நாயகன் பிரதீப் ரங்கநாதன், தனது நண்பர்களுடன் சேர்ந்து ‘சர்ப்ரைஸ் டியூட்’ என்ற பெயரில் பலருக்குப் பிறந்தநாள் சர்ப்ரைஸ்களை ஏற்பாடு செய்து வருகிறார். இவருக்கு துணையாக தாய்மாமா மகள் மமிதா பைஜு இருக்கிறார். இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.
ஒரு கட்டத்தில் மமிதா பைஜுவுக்கு பிரதீப்பின் மீது காதல் உருவாகிறது. ஆனால் பிரதீப், “நான் உன்னை நண்பியாகத்தான் பார்க்கிறேன்” என்று கூறி அந்தக் காதலை மறுக்கிறார்.
ஆறு மாதங்கள் கழித்து, பிரதீப்புக்கே மமிதா பைஜுவின் மீது காதல் வருகிறது. ஆனால் இப்போது மமிதா, வேறொருவரை காதலிக்கிறேன் என்று தெரிவிக்கிறார். இதனால் பிரதீப், அவளை அந்தக் காதலருடன் சேர்த்து வைக்க முடிவு செய்கிறார். ஆனால் அதற்குள் சரத்குமார், பிரதீப் மற்றும் மமிதா இருவருக்கும் திருமண ஏற்பாடுகளை செய்து விடுகிறார்.
இறுதியில் பிரதீப், மமிதாவைத் தான் திருமணம் செய்கிறாரா? அல்லது அவளை அவளது காதலருடன் சேர்த்து வைக்கிறாரா? என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.
நடிப்பு
பிரதீப் ரங்கநாதன், தன் இயல்பான நடிப்பு பாணியில் அசத்தியுள்ளார். காதல், நகைச்சுவை, உணர்ச்சி, சோகம் என அனைத்திலும் சரியான அளவில் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக பாத்ரூமில் அழும் காட்சி மனதை உருக்கும்.
மமிதா பைஜு, துள்ளலான தோற்றத்திலும், உணர்ச்சி மாறுகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். பிரதீப்புடன் சண்டை, கோபம், மகிழ்ச்சி என ஒவ்வொரு காட்சியிலும் ரசனை கொடுக்கிறார்.
சரத்குமார், தனது அனுபவத்தை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார். காமெடி, வில்லத்தனம், ஜாதி வெறி என பல முகங்களை ஒரே கதாபாத்திரத்தில் அழகாக இணைத்துள்ளார்.
இயக்கம்
இயக்குனர் கீர்த்தீஸ்வரன், இன்றைய இளைய தலைமுறைக்கு ஏற்ப ஜாதி என்ற தீய எண்ணத்தை நயமாக கையாண்டுள்ளார்.
“வேற ஜாதி பிடிக்கவில்லை என்று சொல்லுபவர்கள் சாகுங்கள்; ஆனால், ஏன் மற்றவரை சாககடிக்கிறீர்கள்?” என்ற கேள்வியை வலுவாக முன்வைத்திருக்கிறார்.
காதல், நட்பு, காமெடி, சமூக செய்தி என அனைத்தையும் இணைத்து திரைக்கதை ஓட்டத்தை விறுவிறுப்பாக அமைத்துள்ளார். படம் முழுவதும் ஒரு நல்ல மெசேஜுடன் நகைச்சுவையையும் உணர்ச்சியையும் இணைக்கிறார்.
இசை & தொழில்நுட்பம்
சாய் அபயங்கர் இசையில் பாடல்கள் இனிமையாகவும், பின்னணி இசை கதைக்கு வலு சேர்க்கும் வகையிலும் அமைந்துள்ளது.
நிகேத் பொம்மி ஒளிப்பதிவு காட்சிகளை அழகாகப் பிடித்துள்ளார். ஒவ்வொரு ஷாட்டும் கண்களுக்கு விருந்தாக தெரிகிறது.
மொத்தத்தில், “டியூட்” ஒரு காதல், நட்பு, சமூகவியல் கலந்த படம்.
சிறிய காதல் கதை போலத் தோன்றினாலும், அதன் உள்ளே பெரிய சமூகப் பொருள் ஒளிந்துள்ளது.
