தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த இன்டர்வெல் காட்சி “மாமன்னன்”

தமிழ் சினிமாவில் இன்டர்வெல் காட்சி என்றாலே சென்ற தலைமுறைக்கு ராம்கி, அருண் பாண்டியன் நடித்த இணைந்த கைகள் படத்தின் இடைவேளைக் காட்சிதான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு ஓர் இம்பாக்டை ஏற்படுத்திய இடைவேளைக் காட்சிகள் ஏற்கனவே வசூல் சாதனை படைத்த பெரிய ஹீரோக்களின் படங்களில் வந்திருந்தாலும் இரண்டு இளம் நாயகர்கள் நடிக்கும் படத்தில் இப்படி ஓர் இடைவேளைக் காட்சியை மக்கள் எதிர்பார்க்கவில்லை என்பதாலேயே அதன் தாக்கம் இன்னமும் நினைவில் நிற்கிறது.

இந்திய சினிமாக்கள் படச்சுருள்களில் (தமிழில் ஃபில்ம் ரீல்) படமாக்கப்பட்டு வந்த காலத்தில் ஒரு ரீல் என்பது 11 நிமிடங்களுக்கான காட்சி. ஆக, தியேட்டரில் ப்ரொஜெக்டரில் எட்டிலிருந்து ஒன்பது ரீல் தொடர்ச்சியாக ஓட்டிய பிறகு, ரீல் மற்ற அவகாசம் தேவைப்படுவதாலேயே இடைவேளை என்ற ஒரு பழக்கம் உருவானது.

ஆனால், ஹாலிவுட் படங்களில் இப்படிப்பட்ட இடைவேளை கிடையாது. இயக்குநர் மிஷ்கின் இதைப்பற்றிப் பேசும்போது “மனித உடலின் ப்ளாடர் 90-92 நிமிடங்கள்வரை தாக்குப் பிடிக்கும். அதன்பிறகு சிறுநீர் கழிக்க வேண்டி இருக்கும் என்பதாலேயே ஆரம்ப கால ஹாலிவுட் திரைப்படங்கள் 90 நிமிடங்களில் முடிந்துவிடும்” என்று சொல்வார்.

கடந்த பத்தாண்டுகளில் வெளியான திரைப்படங்களில் அட்டகாசமான ஓர் இடைவேளைக் காட்சி என்றால், அது என்னைப் பொருத்தவரையில், இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களின் கைவண்ணத்தில் வெளியான மாமன்னன் படத்தின் இன்டர்வெல் காட்சிதான்.

கோச்சிங் இன்ஸ்டிட்யூட்டில் பேப்பர்களுக்கு மத்தியில் களைத்துப்போய் படுத்திருக்கும் உதயநிதிக்கு அவரது அம்மா ஃபோனில் அழைக்கும் காட்சியில் இருந்து இந்த இடைவேளைக் காட்சி துவங்குகிறது. இன்னொருமுறை அந்த வீடியோவைப் பாருங்கள். படிக்கட்டில் வடிவேலுவும் அவரது மனைவியும் அமர்ந்திருக்க, ஜன்னல் வழியாக சூரிய ஒளி இவர்களைக் கடந்து செல்வது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

சொல்லப்போனால், நம்பிக்கையின் ஓர் ஒளிக்கீற்று நம்மைக்கடந்து செல்வதைப்போலவே இந்தக் காட்சி இருக்கும்.

பல ஆண்டுகளாக பேசாமல் இருக்கும் மகனிடம் வடிவேலு வேண்டுகோள் வைக்க (Lower Angle Shot), உதயநிதி பைக்கில் கிளம்பிச் செல்கிறார். அடுத்து வரப்போகும் சம்பவங்களுக்கு அறிவிப்பு செய்வதைப்போல சீறிவரும் ஒரு காளையின் சிலையையும் உதயநிதி அவர்களையும் ஒரே ஷாட்டில் வைத்து நம்மை தயார்ப்படுத்திவிடுவார், இயக்குநர்.

வீட்டிற்கு நுழையும் முன்பாக ஒரு ஸ்பீட் ப்ரேக்கர், காளைக்கு ஆகாத சிவப்பு வண்ணத்தில் ஒரு கார் என்று குறியீடுகளாக தொடரும் காட்சிக்கு மத்தியில் அதிவீரனான உதயநிதி பஹத் பாசிலை நேரில் சந்திக்கும்போது ஒரு குதிரை கனைக்கும். இதன்பிறகான ஒவ்வொரு காட்சியுமே திரைக்கதை எழுதுபவர்களுக்கான பாடம்.

• பஹத்பாசில் சிகரெட் லைட்டரை பற்ற வைக்க முயற்சித்துக் கொண்டிருப்பார். ஐந்துமுறை முயற்சித்தும் பற்றாத லைட்டர், முதன்முறையாக அதிவீரன் “அப்பா” என்று சொன்னதும் பற்றிக்கொள்ளும்.

• அதிவீரன் அப்பாவை நாற்காலியில் இரண்டுமுறை உட்காரச் சொல்வார். மாமன்னன் மூன்றுமுறை மறுத்து மகனை உட்காரச் சொல்வார். அப்போது பஹத்பாசில் “தம்பி, அப்பா உடகார மாட்டார். அது ரொம்ப நாள் பழக்கவழக்கம்” என்று சொல்ல, அதிவீரன் கோபத்துடன் அப்பாவைப் பார்ப்பார்.

• லாயத்தில், கலகத்தின் நிறமான கருப்பு வண்ணத்தில் இருக்கும் ஒரு குதிரை கோபத்துடன் உஷ்ணப் பெருமூச்சு விட்டு கனைக்கும். தூரத்தில் மணியோசை ஒலிக்கத் துவங்கும்.

• ”எங்கள் வீட்டில் யார் சொன்னாலும் உடகார மாட்டார்” என்று பஹத்பாசில் சொல்ல, அதிவீரன் “நீங்க சொன்னீங்களா?” என்று கேட்பார். அதுவரையில் Mid Shot Profileல் இருக்கும் கேமரா முதன்முறையாக Lower Angleல் Elevated Positionக்கு மாறும். இது எழுச்சிக்கான ஆரம்பம்.

• அடுத்து ஆரம்பிக்கும் ஒரு Chain Reaction Seceneதான் கடந்த பத்தாண்டுகளில் வந்த தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த இடைவேளைக்கான Lead Scene.

• பஹத்பாசில் அதிவீரனைத் தள்ள, அவரது சகோதரன் அதிவீரனைக் கன்னத்தில் அறைய, பஹத்பாசில் மாமன்னைத் தள்ளிவிட, விழும் அப்பாவைத் தாங்கிப் பிடிக்கும் அதிவீரன் பஹத்பாசிலை நெஞ்சிலேயே எட்டி உதைக்கிறார்.

• அதற்கடுத்த காட்சிகள் யூட்யூபில் அதிகம் பார்க்கப்பட்ட பகுதிகளில் ஒன்று. அதிவீரனை ஓர் அடியாள் செங்கல்லால் அடிக்க, அப்போதுதான் முதன்முறையாக பின்னணியில் ஒரு பெரிய படம் ஃப்ரேம் செய்யப்பட்டு மாட்டப்பட்டிருப்பது தெரியும்.

• மாமன்னன் நாற்காலில் உட்கார்ந்திருக்க, அதிவீரனை அடியாட்கள் கட்டிப்பிடித்திருக்க, பஹத்பாசில் நெருங்கி வரும்போதுதான் அந்தப் படத்தின் கீழே எழுதப்பட்டிருப்பது முதன்முறையாக முழுமையாகப் படிக்கத் தெரியும்.

• “எங்கள் நெஞ்சில் துயிலும் அரசியல் கம்பீரம்” என்ற வசனம் ஸ்க்ரீனில் தெரியும்போதுதான் இந்தக் காட்சியின் உச்சம் துவங்குகிறது.

• வடிவேலு “டேய் வேலு, வேண்டாம்டா” என்று சொல்லும்போதுதான் நம் தலைமுறையின் மகத்தான மக்கள் கலைஞனான அவரை நாம் திரையில் நகைச்சுவை என்ற சோளப்பொறி மட்டுமே போட்டு வீணடித்திருக்கிறோம் என்ற உண்மை சுடுகிறது.

• பஹத்பாசில் “உங்க அப்பாவை நிக்க வைச்சது என்னோட அடையாளம், உன்னை உட்காரச் சொன்னது என்னோட அரசியல். பஞ்சப் பரதேசி. ஒரு நாள்ல எல்லாத்தையும் மாத்தப் பாக்குறியா?” என்று கேட்பார்.

• அடுத்த காட்சியில், ஜோதி பஹத்பாசிலை அறையில் வைத்துப் பூட்டிவிட, தன்னைப் பிடித்து வைத்திருக்கும் மூவரில் ஒருவரை அதிவீரன் எட்டி உதைக்க, அவன் அந்த Sit-Outல் இருக்கும் சங்கிலியை அறுத்துக்கொண்டு மேலிருந்து கீழே விழுவான். இதுவே ஒரு குறியீடுதான்.

• அடுத்தக் காட்சியில் ஓர் அடியாள் ஒரு கூஜாவை, கவனிக்கவும் கூஜாவை, தூக்கி எறிய, அதிவீரன் குனிந்துகொள்ள, அந்தக் “கூஜா” சுவற்றில் இருக்கும் அந்தப் படத்தில் பட்டு, அந்தப் படம் கீழே விழுகிறது. இந்த வீழ்ச்சியுமே ஒரு குறியீடுதான்.

• மிகச்சரியாக அடுத்த காட்சியில் அதிவீரனின் இரண்டு கால்கலுமே பூமியில் படாமல் எகிறிக் குதித்து பாய்வார்.

• கடைசியில் அனைவரையும் அடித்துவிட்டு அதிவீரனும் மாமன்னனும் கிளம்பும்போது, பஹத்பாசிலின் கார் கண்ணாடியை உடைப்பார். அதில் இருக்கும் ஸ்டிக்கர் வாக்கியம் மிகவும் முக்கியமானது – ”சமத்துவ, சமூக நீதி” .

• கண்ணாடி உடைந்த அடுத்த காட்சியில் பஹத்பாசில் சுவற்றில் இருக்கும் தனது படத்தை எடுத்துப் போட்டு உடைப்பார். அதன் ஃப்ரேம்கள் தனித்தனியாக உடைந்து சிதறும். கட்டுடைப்பின் பிம்பமாகவே அந்தக் காட்சியை நான் பார்த்தேன்.

• பைக்கில் மாமன்னனும் அதிவீரனும் கிளம்ப, Birds Eye Viewல் வாழ்க்கை ஒரு வட்டம் என்று காட்டும் கோணமும், கொடி பறக்க ஆரம்பிக்கும் காட்சியும், எதிர் திசையில் பைக் செல்லச் செல்ல மாண்டேஜ் காட்சிகள் திரையில் விரிய, ஸ்லோமோஷனில் அப்போதுமே மாமன்னன் உட்காராமல் நின்றுக்கொண்டிருப்பதை அப்போதுதான் நாம் காண்கிறோம்.

சொல்லப்போனால், மாமன்னன் நாற்காலியில் அமர்ந்த உடனேயே, இடைவேளையிலேயே முடித்திருந்தால், மாமன்னன் கடந்த பத்தாணடுகளில் வந்த திரைபடங்களில் மிக முக்கியமான இடத்தில் இருந்திருக்கும்.

இடைவேளைக்குப் பிறகான காட்சிகளில் இதே அளவிற்கான Momentum இல்லாததால், படம் அதற்கான உரிய மரியாதையைப் பெறவில்லை.

நீங்கள் பார்த்ததில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஓர் இடைவேளைக் காட்சியைச் சொல்லுங்கள், ப்ளீஸ்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

நீ ஹாய் சொன்னா போதும் ஒரு போதை ஒன்னு ஏறும்! ஆலியா பட்டின் கவர்ச்சியை பார்த்து ஸ்டன் ஆன தீபிகா! நடிகர்களின் மரணங்கள் – பின்னணி என்ன? நடிகைகளின் மரணங்கள் – பின்னணி என்ன? நீச்சல் உடையில் கணவருடன் கடலில் ஸ்ரேயா… வைரல் போட்டோ! வைரல் பாடகர் சத்யன் மஹாலிங்கம் பாடல்கள் பட்டியல்! கவர்ச்சி போஸில் கட்டி இழுக்கும் சமந்தா! த்ரிஷாவின் அழகிய புடவை கலெக்ஷன்! இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஸ்டில்ஸ்