முன்னதாக, “மாதம்பட்டி ரங்கராஜ் என்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார்; வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் தந்தை” என கூறி, ஜாய் கிரிஸில்டா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். மேலும், இருவருக்குமிடையிலான நெருக்கமான புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார்.
ஆனால், புகாருக்கு பிறகும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து, சென்னை சேப்பாக்கில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் ஜாய் கிரிஸில்டா மீண்டும் புகார் அளித்துள்ளார்.
வழக்கறிஞரும் மக்களவை உறுப்பினருமான சுதாவுடன் சென்ற அவர், மகளிர் ஆணையத் தலைவி குமாரியிடம் மனுவை அளித்தார். அந்த மனுவில், “மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதோடு, தன்னைப் போல 10 பெண்களையும் ஏமாற்றியுள்ளார்” என்று கூறியுள்ளார்.
இது குறித்து வழக்கறிஞர் சுதா, “ஜாய் கிரிஸில்டாவை ஏமாற்றியது போலவே 10க்கும் மேற்பட்ட பெண்கள் இதே குற்றச்சாட்டை எங்களிடம் தெரிவித்துள்ளனர். அவற்றைச் சேகரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கிறோம். அந்த பெண்களும் விரைவில் ரங்கராஜ் மீது வழக்கு தொடரவுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ஜாய் கிரிஸில்டா, “எனக்கும் என் குழந்தைக்கும் ஏதேனும் நிகழ்ந்தால் அதற்குப் பொறுப்பே மாதம்பட்டி ரங்கராஜ் தான்” என்று எச்சரித்துள்ளார்.
