தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு மலைவாழ் கிராமத்தில் படிப்பறிவு சிறிதும் இல்லாத மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அந்த கிராமத்தில் கந்தன் அமரவல்லி தங்களது மகள் குறிஞ்சியுடன் ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அந்த பகுதியில் குடியிருப்பவர்களை விரட்டி அடித்து விட்டு அவர்களது இடங்களை அபகரிக்க வன அலுவலர் முயற்சி செய்து வருகிறார்.
படிப்பறிவு இல்லாத அந்த மக்களின் தலைவனாக இருக்கும் மூப்பனிடம் வெற்றுத் தாளில் கையெழுத்து வாங்கி அவர்களை அந்த இடத்தை விட்டு வெளியேற்ற முடிவு செய்கிறார்.
அனைவரும் தன் மீது சந்தேகப்படும் அளவிற்கு அந்த அலுவலர் செய்து விட்டாரே என்ற மன உளைச்சலில் மூப்பன் கைநாட்டு வைத்த விரலை துண்டித்துக் கொண்டு இறந்து போகிறார். இறக்கும் முன் பேத்தி குறிஞ்சியிடம் நீ நன்றாக படித்து ஊரைக் காப்பாற்ற வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொள்கிறார்.
இதனிடையே அந்த மக்களை வெளியேற்ற எண்ணிய வன அலுவலரின் திட்டம், மக்களின் போராட்டத்தால் கைவிடப்படுகிறது.
இந்த நிலையில் தாத்தாவின் விருப்பத்தை நிறைவேற்ற பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிக் கூடத்திற்கு குறிஞ்சி செல்கிறார். அங்கு உள்ள ஆசிரியை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுத்தால் உங்கள் கிராமத்திலேயே பள்ளிக் கூடம் அமைக்கப்படும் என்று கூறி அவரை அனுப்பி வைக்கிறார்.
இதனிடையே பருவமடைந்த குறிஞ்சிக்கு அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். ஆனால் நான் படிக்க வேண்டும் தனது கிராமத்திற்கு பள்ளிக்கூடம் வேண்டும் என்கிற ஆசையில் குறிஞ்சி கிராமத்தை விட்டு வெளியேறி மாவட்ட ஆட்சியரை சந்தித்து உதவி கேட்க செல்கிறார்.
குறிஞ்சி கிராமத்தை விட்டு வெளியேறிய பிறகு வன அலுவலர் தனக்கு எதிராக போராட்டம் நடத்திய அனைவரையும் குறிஞ்சியின் பெற்றோர் உட்பட தீர்த்துக் கட்டி விடுகிறார்.
காட்டில் மிருகங்களுக்கே பயப்படாத குறிஞ்சிக்கு நகரத்தில் மனிதர்களால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஒரு விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நிலையில் குறிஞ்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து, தனது விருப்பத்தைக் கூறுகிறார்.
குறிஞ்சியின் விருப்பத்தை நிறைவேற்ற மாவட்ட ஆட்சியர், அந்த கிராமத்தில் பள்ளிக்கூடம் அமைக்க முயற்சி செய்கிறார். ஆபத்தான அந்த மலைப் பகுதிக்கு ஆசிரியர்கள் யாரும் பாடம் நடத்த முன் வராததால் அங்குள்ள பிள்ளைகளுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதில் சிக்கல் எற்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில் குறிஞ்சியின் ஆசையை மாவட்ட ஆட்சியர் நிறைவேற்றினாரா இல்லையா என்பது தான் படத்தின் மீதிக் கதை.
மாவட்ட ஆட்சியர் முத்துவேலாக அருள்நிதி நேர்மையான ஆட்சியராக கண்ணியமாகவும் அதே நேரத்தில் அழுத்தமாகவும் நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு அருள்நிதியின் அமைதியான நடிப்பு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது.
ஒருத்தர ஒருத்தர் தள்ளி வைக்கறது தான் சமூக நீதியா நம்ம கஷ்டத்துக்காக கல்வியை கசப்பாக்கிடக் கூடாது அதிகாரம் ஆள்றவங்க கையில மட்டுமல்ல நம்ம மாதிரி அதிகாரிங்க கையிலும் இருக்கு பொண்ணா பாக்கல போராளியா பாக்கறேன் வாழ்றது உயரத்துல இருந்தாலும் அவங்க நிலைமை அதள பாதாளத்திலத் தான் இருக்கு என்று பேசும் காட்சிகளில் அருள்நிதியின் நடிப்பு கவனிக்க வைக்கிறது.
கந்தன் அமரவல்லியாக ஆரவ் ரம்யா பாண்டியன் இருவரும் பழங்குடியின தம்பதியராக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
குறிஞ்சியாக சிறுமி கிருத்திகாவின் நடிப்பு தான் படத்தின் மிகப் பெரிய பலம். எமோஷனல் காட்சிகளில் அனைவரையும் கண் கலங்க வைத்து விடுகிறார். வருங்காலத்தில் பெரிய இடத்திற்கு வருவது உறுதி.
கல்லும் வேணாம் புருஷனும் வேணாம் படிப்பு தான் வேணும் என்று பிடிவாதத்துடன் பேசும் காட்சி பெற்றோர்கள் இறந்தது தெரிந்த உடன் உடைந்து போகும் காட்சி அவர் நடிப்பில் முத்திரை பதிக்கும் காட்சிகளாகும்.
வன அலுவலராக ஜான் விஜய் வழக்கம் போல நடித்துள்ளார். படத்தில் நடித்த காளி வெங்கட், VTV கணேஷ் மற்றும் பிற கலைஞர்கள் அனைவரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.
பின்னணி இசை படத்தின் கதையோட்டத்திற்கு ஏற்ப பயணித்து ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவாளர் காட்சிகளை நேர்த்தியாக படமாக்கி பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து படைத்துள்ளார்.
இயக்குனர் கணேஷ் விநாயகன் பழங்குடியின மக்களின் கல்வி மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான போராட்டத்தை அழுத்தமாக பதிவு செய்து கவனிக்க வைத்து விட்டார்.
மொத்தத்தில் தங்களது கிராமத்தில் பள்ளிக்கூடத்தை அமைக்க போராடும் ஒரு சிறுமியின் விருப்பத்தை நிறைவேற்ற அவருக்கு உறுதுணையாக இருக்கும் ஆட்சியரின் முயற்சியை பற்றி பேசும் இந்த படத்தை ஒரு முறை பார்த்து அனைவரும் அருள் புரிய வேண்டும்.
