நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகி நல்ல வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னைக்கு அருகிலுள்ள தண்டலில் அமைந்த தனியார் கல்லூரியில், சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.
இப்படத்தில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 20 வயது துணை நடிகை ஒருவர் நடித்துள்ளார். இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க அவர் மகாராஷ்டிராவில் இருந்து ரெயில் மூலம் சென்னை வந்ததாகத் தெரிய வருகிறது.
சென்ட்ரல் ரெயில்வே நிலையத்தில் இறங்கிய அவர், அங்கிருந்து விழா நடைபெற்ற கல்லூரிக்கு கால் டாக்சியில் சென்றபோது, அந்த டாக்சி டிரைவர் அவரிடம் பாலியல் தொல்லை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, விழா முடிந்ததும் நடிகை பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட கால் டாக்சி ஓட்டுனர் கணேஷ் பாண்டியன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் போலீசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சமீபகாலமாக, சென்னை நகரில் கால் டாக்சி பயணிகளுக்கு எதிராக பாலியல் தொல்லை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால், இதனை தடுக்கும் நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாக எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
