சமூக கருத்தும் இளைஞர்களுக்கான முக்கிய அறிவுரை படத்திற்கு வலு சேர்க்கிறது.
மொத்தத்தில் ஒரு முறை காணக் கூடிய வகையில் இருக்கும் இந்த படத்தை ஊர்வசியின் நடிப்பிற்காகவே பார்க்கலாம்.
படத்தை காண விருப்பமுள்ளவர்கள் Z5 OTT ல் பார்க்கலாம்.
