பின்தங்கிய கிராமத்தில் பின்தங்கிய குணநலன்கள் வாய்த்த குடும்பத்தில் இருந்து வந்து மருத்துவம் படித்து மனதளவில் பக்குவம் வாய்ந்த ஒரு நாயகன் குடும்ப உறுப்பினர்களின் பிற்போக்குத் தனங்களால் பாதிக்கப்படுவதும் மீள்வதுமான மையக்கதையில் எத்தனையெத்தனை மாயங்களை நிகழ்த்தி இருக்கிறார் சீனுராமசாமி.
ஊருக்குள் ஊதாரியாக குடிகாரனாகத் திரிகின்ற நாயகன் ஊரை விட்டு வெளியேறும் போதுதான் அவன் நிஜமாக யார் என்றே சொல்லபடுகிறது. மருத்துவக் கல்லூரி மாணவனாக நாயகன். “நான் காற்றிலே அலைகிற காகிதம்” பாடலைப் பாருங்கள், அதுதான் இயக்கத்துக்கான சான்று, ஒரே பாடலில் மொத்த கல்லூரி வாழ்க்கை, அதனுள் நட்பு காதல் கொண்டாட்டம் என எல்லாமே சொல்லி முடிக்கப்பட்டுவிடும். பாடலில் ஒவ்வொரு காட்சியும் ஒரு கதை சொல்லும்.
மருத்தவக் கல்விக்காக கொண்டுவரப்பட்ட மனிதஉடலை இது யார் எப்போது இ.றந்தார் என்று கேட்பார் நாயகன், “இவர் உடல்தானம் செய்தவர்” என்பார் விரிவுரையாளர். உடனே நாயகன் அந்த உடலை கையெடுத்துக் கும்பிடுவான். அடுத்த நாளே நாயகி தனது உடலை உடல்தானத்திற்கு எழுதிக் கொடுத்துவிட்டு வருவார்.
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு காட்சியாக கதை விரியும். அன்புச்செல்வி இன்னும் நாயகனுக்கு அறிமுகம் ஆகாத கல்லூரிக் காலகட்டத்திலேயே அன்புச்செல்வியும் ஒரு காட்சியில் அப்பாடலுக்குள் யாரோ போல வந்து போவார். அட என்றிருந்தது.
தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, படங்களைப் போலவே இதிலும் நாயகனை ஒருதலையாகக் காதலிக்கும் ஒரு பெண் வருகிறார். (Srushti Dange). அவரின் உணர்வுகளை அத்தனை மரியாதையாகக் கையாள்வார் நாயகன்.
“நீ இல்லை என்றால் நான் இல்லை, நான்தான் உனக்கு எல்லாம்” போன்ற எந்த வசனங்களும் இன்றி ஒரு காதல் அதியற்புதமாக நிகழ்கிறது. அதே அற்புதத்தோடே பிரிகிறது. சில வருடங்கள் கழித்து அவளைத் தேடிச் செல்கின்ற காட்சியில் இருந்துதான் நாயகன் வாழ்வின் இரண்டாம் பகுதி தொடங்குகிறது.
சீனுராமசாமியின் படங்களில் இப்படி ஒருதலையாகக் காதலிக்கும் பெண்கள் எல்லாம் நாயகனை ஒரு இக்கட்டில் இருந்து கைதூக்கி விடுபவர்களாகவே இருக்கிறார்கள். காதல் காதாலாக மாற வழியில்லாத போது அது அன்பாக பரிணமித்து விடுகின்றது. அந்த அன்புன் எதனினை விடவும் பரிசுத்தமாக இருக்கிறது.
சுபாஷினியை சந்தித்து சுபாஷினியால் தீய ஒழுக்கங்களில் இருந்து மீண்டு, நெறிப்படுவான். அது காதாலாக மாறும் வரை அழகிய நட்பாக இருக்கிறது, நீ என்னை லவ் பண்ணல்லடி என்று சீண்டிக் கொள்ளும் விகற்பமற்ற நட்பாக இருக்கிறது.
அவன் ஏன் இவ்வாறாக இருக்கிறான் என்பதை அவளிடம்தான் சொல்வான் அன்புச்செல்வியின் கதை. குடும்பத்தினரால் அன்புச் செல்வியை இழந்த கதை, அவளை இழந்துவிட்டு வெறியில் வீட்டுக்கு வந்து அரற்றிக் கொண்டிருக்கும் காட்சியிலெல்லாம் விஜய்சேதுபதி கலங்கடித்துவிடுவார். அவருக்கும் மேலாக ராதிகா. “என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு எல்லையிலயே நின்னுருச்சி என் குட்டியானை”
சுபாஷினிக்கு விவாரகத்தான பிறகு அவளே கேட்பாள், “என்னைப் பார்த்தா பைத்தியக்காரி மாதிரி இருக்கா?. ஒழுங்கா குழந்தைய கலைச்சிட்டு அமெரிக்கா போயி செட்டில் ஆகி நல்ல வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்ல.
நான் வாழத்தெரியாதவனு நினைக்கறியா தர்மதுரை” – இல்ல என் அன்புச் செல்வியா நினைக்கறேன், ஒரு காதல் அவ்வளவு கண்ணியமாக வெளிப்படும். அடுத்த காட்சியே உன் மீது எனக்கு இந்தக் காதல் எண்ணம் வந்துவிட்டது இனி நான் உன்வீட்டில் தங்குவது சரிவராது என்று வேறு இடம் பார்த்துக் கொள்ளட்டுமா என்று கேட்பான்.
அவளும் காதலுக்குச் சம்மதித்து புணர்ந்த பிறகு சொல்வாள். “நான் ரொம்ப பாதுகாப்பாக உணர்கிறேன்” – உங்களைப் பாதுகாப்பாக உணரச் செய்யாத எந்தக் காமமும் தீயது.
இறுதிக் காட்சியில், விஜய்சேதுபதி திருடிக் கொண்டுவந்துவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்ட பணத்தை எடுத்து தமன்னா கட்டிலில் வைத்திருப்பார்.
அப்படி ஒரு பணம் தன்னிடம் இருப்பதே அவருக்குத் தெரியாது என்பதால் அதனை தமன்னாவின் பணம் என்றே எண்ணி வங்கியில் செலுத்தச் சொல்லி அறிவுறுத்திக் கொண்டிருப்பார். அந்தக் காட்சி முழுக்கவே விஜய்சேதுபதியின் உடையும், நடையும் பேச்சும் அத்தனை இயல்பு, அழகு. கச்சிதம். ரசித்தேன்.
அதிகமான ரசிகைகளை தர்மதுரை படமே அவருக்குப் பெற்றுக் கொடுத்திருக்கும்.
– யாத்திரி
