மத்திய மாநில உறவுக்கு பிரச்னையை எற்படுத்திய அந்த எலும்புக்கூடு யாருடையது? ஒரு தரமான வெப் சீரீஸ்!

தமிழ்நாட்டில் எட்டு வழிச்சாலை போடுவதற்காக நடத்தப்பட்ட பூமி பூஜையில் மத்திய அமைச்சர் கலந்து கொள்கிறார்.அப்போது அந்த இடத்தில் மண்ணைத் தோண்டியவுடன் ஒரு எலும்புக்கூடு கிடைக்கிறது. இந்த திட்டத்தை அமுல்படுத்த விருப்பமில்லாமல் மாநில அரசு நடத்திய சதி என்று மத்திய அரசு குற்றம் காட்டுகிறது. இதனால் மத்திய மாநில உறவு பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது.

இந்த நிலையில் காவல் துறை மீது வழக்குப்போட்டு பனிஷ்மெண்ட் போஸ்டிங்கில் பணிபுரிந்து வரும் ஆய்வாளர் மூஸா ராஸா வசம் இந்த வழக்கை காவல் துறை உயர் அதிகாரி ரத்திகா ஒப்படைத்து எலும்புக்கூடு யாருடையது என்பதை விரைந்து கண்டுபிடித்து வழக்கை முடித்துத் தர வேண்டும் என்று உத்தரவிடுகிறார்.

மூஸா ராஸாவிற்கு வழக்கு கைக்கு கிடைத்தவுடன் எலும்புக்கூடை வைத்து தடவியல் ஆராய்ச்சியின் மூலம் முடக்கத்தான் மணி என்பவரை பற்றி தெரிய வருகிறது. ஏற்கனவே தன்னுடைய காதலி நிலாவதி மற்றும் தங்கை வெண்பாவை தீர்த்துக்கட்டிய வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மணிக்கு தடவியல் ஆய்வில் கிடைத்த ஆதாரங்கள் பேரில் அவர் செய்த குற்றம் நிருபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அளிக்கப்படுகிறது.

ஆனால் நீதி மன்றத்தில் எந்த வாக்குமூலமும் கொடுக்காமல் தண்டனையை ஏற்றுக் கொண்டது மூஸா ராஸாவின் மனதில் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறது. உண்மையில் மணி குற்றவாளி தானா அப்படி இல்லையென்றால் அந்த இருவரையும் தீர்த்துக்கட்டியது யார் அதன் பின்னணி என்ன உண்மையான குற்றவாளியை மூஸா ராஸா கண்டு பிடித்தாரா இல்லையா இறுதியில் நடந்தது என்ன என்பது தான் சீரிஸின் மீதிக்கதை.

மூஸா ராஸாவாக சசிகுமார் காவல் அதிகாரியாக தாடியுடன் நடித்துள்ளார். பல வருடங்களாக அவருக்கும் அவரது மனைவி சுமயாவிற்கும் குழந்தை இல்லாத நிலையில் அல்லாவை வேண்டிக் கொண்டு தாடி வைத்துக் கொள்கிறார்.

தாடி வைத்துக் கொள்வதற்காக அலுவல்ரீதியாக பல சிக்கல்களை மூஸா எதிர்கொள்கிறார். எட்டு வருடங்களுக்கு பிறகு சுமயா கர்ப்பமடைகிறார்.

கர்ப்ப காலத்தில் மனைவியை பார்த்துக் கொள்ள முடியாமல் மணியின் மர்மத்தை கண்டறிய ஒரு காவல் அதிகாரியாகவும் கணவனாகவும் எப்படி கஷ்டப்படுகிறார் என்பதை தனது அனுபவ நடிப்பால் இறுதி வரை கடத்தி ரசிகர்களை கவர்ந்து விடுகிறார். சந்தோஷப்படறியா சங்கடப்படறியா போலீஸ்னாலே சங்கடம் தானே பொய் காட்டுச்செடி மாதிரி வளர்ந்துகிட்டே போகும் உண்மை மண்ணுக்குள்ள புதைஞ்சு இருக்கற வைரம் மாதிரி தோண்டித்தான் எடுக்கணும் என்று பேசுகின்ற காட்சிகளில் சசிகுமாரின் நடிப்பு கவனிக்க வைக்கிறது.

ரத்திகாவாக அனகா சசிகுமாருக்கு உறுதுணையாக இறுதி வரை அவருக்கு ஆதரவாக இருக்கும் கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார். He is the best advocate but not best husband என்று கணவரைப் பற்றி விரக்தியுடன் கூறும் காட்சி அருமை. ரத்திகாவிற்கும் அவரது கணவருக்கும் இடையேயான பிரச்சினை, பின்னர் அது சரியாவது என அந்தப் பகுதியும் ரசிக்கும் வகையில் உள்ளது.

முடக்கத்தான் மணியாக யஷ்வந்த், நிலாவதியாக ரேவதி சர்மா, வெண்பாவாக பூர்ணா மற்றும் சீரிஸில் நடித்த பிற கலைஞர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள். கத்தி யார் குத்தினாலும் இறங்கும் போன்ற வசனங்கள் ரசிக்க வைக்கிறது.

இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசனில் Mystery of Mani என்கிற வெப் சீரீஸை உருவாக்கியுள்ளார். மணியின் மர்மத்தை ஆய்வாளர் மூஸா எப்படி கண்டு பிடிக்க போராடுகிறார் அவருடைய தாடிக்கான வழக்கு என்ன ஆனது என பல கதைகளுடன் எட்டு எபிசொட் கொண்ட தொடராக இயக்கியுள்ளார்.

மத்திய மாநில உறவுக்கு பிரச்சினையை எற்படுத்திய அந்த எலும்புக்கூடு யாருடையது குற்றத்தை செய்ததாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மணி யார் அவர் தான் இந்த குற்றத்தை செய்தாரா DNA Test மூலம் ஏற்படும் சீரியல் கில்லர் திருப்பம் பாலின பேதம் இல்லாத காதல்
என பல முடிச்சுகளைப் போட்டு இறுதி எபிசோட்டில் உண்மைகள் தெரிய வரும் Investigation கதையாக உருவாக்கி இயக்கியுள்ளார்.

வெப் சீரீஸின் நீளத்தை நீட்ட வேண்டும் என்பதற்காக நடுவே சீரியல் கில்லர் ஆங்கிளில் தொடரை நகர்த்தியது தொடருக்கு தேவையில்லாத ஒன்று.

வெப் சீரீஸ் மெதுவாக செல்வது போன்ற உணர்வை தருவதையும் இயக்குனர் கவனிக்க தவறி விட்டார். இறுதியில் வரும் Twist அச்சம் தரும் வகையிலும் வித்தியாசமாகவும் இருப்பது ரசிக்க வைத்தாலும் அதில் அழுத்தம் இல்லாமல் இருப்பது குறையாக உள்ளது. தமிழில் ஒரு தரமான வெப் சீரீஸை கொடுக்க வேண்டும் என்று இயக்குனர் மெனக்கெட்டு இருப்பது தெரிகிறது.

மொத்தத்தில் சில குறைகள் இருந்தாலும் ஒரு முறை காணும் வகையில் இருக்கும் இந்த வெப் சீரீஸை விருப்பமுள்ளவர்கள் Amazon Prime Video ல் காணலாம். ஆபாச வசனங்கள் மற்றும் முத்தக்காட்சி இருப்பதால் குழந்தைகளுடன் பார்ப்பதை தவிர்க்கவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top