தமிழ் சினிமாவின் இசை வரலாற்றை மறுஎழுதிய இளையராஜா, 1,500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்தவர். இசைத்துறையில் அவர் வழங்கிய பங்களிப்புக்காக பல்வேறு விருதுகள் பெற்றதோடு, மத்திய அரசு அவரை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்துள்ளது.
சமீபத்தில் லண்டனில் ‘வேலியண்ட்’ சிம்பொனியை வெற்றிகரமாக நடத்தி உலக பாராட்டைப் பெற்றார்.
வரும் 13ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை பெரியமேட் நேரு உள்விளையாட்டு அரங்கில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அவரது பொன்விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், தனது 50 ஆண்டு சினிமா பயணத்தை முன்னிட்டு, இளையராஜா கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் கொல்லூரில் அமைந்துள்ள மூகாம்பிகை அம்மன் மற்றும் வீரபத்ர சுவாமிக்கு 8 கோடி ரூபாய் மதிப்பில் வைர கிரீடம், வைர மாலை, தங்க வாள் ஆகியவற்றை காணிக்கையாக வழங்கினார்.
கோவில் வருகையின் போது, அவர் ஊர்வலத்தில் பங்கேற்று வழிபாடு செய்த பின்னர் நகைகளை அர்ச்சகர்களிடம் சமர்ப்பித்தார். இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மூகாம்பிகை அம்மனின் தீவிர பக்தராக விளங்கும் இளையராஜாவின் இந்த அன்பளிப்பு, பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
