meet joe black

அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை? Meet Joe Black

அம்பிகாபதி என்ற பழைய படத்தில் வரும் “சிந்தனை செய் மனமே” என்ற பாடலில் வரும் வரி இது. இதில் வரும் “அந்தகன்” என்ற சொல், அழிப்பவன் அல்லது எமன் என்ற பொருள் தரும் வடசொல். பிற்காலச் சோழர்கள் தடுக்கி விழுந்தால் மதுரை மீது படையெடுத்து அதை அழிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்கள். அப்படி அழித்துவிட்டுத் தங்களுக்கு மதுரையை அழித்தவன் என்ற பொருள் தரும் மதுராந்தகன் என்ற பெயரையும் சூட்டிக் கொண்டார்கள். மதுராந்தகம் என்ற பெயருள்ள ஊர் இன்றும் அந்தச் சோழர் “பெருமையை”ப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

நிற்க. நான் சொல்ல வந்த கதை வேறு.

மனிதர்களின் கற்பனையில் இறப்பு என்பது மனிதர்களிடமிருந்து உயிரைப் பறிக்கும் ஒரு தேவதூதன். காலந்தோறும் உலகின் உயிர்களைப் பறித்துக் கொண்டிருக்கும் அந்தகனுக்கு இந்த மனிதர்கள் வாழ்வைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்று வைத்துக் கொள்வோம். அதாவது, இந்த எமதூதன் வேலைக்குப் புதிதாய் ஒருவர் வந்து சேர்ந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்ளலாமே. அவர் ஓர் இளைஞனின் உயிரைப் பறித்த பிறகு, இந்த மனிதர்கள் என்ன தான் செய்கிறார்கள் என்று பார்க்கும் ஆசையுடன் அந்த இளைஞனின் உடலில் புகுந்து நடமாடத் தொடங்குகிறார்.

இப்படிப்பட்ட ஒரு கற்பனையில் வந்த ஒரு ஆலிவுடு திரைப்படம் தான் “கார்வளனின் அறிமுகம்” (“Meet Joe Black.”) [ கார் என்றால் கரியவன் அல்லது Black , வளன் என்ற பெயர் Joe அல்லது Joseph என்னும் யோசேப்பு என்பதைக் குறிக்கும். ] எமதூதன் வேடத்தில், இன்று புகழ்பெற்று விளங்கும் ஆலிவுடு நடிகர் பிராடு பிட்டு ( Brad Pitt ) அப்படத்தில் குழந்தை முகத்துடன் இருந்த இளைஞர். கவர்ச்சிகரமான அந்த இளைஞனை எமதூதனாக நினைத்துப் பார்ப்பதே கடினம். ஆனால், சிறப்பான தேர்வு. இறப்பைப் பற்றியும் எமதூதனைப் பற்றியும் தமிழ்த்திரைப்படங்களில் காட்டும் படிமத்துக்கு முற்றிலும் மாறானது இந்தப் பாத்திரம்.

படம் சுவையான கதை என்றாலும் இந்தப் பதிவு அந்தப் படத்தில் வரும் ஒரு சிறிய பாத்திரத்தோடு எமனின் ஊடாடலைப் பற்றியது மட்டுமே.

இந்த எமதூதனை நாம் கார்வளன் (Joe Black) என்றே அழைப்போம். இந்தக் கார்வளன் ஒரு மருத்துவரைப் பார்த்து மையல் கொள்கிறான். காதல் என்றால் என்னவென்று அவனுக்குப் புரியவில்லை. தான் ஒரு பெண்ணைக் காதலிக்க முடியும் என்றோ அந்தப் பெண்ணும் தன்னைக் காதலிக்கக்கூடும் என்றோ அவனுக்குத் தெரியாது. இதெல்லாம் இந்த இளம் எமதூதனுக்குப் புதிய பட்டறிவு.

கார்வளன் தன்னை ஈர்க்கும் அந்தப் பெண் மருத்துவரைப் பார்க்க அவருடைய மருத்துவமனைக்கு வருகிறான். நீயெல்லாம் இங்கே வரக்கூடாது என்று அவர் அவனைத் துரத்திக் கொண்டிருக்கும்போது புற்றுநோயால் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு மூதாட்டியை அவரது பேத்தி அழைத்துக் கொண்டு வருகிறார். அவர்கள் மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான சமைக்கா (Jamaica) தீவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர்கள். அந்த மூதாட்டி இன்னும் சமைக்காவின் ஆங்கிலக் கலவை மொழியான கிரெயோலில் பேசுபவர்.

சமைக்கக் கறுப்பின மக்களுக்கு தமிழர்களைப் போலவே நாட்டார் மரபுகள் மிகுதி. மற்றவர்கள் கண்களுக்குக் கவர்ச்சியாகத் தெரியும் அந்த இளைஞனை இந்த மூதாட்டி மட்டும் உடனடியாக எமதூதன் என்று அடையாளம் கண்டு கொள்கிறார். புற்றுநோய் வலியால் துடித்துக் கொண்டிருக்கும் அவருக்குத் தன்னை அழைத்துச் செல்லத்தான் இவன் வந்திருக்கிறான் என்று தோன்றுகிறது. அதை அவர் அவனிடம் தன் கிரெயோல் மொழியில் உடனடியாகக் கேட்டு விடுகிறார். அவனும் அவருடைய மொழியிலேயே தான் அவரைக் கொண்டு செல்ல வரவில்லை என்றும் தான் விடுமுறையில் வந்திருப்பதாகவும் சொல்கிறான்.

ஆனால், தான் எமதூதன் இல்லை என்று அவன் மறுக்கவில்லை. தன்னை இந்த மூதாட்டி எப்படி அடையாளம் கண்டுகொண்டார் என்று வியக்கவும் இல்லை. இதெல்லாம் கடையில் கத்தரிக்காய் பேரம் பேசி வாங்குவது போல் இயல்பாகப் போகிறது. இவர்கள் பேச்சு பிறருக்கும் புரிவதில்லை என்பது கதைக்கும் இடைஞ்சலாக இல்லை.

தன் வலியைப் பற்றிச் சொல்லித் தன்னை அழைத்துச் செல்ல அவர் அவனிடம் மன்றாடுகிறார். அவனோ அதெல்லாம் தன் கையில் இல்லை என்றும் அவரவர் நேரம் வரும்போது அதது நடக்கும் என்றும் சொல்லித் தட்டிக் கழித்து விடுகிறான். அவருக்குப் பெருத்த ஏமாற்றம். அந்தப் பெண் மருத்துவரோ அவன் அவ்வளவு இயல்பாகக் கிரெயோல் மொழியில் பேசுவதைப் பார்த்து வியக்கிறார். ஆனாலும் அங்கிருந்து செல் என்று விரட்டி விடுகிறார்.

சில காட்சிகள் கழித்து அவர்கள் இருவரும் மீண்டும் பார்க்க நேரிடுகிறது. அந்தப் பெண் மருத்துவருக்குப் பூங்கொத்து ஒன்றைக் கொடுக்க அந்த மருத்துவமனைக்கு வருகிறான் கார்வளன். அந்த மூதாட்டி கூர்மையான அறிவுள்ளவர். அவன் தன் மருத்துவரைக் காதலிக்கிறான் என்று கண்டுபிடித்து விடுகிறார். உண்மையில் நீ யார் என்று உன் காதலிக்குத் தெரியுமா என்று துளைக்கிறார். இப்படி ஒரு பச்சிளங்காளை போல் ஒரு இளம்பெண்ணை எமதூதன் காதலிப்பது என்பது அவரது கற்பனைக்கும் எட்டாத கருத்து.

ஆனாலும், ஒரு பாட்டி தன் பேரனிடம் இப்படிப்பட்ட நிலையில் எப்படி அதட்டுவாரோ அப்படி அவனை அதட்டுகிறார். இதெல்லாம் சரியே இல்லை என்று அவனை உணர வைக்க முயல்கிறார். அதே சமயம் தன் ஆறாத வலிக்குத் தீர்வு தன் இறப்புதான் என்று தெரிந்த அவர் அவனிடம் தன் உயிரை எடுக்கும்படி மென்மையாக வலியுறுத்துகிறார்.

கார்வளனும் தன் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முயல்கிறான். மனிதர்கள் பெரும்பாலும் இறப்பு நெருங்கும்போதுதான் இன்னும் வாழத் துடிக்கிறார்கள் என்பதை அறிந்த அவனுக்கு இந்த மூதாட்டி இன்னும் வாழ்நாள் இருக்கும்போது உடனடியாக விடுதலை வேண்டுவது புரியவில்லை. இந்த மனிதர்களைப் பற்றித் தனக்குத் தெரிய வேண்டியது மிகுதி என்று அறிகிறான்.

ஓ, நீ விடுமுறையில் வந்திருக்கிறேன் என்றுதானே சொன்னாய், விடுமுறையில் வந்த இடத்தில் படம் எடுப்பது போல் இந்தக் காதல் காட்சிகளை உன் மனதில் படமெடுத்துக் கொண்டு செல்லப் போகிறாயா என்று கேட்கிறார் மூதாட்டி.

அவனோ, இதுவரை எனக்கென்று யாரும் இருந்ததில்லை. ஆனால், இப்போது அது மாறியிருக்கிறே என்று தன் தனிமையை உணர்த்துகிறார்.

“ஆமாம், நாங்களும் பெரும்பாலும் இங்கே தனிமையில்தான் வாடுகிறோம். நல்ல வாய்ப்பு இருந்தால் சில நேரங்களில் எங்களுக்கும் இறக்கும்போது நினைத்துக் கொள்ள நல்ல நினைவுகள் கிடைக்கக்கூடும்” என்கிறார் அவர்.

“We lonely here mostly too. if we are lucky maybe we got some nice pictures to take with us.”

கெஞ்சலும் அதட்டலுமாக அந்த மூதாட்டி அவனிடம் பேசிப் பேசி அவனது கல்நெஞ்சத்தைக் கரைக்கிறார். விதித்தது எதுவாக இருக்கட்டும், உன்னால் ஓர் உயிரைப் பறிக்க முடியும் என்பதால் இந்தத் தீராத வலியைத் தீர்த்து வைக்க முடியாதா என்று அவனை உருக்குகிறார்.

அவனும் அந்த மூதாட்டியத் தன் பாட்டியைப் போலவே எண்ணி அவரது வேண்டுதலுக்கு இரங்குகிறான். அவரிடம் சரி, கண்ணை மூடிக்கொள் என்று கட்டளையிடுகிறான். அந்த மூதாட்டி சில முறை தன்னைச் சுற்றியுள்ள உலகைப் பார்த்து விட்டு கண்ணை மூடிக் கொள்கிறார். அவன் தலையை மெலிதாக ஆட்டுகிறான். அந்த மூதாட்டியின் மூச்சு மெல்ல அடங்குகிறது.

இந்த இறப்புக் காட்சியைப் பார்க்கும்போது கர்ணன் படத்தில் நடிகர் திலகம் நடித்த இறப்புக் காட்சியை நினைத்துக் கொண்டேன். (நண்பர் அலெக்சு அந்தக் காட்சியை நக்கலடித்தது மனதில் தோன்றியது). எந்த வித அலப்பறையும் இல்லாமல் அந்த இறப்புக் காட்சியைப் படமெடுத்திருப்பார்கள்.

சுவையான படம். அலட்டல் இல்லாத நடிப்பு. கூர்மையான உரையாடல்கள். வாழ்வைப் பற்றி நம்மையும் அசைபோட வைக்கும் கதை. திரைப்படக் கலையில் ஆர்வம் உள்ளவர்களுக்குப் பரிந்துரைக்கலாம்.

சமைக்கன் மூதாட்டியாக வரும் லோயிசு கெல்லி மில்லர் இந்தப் படத்தில் நடித்தபோது உண்மையிலேயே 80 வயது மூதாட்டி. அவர் அதற்குப் பின்னரும் 22 ஆண்டுகள் வாழ்ந்து 102 வயதில்தான் இறந்தார். உண்மையிலே எமதூதனுக்கு அவர் உயிரைப் பறிக்கத் தயக்கமாகத்தான் இருந்திருக்கிறது.

இந்தப் படத்தைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு சிறு குறிப்புடன் பகிர்ந்தேன். ஆனால், அதை யாரும் பார்க்கவில்லை என்கிறது முகநூல். எனவே தமிழில் சற்றுக் கூடுதலாகவே கதையைச் சொல்லியிருக்கிறேன். திரைக்கலையில் ஆர்வமுள்ளவர்கள் சிலராவது இந்தப் படத்தைப் பார்த்தால் சிறப்பு. பழந்தமிழ் இலக்கியங்கள் இந்தப் படத்தில் வருவது போலத்தான் குறிப்பால் உணர்த்துவதை இலக்கணமாகக் கொண்டிருந்தன. திணையிலக்கணத்தால் போகிற போக்கில் நிலம், காலம், கருப்பொருள், உரிப்பொருள் என்ற கட்டமைப்பில் கோடிட்டுக் காட்டிவிடுவார்கள். செவ்விசையைக் கேட்டு மகிழ்பவர்கள் எப்படி அந்தந்தப் பண்ணை வைத்து உணர்வுகளைப் புரிந்து கொள்கிறார்களோ அப்படிச் செவ்விலக்கியமும் நம் உணர்வுகளை மீட்டி விடுகின்றன.

இந்தப் படத்தைத் திரைக்கலையின் செவ்விலக்கியம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனால், அத்தகைய கூறூகள் இடம் பெற்றிருக்கும் படம் இது. தமிழ்ப்படங்களில் இருக்கும் இரைச்சலும், கும்மாளமும், கற்பனையும், உணர்வுகளை மழுங்கடிக்கும் கதைகளும் கதைமாந்தர்களும் நாம் எந்த அளவுக்குத் தமிழின் செவ்வியல் மரபுகளிலிருந்து விலகியிருக்கிறோம் என்பதை உணர்த்துகின்றன. இப்படி ஒரு படத்தைப் பார்த்தாலாவது நமக்குள்ளும் இப்படிப்பட்ட நுண்மையான உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் எங்கோ பொதிந்திருக்கிறது என்று உணரக்கூடும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top