காவல் துறையில் பணிபுரிந்து வருபவர் தங்கவேல். குயிலு என்கிற பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகும் வேளையில் தங்கவேலுவின் தகப்பன் யார் என்கிற கேள்வி எழ, அதனால் திருமணம் தடைபடுகிறது.
பல ஆண்டுகளாக தன் மீது உள்ள இந்த அவமானத்தை தாங்கிக் கொண்டிருக்கும் தங்கவேலு, இதற்கு முடிவு கட்ட தாத்தா பாட்டியிடம் இதைப் பற்றி ஆவேசத்துடன் கேட்கிறார்.
தங்கவேலுவின் பிறப்பின் பின்னணியும் தாயம்மா என்கிற அப்பாவிப் பெண்ணுடைய கதையாக படம் நகர ஆரம்பிக்கிறது.
கோவிலில் தேங்காய் பொறுக்கித் தின்னும் அமாவாசை குசும்புத்தனமும் புத்திசாலித்தனமும் கொண்டாவர். அமாவாசையின் பேச்சுத்திறனை அறிந்து அவரை MLA மணிமாறன் தன்னுடைய உதவியாளராக சேர்த்துக் கொள்கிறார்.
MLA சீட்டில் ஏற்பட்ட பிரச்சினையால் கட்சியிலிருந்து வெளியே வரும் மணிமாறன், அமாவாசையை வேண்டுமென்றே தேர்தலில் சுயேச்சையாக நிற்க வைக்கிறார்.
யாரும் எதிர்பாராத வகையில் அந்த தேர்தலில் அமாவாசை வெற்றி பெற்று தன்னுடைய பெயரை நாகராஜ சோழனாக மாற்றிக் கொள்கிறார். அதற்கு முன் தாயம்மா எனும் பெண்ணை காதலிப்பதாக சொல்லி ஏமாற்றுகிறார்.
அந்தஸ்து வந்தவுடன் தாயம்மாவை நாகராஜ சோழன் திருமணம் செய்ய மறுத்து, ஒரு மகாராஜாவின் பெண்ணான சிவகாமியை மணந்து அரண்மனைக்கு சொந்தக்காரர் ஆகிறார். பிரசவத்தின் போதே ஒரு ஆண் குழந்தையை பெற்று விட்டு தாயம்மா இறந்து விடுகிறார்.
தன்னுடைய பிறப்பின் ரகசியத்தை அறிந்து கொண்ட தங்கவேல், அப்பாவிப் பெண் தாயம்மா தன்னுடைய தாய் என்பதையும் தாயம்மாவின் வாழ்க்கையை சீரழித்த அமாவாசை தான் தற்போதைய MLA நாகராஜ சோழன் என்பதையும் தெரிந்து கொள்கிறார்.
தன்னுடைய தாயை சீரழித்த நாகராஜ சோழனை பழி வாங்க சரியான சந்தர்ப்பத்திற்காக தங்கவேல் காத்துக் கொண்டிருக்கிறார்.
நாகராஜ சோழனை தங்கவேல் பழிக்கு பழி வாங்கினாரா இல்லையா தங்கவேல் தன்னுடைய மகன் என்பது நாகராஜ சோழனுக்கு தெரிய வந்ததா நின்று போன தங்கவேலின் திருமணம் நடந்ததா இறுதியில் நடந்தது என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.
அமாவாசை என்கிற நாகராஜ சோழனாக சத்தியராஜ் தனக்கே உரிய நக்கல் நையாண்டித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்திருக்கிறார்.
வாக்கு எண்ணும் போது ஒவ்வொரு சுற்றிலும் முன்னணியில் இருக்கும் போது அவருடைய உடல்மொழி அருமையாக இருக்கிறது.
ஊர்ல எல்லோரும் அம்மணமா போகும் போது நாம கோவணம் கட்டிக்கிட்டு போனா நம்மள கோமாளின்னு சொல்லிடுவாங்க என்ற காட்சியிலும் டெலிபோன்ல ஒட்டுக் கேட்கறது எப்படின்னு கண்டுபிடிச்சது நான் தான் சபாநாயகர் மாதிரி நைநைன்னு பேசக்கூடாது அப்பறம் சட்டசபையை கலைச்சுருவேன் என்ற காட்சியிலும் உங்கக்காளயா கொல்ல சொல்றேன் Image ஐ காப்பாத்திக்கவும் தெரியும் Image ஐ உருவாக்கிக்கவும் தெரியும்னு சொல்லுகின்ற காட்சியிலும் கொடியேத்தி பாத்துருக்க கொளுத்தி பாத்ததில்லையே என்கிற காட்சியிலும் சத்யராஜின் நடிப்பு வேற லெவல் தான்.
தங்கவேலு கதாபாத்திரத்தில் வரும் சத்யராஜ் எமோஷனல் நடிப்பை வெளிப்படுத்தி நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
மணிமாறனாக நடித்த மணிவண்ணன் சத்யராஜிற்கு அடுத்தபடி நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். குற்றம் புரிந்தவன் பாடலைப் பாடும் காட்சி அமர்க்களம். பிற காட்சிகளிலும் மனுஷன் நடிப்பில் ஜமாய்த்து இருக்கிறார்.
சிவகாமியாக சுஜாதா குணச்சித்திர நடிப்பில் கலக்கி விட்டார். கொள்ளி வைப்பீங்க ஒட்டுக்காவது கொள்ளி வைப்பீங்க என்று பேசும் காட்சி மறக்க முடியாத ஒன்று. அனுதாபத்தை அள்ளிக் கொள்ளும் பரிதாபத்துக்குரிய தாயம்மா கதாபாத்திரத்தில் கஸ்தூரி நேர்த்தியாக நடித்துள்ளார்.
ரஞ்சிதாவிற்கு அதிக வேலையில்லை. படத்தில் நடித்த ஒவ்வொரு கலைஞர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் ஒகே ரகம். பின்னணி இசை அருமை. ஒளிப்பதிவாளர் தனது பணியை கச்சிதமாக செய்திருக்கிறார்.
இயக்குனர் மணிவண்ணன் அரசியல் கதைக்களத்தில் தனக்கே உரிய நையாண்டி வசனங்களையும் காட்சிகளையும் சேர்த்து ஒரு மறக்க முடியாத படத்தை கொடுத்துள்ளார்.
மணிவண்ணனின் இயக்கத்தில் சிறந்த படமாக இருக்கும் இந்த படத்தை சத்யராஜிற்காகவும் மணிவண்ணனின் இயக்கத்திற்காகவும் நிச்சயம் பார்க்கலாம்.
படத்தை காண விருப்பமுள்ளவர்கள் Tentkotta OTT ல் காணலாம். ஏப்ரல் 10-ஆம் தேதி அமைதிப்படை படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
