puthiyathalaimurai 2026 07 11 3fuh588e 11w

கந்தர்வர்களை போல பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்தவர் இசைக்குயில் ஜானகி அம்மா!

10 / 100 SEO Score

இசை மரபு!

பாடும்போது கண்களை அதிகம் இமைக்காது, தாடைப்பகுதிகள் அதிராது, பண்ணின் அளவுக்கு அதிகமாக வாயைத் திறவாது, பற்களை வெளிப்படுத்தாது இலக்கணச் சுத்தமாகப் பாடவேண்டும்; அவ்வாறு பாடுபவர்களே உண்மையான கந்தர்வர்கள் (பாடலில் வல்லவர்கள்) என்கிறது பஞ்ச மரபு எனும் இசை நூல்.

”கண்ணிமையா கண்டந் துடியா கொடிறசையா

பண்ணளவு வாய்தோன்றா பல்தெரியா – எண்ணிலிவை

கள்ளார் நறுந்தெரியற் கைதவனே கந்தருவர்

உள்ளாளப் பாடல் உணர்.”

இவ் இசைநூல் மரபின்படி அங்க சேட்டைகளின்றிப் பாடிக் காண்போரின் உள்ளத்தைத் தன் இசைத் திறத்தால் கவர்ந்த பெண்ணொருத்தியைச் சீவக சிந்தாமணிக் காப்பியத்தில் திருத்தக்க தேவர் நமக்கு அடையாளம் காட்டுகின்றார்.

அவள்பெயர் காந்தருவதத்தை! கலுழவேகன் எனும் மன்னனின் மகளான அவள் யாழிசைப்பதில் வல்லவள். அவளை யாழ்ப்போரில் வெல்லும் ஆடவன் எவனோ அவனே அவளுக்கு மணாளன் என்று அவளின் வளர்ப்புத் தந்தை சீதத்தன் என்பவன் அறிவிப்புச் செய்ய, பல நாட்டு மன்னர்களும் யாழ்ப்போர் நடக்கும் அரங்கிலே வந்து கூடுகின்றனர்.

தத்தை வீணையை மீட்டிக்கொண்டு இனிமையாகப் பாடுகின்றாள். பாடும்போது அவளின் கரிய புருவங்கள் நெற்றியில் ஏறவில்லை; கயல்போன்ற நெடிய கண்கள் ஆடவில்லை; தொண்டை விம்மிப் புடைக்கவில்லை; அழகிய முத்துப் பற்கள் வெளியில் தெரியவில்லை; அவள்தான் தன் பவளவாய் திறந்து பாடினாளா? வீணையே நரம்பிசையை வெளிப்படுத்தியதோடு நாவால் பாடலும் இசைத்ததா? என்று வியப்புற்று அரசர்கள் அவளை நோக்கினர் என்கிறார் திருத்தக்கதேவர்.

”கருங்கொடிப் புருவம் ஏறா

கயல்நெடுங் கண்ணும் ஆடா

அருங்கடி மிடறும் விம்மாது

அணிமணி எயிறுந் தோன்றா

இருங்கடற் பவளச் செவ்வாய்

திறந்திவள் பாடி னாளோ

நரம்பொடு வீணை நாவின்

நவின்றதோ…”

கந்தர்வர்களையும் காந்தருவதத்தையையும்போல எவ்வித அங்க சேட்டைகளுமின்றிப் பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்தவர் இசைக்குயில் ஜானகி அம்மா. அவர் அரங்கில் பாடும்போது அவர்தாம் பாடுகிறாரா அல்லது அந்தக் காந்தக் குரல் வேறெங்கிருந்தோ வருகின்றதா என்று இரசிகர்கள் வியப்பர்!

எனவே இசைவாணர்களே/வாணிகளே! நீங்கள் நன்றாகப் பாடினால் மட்டும் போதாது; முகத்தை விகாரப்படுத்திக் கொள்ளாமல், பற்களைக் காட்டிப் பார்ப்போரை பயமுறுத்தாமல், வாயைப் பிளந்து (நிகழ்ச்சி காண) வந்தோரை வேதனைப்படுத்தாமல், கையை விதவிதமாகச் சுற்றி முறுக்குப் பிழியாமல் நளினமாகவும் நாகரிகமாகவும் பாடக் கற்றுக்கொள்ளுங்கள்! அப்போதுதான் உங்கள் பாடலை இரசிகர்கள் முழுமையாய் இரசிக்கமுடியும்! அத்தோடு இசை மரபின் இலக்கணமும் அதுவே!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top