தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார் தேவா. கானா பாடல்களை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் என்றும் தனித்துவமான குரல் வளத்தால் இசை ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் என்றும் புகழ்பெற்றார்.
சமீபத்தில் ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மையம், தேவாவின் இசைப் பயணத்தை பாராட்டி கவுரவித்தது. இதன் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் அவருக்கு மரியாதை அளித்து, அவைத்தலைவர் இருக்கையில் அமர்த்தி, மதிப்பிற்குரிய செங்கோலும் வழங்கப்பட்டது.
இந்த பெருமை அவரை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்தது. இதுகுறித்து தேவா தெரிவித்துள்ளார்:
“ஆஸ்திரேலிய தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் அளித்த இந்த அங்கீகாரம் எனக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகிறது. என்னுடனும், என் இசைக்கலைஞர்கள் குழுவுடனும் இவ்வளவு உயர்ந்த கவுரவத்தை வழங்கிய ஆஸ்திரேலிய அரசுக்கு மனமார்ந்த நன்றிகள்.
இந்த தருணம் என் தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல, உலகம் முழுவதும் இசை மற்றும் பண்பாட்டை பரப்பி வரும் ஒவ்வொரு தெற்காசிய கலைஞருக்கும் சொந்தமானது. கடந்த 36 ஆண்டுகளாக என் இசைப் பயணத்தில் ரசிகர்கள் தந்த அன்பும், ஆதரவும் தான் என் மிகப்பெரிய பலம்.
இந்த அங்கீகாரத்தை என் ரசிகர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்” என்று தெரிவித்தார்.
