ராதிகா சரத்குமார், சிங்கம் புலி, பாலசரவணன், அருள்தாஸ், முனீஷ்காந்த், இளவரசு , ரேச்சல், வேட்டை முத்துக்குமார் , ஜார்ஜ் மரியான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சிவகுமார் முருகேசன் இயக்கி உள்ளார் .நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு -விவேக் விஜயகுமார் . படத்தொகுப்பு சான் லோகேஷ், கலை இயக்கம் : ராமு தங்கராஜ் .பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.
யாருக்கும் அடங்காத ஓர் ஆளுமையாக பவுனுத்தாயி என்கிற தாய் கிழவியாக இருக்கும் ராதிகா அந்த ஊரையே ரவுண்டு கட்டி அடிக்கிறார். அவரைக் கண்டால் அனைவருக்கும் பயம். வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்பது அவரது போக்காக இருக்கிறது.சொந்த வீடு வாங்கி வட்டிக்கு விடும் தொழில் நடத்துகிறார். அடாவடி குணமும் யாருக்கும் அஞ்சாத மனமும் கொண்டவர். அவரது மகன்கள் பொறுப்பற்றவர்களாகச் சுற்றி திரிகிறார்கள் .அனைத்து அதிகாரங்களையும் தனக்குள் வைத்துக் கொண்டு குடும்பத்தை ஆட்டிப் படைக்கிறார்.தான் சம்பாதித்ததை தான் தான் அனுபவிக்க வேண்டும் அதிகாரம் அனைத்தும் தனக்கே என்கிற குணம் கொண்டவர் .
அது மட்டுமல்ல ஊரிருள்ள யாருக்கும் அஞ்சாமல் வலம் வருகிறார்.இப்படிப்பட்டவர் ஒரு நாள் படுக்கையில் விழுகிறார் . பக்கவாதம் போல் பேச்சு மூச்சில்லை .ஆனால் ஒரு கை மட்டும் அசைகிறது. விரலில் அபிநயம் பிடிக்கிற மாதிரி ஏதோ சொல்கிறார் .அவர் என்ன சொல்ல முனைகிறார் என்று அனைவருக்கும் குழப்பமாக இருக்கிறது . அது என்ன என்று பார்க்கிற போது ஆளாளுக்கு ஒன்று சொல்கிறார்கள் .அந்த ஊருக்கு வரும் ஒருவர், தான் மதுரையில் நகைக்கடை வைத்திருப்பதாகவும் அந்த தாய் கிழவி 160 பவுன் தன்னிடம் வாங்கியதாகவும் கூறுகிறார். அதை நம்பி தாய்க்கிழவியின் மூன்று மகன்களும் மருமகனும் அந்த நகையை அடையப் போட்டி போட்டுக் கொண்டு தேடி அலைகிறார்கள். அந்த நகை அவர்களுக்கு கிடைத்ததா? தாய் கிழவியின் உடல்நிலை என்ன ஆனது? என்பதே ’தாய் கிழவி’ படத்தின் மீதிக் கதை.
இதில் கருமாத்தூர் பவுனுத்தாயி பாத்திரத்தில் நடித்துள்ளார் ராதிகா.கையில் சுருட்டைப் புகைத்துக் கொண்டு ஆர்ப்பாட்ட நடை நடந்து ஈட்டிகாரனைப் போல வட்டி வசூல் செய்யும் அழகே தனி. தனது தோற்றத்தாலும் உடல் மொழி வசனம் ஒவ்வொரு அசைவிலும் அந்த பாத்திரத்திற்கு உயிர் ஊட்டியுள்ளார் .அவர் வசனம் பேசி, கைகளை அசைத்து துடைப்பத்தைக் கையில் எடுக்கும் போது ஊரே அலறுகிறது, தெறித்து ஓடுகிறது.தாய்க்கிழவியாக வேறொரு நடிகையை நினைத்துப் பார்க்க முடியவில்லை. ராதிகாவுக்கு உருவாகி இருக்கும் பிம்பம் அந்தப் பாத்திரத்தை மேலும் அடர்த்தியானதாக மாற்றி உள்ளது.அந்த பாத்திரத்திற்காக அவர் நடிப்புக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.பாம்படக் காது உடல் சுருக்கங்கள் என்று ராதிகாவுக்கு ஒப்பனை செய்தவரையும் பாராட்டலாம். சபாஷ்
அவரின் மகன்களாக ஆட்டோ ஓட்டுபவராக வரும் அருள்தாஸ், பூக்கடை வைத்திருக்கும் பால சரவணன், உப்பிலியான் சவுண்ட் சர்வீஸ் வைத்திருக்கும் கமல் ரசிகராக சிங்கம்புலி என மூவரும் தமக்கு கொடுத்த பாத்திரங்களில் சரியாக வெளிப்பட்டுள்ளார்கள் .அவர்களது பாத்திரப் சித்தரிப்பும் தனித்துவத்தோடு உள்ளது.அதில் அவர்கள் சரியாக பொருந்தி வெளிப்பட்டுள்ளார்கள்.ராதிகாவின் ஒரே மகளாக வரும் ரேச்சலும் குணச்சித்திரத்தில் நற்சித்திரம் வரைகிறார்.40 வயதுக்கு மேல் திருமணம் செய்ய விரும்புவராக பென்னிகுயிக் பாத்திரத்தில் முனீஷ்காந்த் வருகிறார்.
ராதிகாவின் குடிகார மருமகன் வேட்டை முத்துகுமார், 3 மருமகள்கள், ஊரில் உள்ள அந்த கருப்பசாமிக்கு காவல் காக்கும் குடிகார தாத்தா என எல்லாரும் கண் முன் நிஜ பாத்திரங்களாக உலவுகிறார்கள்.
படத்திற்கு ஏற்ற ஒளிப்பதிவின் மூலம் படம் பார்ப்பவர்களை எல்லாம் மதுரைச் சீமையில் கொண்டு நிறுத்தி காட்சிகளை கண்முன் நிறுத்திக் காட்டுகிறார் ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார் .ஒவ்வொரு காட்சியிலும் அந்த மண்ணும் மனிதர்களும் அழகாகப் பதிவாகியுள்ளது சிறப்பு.
அதேபோல் கலகலப்பான இசை வழங்கி திரையரங்குக்கான படமாக மாற்றியுள்ளார் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா.
முதல் பாதி பாட்டியின் அடாவடிகள் என்று சென்று அவர் நோயில் விழுவது ,பின் மகன்களின் அலைபாயுதலென்று சென்றாலும் இரண்டாவது பாதியில் கனமான விஷயங்களை படத்தில் வைத்து இதனை அனைவருக்கும் படமாக மாற்றி இருக்கிறார் இயக்குநர் சிவகுமார் முருகேசன்.அது மட்டும் அல்லாமல் பெண்கள் யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது ,தன் காலில் நிற்க வேண்டும் , வாய்த்ததே வாழ்க்கை என்று வாழக்கூடாது ஒரு கட்டத்தில் பொருத்தமற்ற வாழ்க்கை இருந்தால் அதைத் துறந்து மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற கருத்தும் அது சார்ந்த காட்சிகளும் ராதிகா மூலம் சொல்லப்படும்போது அதற்கு அழுத்தம் கூடுகிறது.
ஒவ்வொரு மனிதரும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது எவ்வளவு கீழ்மையாளர்களாக மாறுகிறார்கள் என்பதையும் இயக்குநர் பல்வேறு பாத்திரங்களை வைத்து காட்சிகள் மூலம் காட்டியுள்ளார்.
மருத்துவமனையில் நடக்கும் உரையாடலில் ஆங்கிலம் தெரியாதவர்களிடம் ஆங்கிலம் பேசுவது பற்றிய காட்சி சிந்திக்க வைப்பவை.
பெண்களுக்கு உதாரண பாத்திரமாக மட்டுமல்ல நம்பிக்கையூட்டும் பாத்திரமாகவும் ராதிகா ஏற்று உள்ள பவுனுத்தாயி பாத்திரத்தை முன்வைத்து கருத்து கூறியுள்ளார் இயக்குநர்.ராதிகாபெண்களின் தற்சார்பு பற்றிப் பேசும் வசனங்கள் ஆழமானவை, அழுத்தமானவை.
கமல் ரசிகராக வரும் சிங்கம் புலி செய்யும் அலப்பறைகள் ரசிக்க வைப்பதுடன் ஆங்காங்கே சூழல்களில் ஏற்ற மாதிரி ஒலிக்கும் கமல் படப் பாடல்கள் அந்தக் காட்சிகளுக்கு மேலும் சுவாரஸ்ய அழகூட்டுகின்றன. கடைசியில் கல்யாணக் காட்சியில் ஒலிக்கும் ’கடவுள் அமைத்து வைத்த மேடை’ வரை இது தொடர்கிறது.
வழக்கமான வணிகச் சூத்திர கதைகளிலிருந்து மாறுபட்டு ஒரு கிழவியை மையமாக வைத்துப் படம் எடுப்பதற்குத் தைரியம் வேண்டும். அதைத் தயாரிக்கவும் நல்மனம் வேண்டும் எனவே இயக்குநர் தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினரை வாழ்த்திப் பாராட்டலாம்.
மொத்தத்தில் இந்த தாய் கிழவி வெல்வாள்
