Bharathiraja Making Bhagyaraj

பாக்கியராஜை ஹீரோவாக்கிய பாரதிராஜாவின் முடிவு!

10 / 100 SEO Score

இயக்குனருக்கும் உதவி இயக்குனருக்கும் இடையில் உள்ள உறவென்பது கணவன் மனைவி உறவு போலதான் ஒருவரையொருவர் முரண்பட்டுக் கொண்டே விரும்பவேண்டும்.

பாரதிராஜாவுக்கும் பாக்யராஜ்க்கும் பிணக்குகள்தான் அதிகம் வந்திருக்கின்றன. பாரதிராஜாவின் மூன்றாவது படமான் “சிகப்பு ரோஜாக்கள்” படப்பிடிப்பு தாமதமாகும் என்றதால் பாக்யராஜ் ஊருக்குப் போய்விடுகிறார், கமல், ஸ்ரீதேவியின் தேதிகள் கிடைத்ததால் படப்பிடிப்பு சீக்கிரமே துவங்க வேண்டிய நிர்பந்தம். பாக்யராஜ் வந்து சேர ஒருவார காலம் தாமதமாகி விடுகிறது. அந்த ஒருவார காலமும் பாரதிராஜாவுக்கு ராமு என்பவர் துணையாக இருக்கிறார். பாக்யராஜ் வந்ததும் ராஜன் என்று அழைப்பதற்குப் பதிலாக வாய்தவறி ராமு என்று அழைத்து விடுகிறார் பாரதிராஜா.

பாக்யராஜ்க்கு இது மாபெரும் துரோகமாகப் படுகிறது. நான் இருந்த இடத்தில் இன்னொருவனா? என் பெயரைச் சொல்லிச் சொல்லி அழைத்தவர் என்னை வேறொரு பெயர் சொல்லி அழைத்துவிட்டாரே! என்று மனம் வருந்தி, இனிமேல் நான் இங்கே இருக்க மாட்டேனே என்று கடிதம் எழுதிவைத்துவிட்டுச் சென்றுவிடுகிறார்.

பாக்யராஜ் இல்லாமல் படப்பிடிப்பு நடக்காது என்று சொல்லிவிட்டார் பாரதிராஜா, பிறகு ஆட்கள் போய் அவரை அழைத்து வர, அறைக்குள் இருவருக்கும் சண்டை, அதெப்படி நீங்கள் என் பெயரை சொல்லி அழைக்காமல் இன்னொருவன் பெயரை வாய்தவறியும் கூட சொல்லலாம். “தெரியாமல் சொல்லிவிட்டேன்” என்று அவர் மன்னிப்பு கேட்டு, என்னிடமெல்லாம் நீங்க ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று இவர் உருகி இருவரும் கண்ணீரும் கம்பலையுமாக நிற்கும் போது கமல் வந்து கதவைத் திறந்து பார்த்துவிட்டு இவர்களின் நெகிழ்ச்சியை தொந்தரவு செய்யாமல் போயிருக்கிறார்.

நான்காவது படமான “புதிய வார்ப்புகள்” படத்திற்கு பாக்யராஜின் உதவியே இல்லாமல் கதை எழுதி திரைக்கதை அமைத்து இருக்கிறார். ஆனாலும் படத்தின் இறுதிமுடிவு சரியாகக் கூடிவரவில்லை. சரி பாக்யராஜை அழைத்து வரலாம் என்றால் ஏற்கனவே அவர் கோபத்தில் இருக்கிறார். சரியென்று பாக்யராஜை அழைத்து “எங்கய்யா இருக்க?” என்று கேட்டிருக்கிறார், பாக்யராஜ் பதிலுக்கு “எங்க வரணும்?” அவ்வளவுதான் கூடிவிட்டார்கள்.

புதியவார்ப்புகள் படத்திற்கு இறுதி அத்தியாயம் சரியில்லை நீ அதைக் கொஞ்சம் சீர்படுத்து என்று சொல்லவும், இடைவேளைக்கு மேலேயே சுத்தமாகச் சரியில்லை என்று திரைக்கதையை மாற்றி அமைக்கிறார். “சரி அப்போ வசனமும் நீயே எழுதிடு” வசனமும் எழுதுகிறார். “நாயகனாக நடிக்க ஆளில்லை, நீயே நடித்தும் கொடுத்துவிடு” நாயகனாகவும் ஆகிறார்.

இத்தனைக்கும் சும்மா நடிக்கவைக்கவில்லை. பாக்யராஜின் நடிப்புத் திறன் அறிந்துதான் நடிக்க வைத்திருக்கிறார். “கிழக்கே போகும் ரயில்” திரைப்படத்தில் நடித்த சுதாகர்க்கு தமிழ் தெரியாது, அவர் தெலுங்கர். அவருக்கு தமிழில் எப்படிப் பேசி நடிக்க வேண்டும் என்று பாக்யராஜ்தான் பயிற்சி கொடுத்து இருக்கிறார், அதனை ஒரு நாள் பாரதிராஜா மறைந்து இருந்து பார்த்துதான் பாக்யராஜை நடிக்கவைக்கும் முடிவுக்கே வந்திருக்கிறார்.

பாக்யராஜ் நடித்துக் காண்பிப்பதை பாரதிராஜா வேடிக்கைப் பார்க்கும் “தாவணிக் கனவுகள்” திரைப்படக் காட்சி இருக்கிறதே, அது உண்மையில் நடந்த சம்பவம். அதைத்தான் தன் குருநாதரையே நடிக்கவைத்து மறுஉருவாக்கம் செய்து கவுரவப் படுத்தி இருக்கிறார் பாக்யராஜ்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top