தமிழ் சினிமா ரசிகர்களுக்குத் தெரிந்த முகம் – நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர். குறிப்பாக விஜய் நடித்த ‘கில்லி’ படத்தில் அவருடைய அப்பாவாக நடித்திருந்தார்.
1991-ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த ‘கால் சந்தியா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஆஷிஷ் வித்யார்த்தி, தனது மூன்றாவது திரைப்படமான ‘த்ரோகால்’ (Drohkaal) மூலம் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.
தமிழில் அவர் முதன்முதலாக விக்ரம் நடித்த ‘தில்’ (2001) படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ‘ஏழுமலை’, ‘பகவதி’, ‘தமிழன்’, ‘தம்’, ‘கில்லி’, ‘ஏய்’, ‘ஆறு’, ‘மலைக்கோட்டை’, ‘குருவி’, ‘பீமா’, ‘அனேகன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் ரவி மோகன் நடித்த ‘இறைவன்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார். இதுவரை 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
தனது தனிப்பட்ட வாழ்க்கையில், 2001-ஆம் ஆண்டு முன்னாள் நடிகை சகுந்தலா பருவாவின் மகள் ரஜோஷி பருவாவை திருமணம் செய்துகொண்டார். 21 ஆண்டுகள் கழித்து, இருவருக்குமான மனக்கசப்பு காரணமாக 2022-இல் விவாகரத்து பெற்றார்.
அதன் பின்னர், 2023-ஆம் ஆண்டு அசாமைச் சேர்ந்த தொழிலதிபர் ரூபாலியை 60 வயதில் திருமணம் செய்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். மிக எளிமையாக உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்ற திருமணத்திற்கு பிறகு, “எனது வாழ்வில் ரூபாலி ஒரு புதிய அத்தியாயம். நாம் ஒருவரை ஒருவர் அறிந்து, புரிந்து கொண்டோம்; பின்னர் உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல தீர்மானித்தோம்” என தெரிவித்துள்ளார்.
அவரது இந்த முடிவு குறித்து சமூக வலைதளங்களில் பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாமல் தனது இரண்டாவது திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகிறார் ஆஷிஷ் வித்யார்த்தி.
