பாரதிராஜா எழுத்தாளரில்லை, ஓவியரில்லை, கவிஞரில்லை ஆனால் மகத்தான கலைஞன்.
படைப்பாளர்கள் மனதில் வரைந்து வைத்திருப்பதற்கு, கற்பனை செய்திருப்பதற்கு உயிர் கொடுத்து திரையில் உலவ விட்ட பெருங்கலைஞன். படைப்பாளருக்கெல்லாம் உயரிய படைப்பாளி.
இப்போது அவர் மறைந்து விட்டார், பிறந்த அல்லி நகரத்திலேயே அடக்கமாகிவிட்டார். அவரோடு ‘திடீர் செல்பி’ எடுத்தவர்களெல்லாம் அதை பகிர்ந்து ‘பாரதிராஜாவும் நானும்’ என்று பதிவு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ரீல்ஸ் யுகத்தில் இது தவிர்க்க முடியாதது. ரீல்சை நம்பி நாட்டைக் கொடுத்த சமூகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நான் சினிமா பத்திரிகையாளன் ஆன காலத்தில் பாரதிராஜா கிட்டத்தட்ட சினிமா இயக்குவதில் இருந்து விலகி இருந்தார். அவரோடு நெருக்கமாக பழகும் வாய்ப்பு எனக்கு மிகவும் குறைவு. அவரது திரைப்படக் கல்லூரி, அவர் கலந்து கொண்ட சில படவிழாக்களில் பரஸ்பர வணக்கம் தவிர்த்து, அவருக்கும் எனக்கும் நெருக்கம் எதுவும் கிடையாது.
ஆனாலும் ஒரே ஒரு சந்திப்பு… மறக்க முடியாத தருணமாயிருந்தது. அது வெறும் ‘செல்பி’ சந்திப்பல்ல, புகைப்பட சந்திப்பல்ல, ஆத்மார்த்தமான ஒரு சந்திப்பு.
தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் ஒவ்வொரு புத்தாண்டின்போதும் தனது அலுவலக மொட்டை மாடியில் ‘உற்சாக’ விருந்து வைப்பார். 12 மணி வரை நண்பர்களுடன் கலந்துரையாடல், நடனம், பாட்டு என கழியும். 12 மணிக்கு கேக் வெட்டிக் கலைவோம். இப்போதும் அந்த விருந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அப்படியான ஒரு புத்தாண்டு நிகழ்வுக்கு வந்திருந்தார் பாரதிராஜா, அவர் வரப்போகிறார் என்பதை முன்பே அறிந்ததால் நான் சில ஏற்பாடுகள் வைத்திருந்தேன். விருந்தில் அவரை உபசரிக்கும் பொறுப்பை மாணிக்கம் நாராயணன் சாரிடம் கேட்டு பெற்றுக் கொண்டேன்.
சரியாக இரவு 9 மணிக்கு வந்தார் பாசத்திற்குரிய பாரதிராஜா. 80ஐ நெருங்கிய வயது என்பதால் நடையில் சிறிய தடுமாற்றம், பேச்சில் தெளிவின்மை எல்லாமே இருந்தது. என்றாலும் அவர் தனித்து நடந்து வர முயற்சித்தார். அவரை கைபிடித்து அழைத்து வர முயற்சித்து அவர் கைபிடித்தேன். டக்கென என் கையை உதறித் தள்ளி முறைத்தார், சப்தநாடியும் குறைந்து வியர்த்துக் கொட்டியது எனக்கு.
அவருக்கான மேஜையில் அமர்ந்தார். அவருக்கென்று அவருக்கு பிடித்தமானவற்றை தனியாக செய்து வைத்திருந்தார் திருமதி மாணிக்கம் நாராயணன். அவருக்கு பிடித்த வெளிநாட்டு ‘உற்சாக’ பானங்களும் இருந்தது. அவற்றை நான் ஒவ்வொன்றாக எடுத்து அவரது மேஜையில் வைத்தேன்.
முதல் பார்வையிலேயே “எனக்கு ஊட்டியெல்லாம் விட வேண்டாம், கை நல்லா இருக்கு, நானே சாப்பிட்டுக்றேன்”என்றார். நான் பயத்தை எச்சில்கூட்டி விழுங்கி ‘சரிங்கய்யா’ என்றேன். அவரிடம் சரியாக நடிக்காமல் கன்னத்தில் அடிவாங்கிய நடிகைகளின் முகமெல்லாம் மனதிற்குள் வந்து போனது.
மீரான் முகமது
