அஞ்சாதே படத்தில் இருக்கும் பல காட்சிகளைப் பற்றி இன்றும் பலர் மணிக்கணக்கில் பேசுவார்கள். அதிலும் குறிப்பாக,
• நரேன் அந்த பாட்டியை பைக்கில் அழைத்துச் செல்லும் காட்சி
• இறுதியில் குருவி இறக்கும்போது கைகளை அகல விரித்து, பறப்பதைப் போன்ற காட்சி
• தரையில் உடைந்து கிடக்கும் வாஷ்பேசினில் பிரசன்னா கையைக் கழுவுதல்
என்று பல காட்சிகள், ஷாட்கள் இந்தப் படத்தில் இருக்கிறது. இதெல்லாமே மேலோட்டமான காட்சிகள்.
ஆனால், அந்தப் படத்தில் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒரு காட்சி இருக்கிறது. அது மேலோட்டமாகப் பார்க்கிறவர்களுக்கு கேமரா ஆங்கிள் ஷாட் போலத்தான் தெரியும். ஆனால், அந்த ஒரு கோணத்தில் வேண்டுமென்றே படமாக்கி, அதையே ஒரு குறியீடாக்கி மிஷ்கின் நமக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறார்.
Interval முடிந்த பிறகு வரும் முதல் காட்சியில், நரேன் மருத்துவமனையில் விஜயலட்சுமியிடம் மருத்துவ செலவுக்காக பணத்தைக் கொண்டு வந்து கொடுப்பார். அப்போது மாடிப்படியில் இருந்து அஜ்மல் இறங்கி வருவார்.
அந்தக் காட்சியை மறுபடியும் நன்றாகப் பாருங்கள்.
அதில் அஜ்மலின் தலை தெரியவே தெரியாது.
இந்த இடத்தில்தான் அஜ்மலின் கேரக்டர் Transformation ஆகி அவன் ஒரு தீயவனாக மாற ஆரம்பித்திருக்கும் நேரம். மகேஷ் முத்துசாமி கேமரா ஆங்கிளை வைக்கும்போது, மிஷ்கின் Specific ஆக இப்படி வைக்கச் சொன்னார்.
தான் வைத்த ஒரு காட்சியை மற்றவர்கள் சிலாகித்து, அதில் ஒரு குறியீடு இருப்பதாகச் சொன்ன பிறகு, “ஓ அப்படியா?” என்று சொல்வதற்கும், Blatantly இப்படி ஒரு காட்சியை வைப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
இந்தக் காட்சியைப் பற்றிச் சொல்லும்போது, மிஷ்கின் இப்படித்தான் சொல்வார். அந்த சீனை காட்சிப்படுத்தும்போது, மிகவும் Deliberate ஆக அவனது தலையைக் காட்டக்கூடாது என்று விரும்பினார்.
ஏனென்றால், இந்தக் காட்சியில்தான் அவன் கெட்டவன். ”$*%, அவன் தலையை வெட்டுடா”ன்னு ஓர் இயக்குநர் தனது பார்வையாளர்களை சொல்ல வைக்கும் கட்டம்.
தன்னுடைய Craftஐப் பற்றி முழுமையாகத் தெரிந்த ஒரு படைப்பாளி அவனது ரசிகர்களுடன் ஒருவகையான ஆட்டம் ஆடுவார். அவரது படைப்பின் மூலமாக தனது ரசிகர்களை, அவர்களது ரசனையை இன்னொரு தளத்திற்கு உயர்த்த அவர் தொடர்ச்சியாக இயங்கி வருவார்.
இதுபோன்ற படைப்பாளிகளுக்கு வாசகர்கள் / ரசிகர்களாகிய நாம் செய்யும் மிகப்பெரிய உதவி என்ன தெரியுமா?
இதுபோன்ற காட்சிகளை, சம்பவங்களை உணரும்போது அவற்றை அவர்களிடமே எடுத்துச் சொல்லி, இதுபோன்ற ஒரு காட்சி வைத்ததற்காக நன்றி சொல்வதுதான். ஏனென்றால், படைப்பாளிகள் எதிர்பார்க்கும் மிகப்பெரிய விஷயமே இதுபோன்ற அங்கீகாரத்தைத்தான். பல லட்சம் மக்கள் பார்க்கும் ஒரு திரைப்படத்தில் தான் வைத்த ஒரு காட்சியை ஒரு சிலர் மட்டுமே புரிந்து, அதை சிலாகித்துப் பேசும்போதுதான் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
இதைப்போல தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத காட்சி / சிலாகித்துப் பேசப்படாத காட்சி ஏதேனும் உங்கள் நினைவில் வந்தால், இங்கே கமெண்ட்டில் சொல்லுங்களேன்.
