விநாயகன் என்ற கருஞ்சிறுத்தைக்கு ஒரு நல்ல தீனி கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்போடு தான்
திரையரங்கப் படி ஏறினேன். உண்மையில் தேவைக்கு அதிகமாகவே முழுத் தீனி நமக்கும்.
தன்னுடைய தயாரிப்பில் ஏறக்குறைய ஒரு சூப்பர் நாயகனாக விநாயகனை நடிக்க வைத்து அழகுபார்த்ததில் மம்முட்டிக்கு எவ்வளவு பாராட்டையும் கொடுக்கலாம். அதனாலோ என்னவோ மம்முட்டியின் வழக்கமான நடிப்பைக் கடந்து விநாயகனோடே கட்டுண்டு கிடந்தது பார்வையாளர் உலகம். அதுவும் அந்தக் கடைசிக் காட்சியில் கொலையாளி மாட்டுப்பட்டவுடன் விநாயகனை நோக்கி கேமரா மாறும் போது திரையரங்கமே கைதட்டி ஆரவாரிக்கிறது.
கண்களை இடுக்கிக் கொண்டு தன் உடல்மொழி அனைத்தையுமே முகத்துக்குள் தேக்கி வைத்த நடன் விநாயகன். தொடர் கொலைகள் நடந்து கொண்டிருக்கும் போது மருகித் தன் தோல்வி முகத்தில் ஒரு வெற்று உணர்வைக் காட்டுவதிலாகட்டும், கன்னத்தின் அசைவை வைத்தே அவரின் கோப தாபங்களைப் பிரதிபலிப்பதாகட்டும், ஈற்றில் கொலையாளி பிடிபட்டதும் ஒரு நிம்மதியான சாய்வில் இருந்து கொண்டே அவனுக்காக எதிர்பார்ப்பதாகட்டும், கண்டிப்பாக அடுத்த தேசிய விருது தரம்.
ஒரு நல்ல கலைஞனாக இருந்தாலும், கெடு குடிப் பழங்களால் தன்னைத் தானே அழித்த நடிகர்கள் பட்டியல் நீளும். விநாயகனுக்கும் அந்த இடம் உண்டு. ஆனால் இந்தப் படத்தில் இப்பேர்ப்பட்ட பாத்திரத்தில் அவரை நடிக்க வைத்ததெல்லாம், படம் முடிந்த பின்னரும் எழும் பிரமிப்பு.
வழக்கமாக ஒரு கொடூரனாகப் பாத்திரங்களை ஏற்று நடிப்பவர் இங்கே மாறுபட்டு ஒரு போலீஸ் புலனாய்வாளாராக நடித்தது தான் படத்தைத் தூக்கி நிறுத்துகிறது.
பொதுவாகத் தாம் சார்ந்த துறைகளில் இருப்போர் ஒரு
கட்டத்தில் மனச்சிதைவுக்கு உள்ளாகி எதிர்மாறான தளத்துக்குப் போகும் உளவியல் போக்கை, கொலையை நேசிக்கும் தீவிரத் தொடர் கொலையாளியை வைத்துக் கதை பின்னப்பட்டிருக்கிறது. ஆனால் கசாப்புக்கடை வன்முறை இங்கே இல்லை.
தமிழக, கேரளக் கரையோரப் பகுதியில் நடப்பதாகக் கதை பண்ணியிருப்பது இயக்குநரின் சாமர்த்தியம். அதுவும் அந்தக் கொலையாளி தமிழ்ப் பாடல் விரும்பியாகக் காட்டிக் கொள்வதும் படம் நெடுகப் பயணிக்கிறது. ஏற்கனவே தமிழ் சினிமாவில் வராத பாடல்களாக ஆனால் 80கள் 90களில் வந்த பாடல்கள் போலப் பாடல்களை உண்டுபண்ணியிருக்கிறார்கள்.
இப்போது AI தொழில் நுட்பத்தில் அச்சு அசலாக அந்தந்தக் காலத்துப் பாடல்கள் போல உருவாக்கலாம் என்பதால் Copyright சிக்கலைத் தவிர்க்க எதிர்காலத்தில் அப்படியான முறைமைகள் எழலாம்.
மம்முட்டியின் பின்னணியைக் கொஞ்சம் விசாலப்படுத்தி இருக்கலாம். சில இடங்களில் அவரின் பாத்திரத்துக்குப் பொருத்தமில்லாத முதிர்வுத்தன்மையும் தொனிக்கிறது. ஸ்டைலாக சிகரெட் பற்ற வைத்துக் கொள்ளுமிடத்தில் சின்ன முத்திரை பதிக்கிறார்.
பொய்ப் பெயர் சொல்லி விடுதியில் தங்குவதற்கு அடையாள அட்டை கேட்கும் போது அதில் உண்மையான பெயர் இருக்கிறதே? அதை அந்தப் புத்திசாலிக் கொலைகாரன் யோசிக்க மாட்டானா?
ஒரு மர்ம நாவலைப் பிரித்துப் படிப்பதுபோலவே காட்சிகள் ஒவ்வொன்றையும் உப தலைப்புகளோடு கொண்டு போயிருப்பது புதுவகை உத்தி. குற்றவாளியோடே இருந்து கொண்டு குற்றவாளியைத் தேடும் பரபரப்பான காட்சிகளோடு பயணிப்பதால் படம் ஆரம்பித்து முடியும் வரை ஏகத்துக்கும் விறுவிறுப்பு.
இயக்குநர் ஜித்தின் கே.ஜோஷ் உடன் ஃபைசல் அலியின் ஒளிப்பதிவும், முஜீப் மஜீத் இன் இசையும் சேர்ந்து மகா பலம் காட்டுகிறார்கள்.
படம் முடிந்த பின்னரும் விநாயகன் வியாபித்து நிற்கிறார்.
