‘பைசன்’ திரைப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் அமீர் உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.
அவர் கூறியதாவது:
“துருவை நீங்கள் சமீபத்தில் தான் அறிந்திருப்பீர்கள், ஆனால் நான் அவரை 1999-ல் பார்த்தவன். சினிமா எவ்வளவு விசித்திரமானது என்பதைக் கவனித்துக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில், என் மனதில் பல நினைவுகள் ஓடிக்கொண்டிருந்தன.
விக்ரம் சார் என் மிகவும் நெருங்கிய நண்பர் — ஆனால் அதைப் பற்றி நாங்கள் ஒருபோதும் சினிமா உலகில் பேசிக் கொண்டதே இல்லை. அவர் எவ்வளவு உழைப்பாளர் என்பதை நெருக்கமாக பார்த்தவன் நான். ‘சேது’ படத்தின் முதல் நாள் பூஜையிலிருந்து ரிலீஸ் வரை நான் அவருடன் இருந்தேன்.
அந்த காலத்தில் துருவ் சுமார் இரண்டு வயது குழந்தைதான். பெசன்ட் நகர் வீட்டில் எதையாவது கேட்டு அடம் பிடிப்பார்; அப்போது நான் அவரை தூக்கிக்கொண்டு கடைக்கு செல்லுவேன். மிகவும் அன்பான, ஆனால் கடுமையான பெற்றோர்கள்.
பின்னர், சுமார் பத்து வருடங்கள் கழித்து, விக்ரம் சார், அவருடைய மனைவி, மகள் ஆகியோருடன் டின்னர் ஒன்றுக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது துருவும் வழக்கம்போலவே சுறுசுறுப்பாக விளையாடிக் கொண்டிருந்தார்.
அதன்பிறகு அமெரிக்கா சென்று படித்து வந்தார். இப்போது ‘பைசன்’ படத்தில் துருவை பார்த்த போது, ‘சேது’ படத்தில் விக்ரத்தை பார்த்த அந்த தருணம் மீண்டும் என் கண்முன் தோன்றியது. அதே தீவிரம், அதே ஆற்றல்!” என அமீர் பெருமையுடன் கூறினார்.
