கிராமத்தைச் சேர்ந்த துருவ் விக்ரம், பள்ளியில் படிக்கும் இளைஞன். அவருக்கு கபடி விளையாட்டில் பெரும் ஆர்வம். ஆனால், “கபடி வீரனாக இருந்தால் பிரச்சனைகள் வரும், விரோதம் வரும்” என்று அப்பா பசுபதி எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதேசமயம், அக்கா ரெஜிசா விஜயன் தம்பியின் ஆசைக்கு துணை நிற்கிறார். இதனால், பெரிய கபடி வீரனாக உருவாக வேண்டும் என்ற கனவுடன் துருவ் விக்ரம் போராடுகிறார்.
அவரது கிராமத்தில் அமீரும் லாலும் இரண்டு ஜாதி தலைவர்களாக இருந்து, இடையிடையே மோதிக் கொண்டே இருப்பார்கள். இந்த விரோதங்கள் துருவின் கபடி கனவிற்கு தடையாக மாறுகின்றன. இறுதியில், அந்த தடைகளை கடந்து துருவ் விக்ரம் தனது இலக்கை அடைகிறாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்த துருவ் விக்ரம் தனது சிறந்த நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். கதாபாத்திரத்துக்கேற்ற உடல் அமைப்பு, உடல் மொழி, உணர்ச்சி வெளிப்பாடுகள் என அனைத்தும் கச்சிதமாக அமைய, அவரது கடின உழைப்பு வெளிப்படையாகத் தெரிகிறது. சாதிக்க முடியாத ஏக்கம், காதல் என பல்வேறு உணர்வுகளில் துருவ் சிறப்பாக நடித்து இருக்கிறார்.
நாயகியாக நடித்த அனுபமா பரமேஸ்வரன், துருவை உறுதியுடன் காதலிப்பதும், குடும்பத்திற்கு எதிராகச் சென்று தனது காதலை காப்பாற்ற முயலும் விதமும் கவனிக்க வைக்கிறது.
பசுபதி தனது மகனுக்காக வருந்தும் தந்தையாக சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது உணர்ச்சி காட்சிகள் படத்திற்கு வலிமை சேர்க்கின்றன. அதேபோல், பாசமான அக்காவாக ரெஜிசா விஜயனும் மனதில் நிற்கிறார்.
ஜாதி தலைவர்களாக வரும் அமீரும் லாலும் தங்களின் அனுபவத்தால் கதைக்கு ஆழம் சேர்த்துள்ளனர். குறிப்பாக அவர்கள் பேசும் வசனங்கள் நினைவில் நிற்கும் வகையில் உள்ளன.
இயக்குநர் மாரி செல்வராஜ், குறிப்பிட்ட சமூகத்தின் வாழ்க்கைப் போராட்டங்களை மையமாகக் கொண்டு கதை அமைத்துள்ளார். கதாபாத்திரங்களிடையே திறமையாக நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், திரைக்கதையில் சற்றே பலவீனம் காணப்படுகிறது. பிளாஷ்பேக்குகள் தேவையற்ற முறையில் ஒன்றின் மீது ஒன்று சேர்த்தது கதையின் ஓட்டத்தை குறைத்துள்ளது. மேலும், மெதுவாக நகரும் திரைக்கதை மற்றும் நீளமான காட்சிகள் சலிப்பை உண்டாக்குகின்றன.
எழில் அரசுவின் ஒளிப்பதிவு படத்தின் ஒரு சிறப்பாக அமைகிறது. நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையில் பாடல்கள் பெரிதாக தாக்கம் செய்யவில்லை என்றாலும், பின்னணி இசை ஓரளவு ரசிக்கத் தக்கதாக இருக்கிறது.
