வடசென்னையின் கடலோர பகுதியில் கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு திட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்தத் திட்டம் காரணமாக தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மீனவர்கள் கடுமையாக எதிர்த்து போராடுகிறார்கள். போராட்டத்தின் போது சாய்குமாரின் இரு நண்பர்கள் உயிரிழக்கிறார்கள். இதனால் மனவேதனையடைந்த சாய்குமார், கச்சா எண்ணெயை ரகசியமாக திருடி விற்று, அதிலிருந்து கிடைக்கும் பணத்தில் மீனவர்களுக்கு உதவி செய்கிறார்.
காலப்போக்கில் சாய்குமார் பெட்ரோல் பங்கு உரிமையாளர் சங்க தலைவராக உயர்கிறார். அவரது வளர்ப்பு மகனான ஹரிஷ் கல்யாண், கச்சா எண்ணெயை சட்டப்படி பிரித்தெடுத்து தனியார் தொழிற்சாலைக்கு அனுப்பி, அங்கிருந்து தயாராகும் பெட்ரோல், டீசலை பங்குகளுக்கு வழங்கும் பொறுப்பை ஏற்கிறார்.
இவர்களுக்கு எதிரியாக விவேக் பிரசன்னா வருகிறார். அவர் சாய்குமாரின் லாரிகளில் இருந்து பெட்ரோல், டீசலை திருடி கலப்படமாக மாற்றுகிறார். இதில் போலீஸ் அதிகாரியான வினயும் கைதூக்குகிறார். கலப்படம் நடப்பதை அறிந்த ஹரிஷ் கல்யாண், விவேக் பிரசன்னாவிடம் விளக்கம் கேட்க, அவன் தனக்கும் குழாயில் இருந்து எண்ணெய் எடுக்க அனுமதி வேண்டும் என கோருகிறான். இதனால் ஹரிஷ் கல்யாண் மற்றும் வினய் இடையே கடுமையான மோதல் ஏற்படுகிறது. பின்னர் ஹரிஷ் தலைமறைவாகிறார்.
இதற்கிடையில், வினய் மற்றும் விவேக் பிரசன்னா கச்சா எண்ணெயை கைப்பற்ற சதி திட்டங்களை தீட்டுகிறார்கள். இதை அறிந்த ஹரிஷ் கல்யாண், இறுதியில் அவர்களை எவ்வாறு சமாளித்து பெட்ரோல்–டீசல் பிரச்சனையை தீர்க்கிறார் என்பதே கிளைமாக்ஸ்.
நடிகர்கள்
மாஸ் ஆக்ஷன் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண் தன் முழுத் திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார். சாய்குமார் தனது அனுபவத்தை வெளிப்படுத்தும் சிறந்த நடிப்பை தந்துள்ளார். வினய் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். விவேக் பிரசன்னா, சச்சின் கடேகர், கருணாஸ், ரமேஷ் திலக் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை நன்கு செய்துள்ளனர். அதுல்யா தன் பாத்திரத்துக்கு ஏற்ப நச்சென நடித்துள்ளார்.
இயக்கம்
இயக்குனர் சண்முகம் முத்துசாமி மீனவர்களின் வாழ்வாதாரம், கச்சா எண்ணெய் அரசியல், மீன்பிடி பிரச்சனை ஆகியவற்றை இணைத்து ஒரு சிக்கலான ஆனால் முக்கியமான கதையை எடுத்துள்ளார். முதல் பாதி வடசென்னை நினைவூட்ட, இரண்டாம் பாதி கத்தி பாணியை ஒத்துள்ளது. எனினும், சில இடங்களில் கதை மெதுவாகச் செல்கிறது; சில இடங்களில் திடீரென வேகம் பெறுகிறது. பல லாஜிக் பிழைகள் தென்படுகின்றன.
இசை
திபு நினன் தாமஸின் பாடல்கள், பின்னணி இசை இரண்டும் படத்தின் உணர்வை உயர்த்துகின்றன.
ஒளிப்பதிவு & தொகுப்பு
ஒளிப்பதிவு பாராட்டத்தக்கது. கடலோர காட்சிகளும் இரவுக் காட்சிகளும் அழகாக படமாக்கப்பட்டுள்ளன. தொகுப்பில் இன்னும் சிறிது தீவிரம் கொடுத்திருக்கலாம்.
மொத்தத்தில், கச்சா எண்ணெய் அரசியலை மையமாகக் கொண்ட சமூக–ஆக்ஷன் படம், சில குறைகள் இருந்தாலும் அதன் நோக்கத்தால் பாராட்டத்தக்கதாக இருக்கிறது.
