சாந்தோஷ் குருவில்லா, பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் பல்டி. இந்த படத்தின் மூலம் உன்னி சிவலிங்கம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
படத்தில் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில், ஷேன் நிகம் நாயகனாகவும், ப்ரீதி நாயகியாகவும் நடித்துள்ளனர்.
சாய் அபயங்கர் இசையமைப்பாளராக இந்த படத்தில் அறிமுகமாகிறார். பல்டி செப்டம்பர் 26ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
அப்போது இயக்குநர் உன்னி சிவலிங்கம் கூறியதாவது:
“இது என் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு. படம் மலையாளத்தில் எடுக்கப்பட்டாலும், தமிழ்நாட்டில் சந்திப்பை நடத்த முடிவு செய்தோம். இப்படம் 60% மலையாளமும், 40% தமிழும் கொண்ட படம். அதிரடி படமாக எடுக்கவேண்டும் என நினைத்தேன். அதற்கு விளையாட்டை மையமாகக் கொண்டு செல்வது சுவாரஸ்யமாக இருக்கும் என்று கபடியில் மையப்படுத்தி இயக்கினேன்.
சாய் அபயங்கரின் கச்சிசேரா ஆல்பத்தை பார்த்த பிறகுதான் அவரை இசைக்காகத் தேர்ந்தெடுத்தேன். அவர் தொடர்ந்து என்னுடன் உறுதுணையாக இருக்கிறார். ஷேன் நிகம் சிறப்பாக நடித்துள்ளார். சாந்தனுவிடம் கதையை சொன்னபோது அவர் விரும்பி, 25 நாள்களிலேயே தனது படப்பிடிப்பை நிறைவு செய்தார். சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், படத்திற்காக எல்லோரும் மனமுவந்து உழைத்தனர்.
ப்ரீதியிடம், அயோத்தி படத்தில் போல அழுதுக்கொண்டே இருக்காமல், வசனங்களையும் சொல்ல வேண்டும் என்று கூறினேன். அப்போது, ‘எனக்கு மலையாளம் தெரியாது’ என்றார். நான், ‘இங்கே பலருக்கும் தெரியாது’ என்று கூறினேன். பின்னர் அவர் பயிற்சி பெற்று நன்றாக நடித்தார்.
இந்த படத்தில் பல புதிய ஆக்ஷன் ட்ரிக்ஸ் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, அவற்றை கபடியில் எப்படி பயன்படுத்தலாம் என்று யோசித்து செய்துள்ளோம். அல்போன்ஸும் படத்தில் நடித்துள்ளார். பல தமிழ்க் கலைஞர்களும் இருப்பதால், டப்பிங்கிற்கும் சிறப்பாக கவனம் செலுத்தியுள்ளோம்,” என்றார்.
