google.com, pub-6365925432395269, DIRECT, f08c47fec0942fa0

அங்கம்மாள்: பேரன்பும், பெருங்கோபமும்!

பெருமாள் முருகனின் படைப்புகள் எப்போதுமே கொஞ்சம் காரசாரமானவைதான். அவற்றில் ஒன்றான அவரது பிரபலமான ‘கோடித்துணி’ என்ற சிறுகதைக்கு திரைவடிவம் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் விபின் ராதாகிருஷ்ணன்.

திருநெல்வேலி கிராமங்களுக்கு செல்கிறவர்கள் அங்கம்மாக்களை தரிசிக்காமல் வர முடியாது.

கிராமத்துக்கு கிராமம் அங்கம்மாக்கள் நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் பேரன்பும், பெரும்கோபமும் கொண்டவர்கள். தாங்கள் நினைத்தது நடக்க வேண்டும் என்கிற வீராப்பு கொண்டவர்கள். அவர்கள் நல்லவர்களா, அல்லாதவர்களாக என்பதை யாரும் கணிக்க முடியாது.

அப்படியான ஒரு அங்கம்மாளின் கதை இது. இந்த கதையின் அங்கம்மாளுக்கு ரவிக்கை அணியாமல் இருப்பதும், சுருட்டு புகைப்பதும் தனித்த அடையாளம்.

இந்த இரண்டும் அவளுக்குள் வந்தது எப்படி என்பதை பற்றி இந்தப் படம் பேசவில்லை. இதை மகன் மாற்றச் சொல்லும்போது என்னென்ன மாற்றங்கள் நடக்கிறது என்பதை பேசுகிறது படம் .

அங்கம்மாள் கணவனை இழந்த பிறகு இரு மகன்களையும் கஷ்டப்பட்டு வளர்க்கிறாள். முத்த மகன்(பரணி) படிப்பு வராமல் கூலி வேலைக்காரனாகிறார், இளைய மகன் (சரண் சக்தி) படித்து டாக்டராகிறான் இந்த இரண்டையும் சூழ்நிலை தீர்மானிக்கிறது. அதற்கு அங்கம்மாள் உதவுகிறாள்.

படித்த டாக்டருக்கு பணக்கார காதலி கிடைக்கிறாள். அவள் திருமணத்தில் அங்கம்மாள் கலந்து கொள்ள வேண்டும் என்றால் அவள் ரவிக்கை அணிய வேண்டும். இலைமறை காயாக இதனை அங்கமாளுக்கு புரிய வைக்கிறது குடும்பம். அங்கம்மாள் ரவிக்கை அணிந்தாளா, இல்லையா என்பதுதான் கதை.

தாங்கள் உருவாக்கிய உலகத்தை தாங்களே ஆள வேண்டும் என்று நினைக்கிற ஒருவித மனநிலைதான் அங்கம்மாளின் நிலையும். தனது சுயமரியாதையை சோதிக்கிற எதையும் அவள் அனுமதிப்பதில்லை.

ரவிக்கை அணியாதபோது அங்கம்மாளை யதார்த்தமாக பார்த்த ஊர், அவள் ரவிக்கை அணிந்ததை வேடிக்கையாக பார்த்ததுதான் முரண்பாடு.

பதின்ம பருவ காலத்தில் அஞ்சம்மாளின் மனசுக்குள் இருந்தவர் கூட ரவிக்கை அணிந்ததை ‘அழகு’ என்றதும் அங்கம்மாளின் சுயமரியாதை சுடர்விடுகிறது.

ரவிக்கை அணிந்தால்தான் அழகு என்பதை அவள் ஒருபோதும் ஏற்கவில்லை. ‘பெற்ற மகனுக்காக வேட்டிகூட கட்டுவேன்’ என்கிற அங்கம்மாளுக்கு இந்த ஒப்பீடு ஒப்புக் கொள்ளத்தக்கதாய் இல்லை.

ஏன் பெற்ற பிள்ளைக்காக விட்டுக் கொடுத்து போகக்கூடாதா?, என்ன இருந்தாலும் இம்புட்டு பிடிவாதம் கூடாது என்ற கேள்விகள் எழும். ஆனால் இதற்கான பதில் அங்கம்மாளிடம் மட்டுமே இருக்கிறது.

அங்கம்மாளாக நடித்துள்ள கீதா கைலாசம் நெல்லை சீமையின் தமிழச்சியாகவே மாறி இருக்கிறார். நெல்லை தமிழ் பேச கொஞ்சம் தடுமாறி இருந்தாலும், சமாளிக்கிறார்.

சம்பந்தி வீட்டாரை வழியனுப்பும்போது ‘பத்திரமா போயிட்டு வாங்க’ என்று போலி மரியாதை காட்டும்போதும், “என்னை படிக்க வைத்த நீங்கள், அண்ணனை ஏன் படிக்கவைக்கவில்லை” என்று மகன் கேட்கும்போது பதில் சொன்னாலும் மனசுக்குள் தவிப்பதும்,

கிராமத்து புதுமண தம்பதிகளை பச்சையாக பேசி கிண்டல் செய்வதும், எடுத்தற்கெல்லாம் மருமகளை குறை சொல்லி பளார் என கன்னத்தில் அறைந்து விடுவதுமாக நடிப்பில் உயர்ந்து நிற்கிறார். ரவிக்கை அணியாத தன் அழகை அவர் கண்ணாடியில் ரசிப்பது கிளாஸ்.

அங்கம்மாக்கள் சுருட்டை ரசித்து புகைப்பார்கள். ஆனால் கீதா கைலாசம் சுருட்டு புகைக்கும்போது கொஞ்சம் பதற்றம் தெரிகிறது. ரவிக்கை அணியாத அஞ்சம்மாக்கள் தங்கள் மார்பை மறைக்க நிறைய மெனக்கெட மாட்டார்கள். ஆனால் கீதா கைலாசத்தின் தயக்கம் அவ்வப்போது தலைகாட்டுகிறது.

மருமகளாக தென்றல் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார். மாமியாரிடம் அடிவாங்கிவிட்டு திருப்பி அடிக்கும் துணிச்சலுடன் செய்வதறியாது நிற்கும் ஒரு காட்சியே அவரது நடிப்புக்கு சாட்சி.

அங்கம்மாளின் மகனாக சரண் சக்தி அந்த மண்ணுக்கு பொருந்தாத முகத்துடன் வருகிறார். என்றாலும் நடிப்பால் சமாளிக்கிறார். நாடோடிகள் பரணியும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். அவருக்கு இருக்கும் நாதஸ்வர ஆர்வம் சின்ன கவிதை. அமைதியாகவே இருக்கும் அவர் திடீரென அம்மாவிடம் சீறும் காட்சியில் சிக்சர் அடித்து விடுகிறார்.

அஞ்சாய் சாமுவேலின் ஒளிப்பதிவும், மகமது மக்பூல் மன்சூரின் பின்னணி இசையும் நெல்லை சீமை கதை களத்தை கண்முன் நிறுத்துகிறது.

ஒரு சிறுகதையை பெரிய திரைப்படமாக்கும்போது வரும் பிரச்சினைகள் இதிலும் உண்டு.

குறிப்பாக சரவண சக்தி டாக்டர் என்னும்போது அதற்கான அறிகுறியே அவரிடம் இல்லை. டாக்டருக்கு படித்த இளைஞர் சாராயம் குடித்துக் கொண்டே இருப்பாரா என்ன?

அங்கம்மாள் ஊற்றும் பாலை நம்பித்தான் ஊரே இருக்கிறது என்பதும், அதற்காக ஒரு பஞ்சாயத்து நடப்பதும் லாஜிக்காக இல்லை.

மகனுக்காக அங்கம்மாள் ரவிக்கை அணிந்தாள் என்றோ? அல்லது தனது சுயமரியாதையே முக்கியம் என்று அணிய மறுத்தாள் என்றோ நறுக்கென்று முடிந்திருக்க வேண்டிய கதையை, தலையை சுற்றி மூக்கை தொடுவது மாதிரி முடித்திருக்கிறார்கள்.

லைவ் சவுண்ட் ரிக்கார்டிங் என்பதால் சில நேரங்களில் உதட்டசைவும், வசனமும் ஒட்டாமல் இருக்கிறது.

இப்படியான சில குறைகள் இருந்தாலும்…

கிராமங்கள் நகரங்களாகி வரும் இன்றை சூழ்நிலையில் ‘அங்கம்மாக்களை’ அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்த வகையில் இது முக்கியமான படமாகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்