உள்துறை மந்திரியாக இருக்கும் கனகராஜு முதல்வர் சீதாராமையாவை சந்தித்து தனக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்குமாறு கேட்கிறார். ஆனால் சீதாரமையாவோ உங்கள் மேல் பல புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதனால் பதவியை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறி விடுகிறார்.
இதனால் கோபமடைந்த கனகராஜுவும் அவரது மகன்களும் அவரை தீர்த்துக் கட்டி விடுகிறார்கள். தாங்கள் செய்த குற்றத்தை இயற்கையான மரணம் என்ற தகவலை சொல்லி அனைவரையும் நம்ப வைத்து விடுகிறார்கள்.
ஆனால் CCTV நிறுவனத்தை நடத்தி வரும் விஷ்ணு முதல்வர் இருக்கும் பகுதியில் ரிப்பேர் செய்வதற்காக வந்த போது , அங்கு உள்ள கேமராவில் முதல்வரை உள்துறை மந்திரியும் அவரது மகன்களும் தீர்த்துக் கட்டியது பதிவாகி விடுகிறது.
அந்தப் பதிவை விஷ்ணு பார்த்து தனது நண்பரிடம் பகிர்ந்து கொள்ள உடனே அந்த வீடியோவை அழித்து விடுமாறு அறிவுரை கூறுகிறார். இதனிடையே விஷ்ணு இருப்பதைப் கேமராவில் பார்த்து விட்ட கனகராஜுவின் உதவியாளர் அவரிடம் சொல்லி விட, எங்கே தனது முதல்வர் பதவி பறி போய் விடுமோ என்று பயந்து அவரைத் தீர்த்துக் கட்ட மகன்களுடன் அடியாட்களை அனுப்புகிறார்.
இந்த விபரத்தை கேட்ட நண்பனை முதலில் தீர்த்துக் கட்டி விட்டு தன் வீட்டிற்கு அவர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை தெரிந்த பிறகு, அந்த வீடியோவை பகுதி பகுதியாக பிரித்து அதற்கு ஒரு குறியீடு வைத்து விஷ்ணு வெவ்வேறு இடங்களில் பதுக்கி விடுகிறார்.
விஷ்ணுவின் வீட்டிற்கு வந்த அடியாட்கள் அவரையும் அவரது மனைவியையும் தீர்த்துக் கட்டி விடுகிறார்கள். வீட்டிற்குள் மறைவாக இருந்த விஷ்ணுவின் மகள் தேஜு தன் கண் முன்னே பெற்றோர்கள் துடி துடித்து இறந்து போனதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.
விஷ்ணு இறப்பதற்கு முன் தேஜுவிடம் வீடியோ இருக்கும் இடத்தைப் பற்றிய குறிப்பைக் கொடுத்து விட்டு இறந்து போகிறார்.
இதனிடையே காவல் துறை விஷ்ணு வீட்டிற்கு வந்து தேஜுவை விசாரிக்கும் போது இதனை செய்தது யார் என்று அடையாளம் காட்ட முடியும் என்று கூற, இதனை தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்த கனகராஜு அதிர்ச்சி அடைந்து உடனே தேஜுவின் கதையையும் முடிக்க சொல்கிறார்.
தேஜுவை சுற்றி மிகப் பெரிய ஆபத்து சூழ்ந்திருப்பதை அறியாமல் அவருக்கு ருத்ர பிரதாப் அடைக்கலம் கொடுக்கிறார். பிராணிகளின் உடல் நல பாதுகாப்பு பணியை செய்து வரும் ருத்ர பிரதாப் தேஜுவிற்கு முன்பே பரிச்சயமானவர் என்பதால் அவருடன் எந்த தயக்கமும் இன்றி செல்கிறார்.
இந்த நிலையில் கனகராஜுவின் ஆட்கள் ருத்ராவை தாக்கி தேஜுவை தீர்த்துக் கட்ட முயலும் போது அதனை ருத்ரா முறியடித்து விடுகிறார். பின் தேஜுவிடம் நடந்ததைப் பற்றி கேட்கும் ருத்ராவிற்கு அந்த வீடியோவைப் பற்றியும் அது இருக்குமிடத்திற்கான தந்தை சொன்ன குறியீட்டையும் சொல்கிறார்.
ருத்ரா தனது தோழர்களுடன் இணைந்து அந்த வீடியோவை பாதுகாப்பாக மீட்கும் பணியில் இறங்குகிறார்.
ருத்ராவின் முயற்சி வெற்றி பெற்றதா கனகராஜுவின் முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தை ருத்ரா முறியடித்தாரா கனகராஜுவின் குற்றங்களுக்கு தண்டனை கிடைத்ததா ருத்ராவின் உண்மையான பின்னணி என்ன இறுதியில் நடந்தது என்ன என்பது தான் படத்தின் மீதிக் கதை.
ருத்ர பிரதாப்பாக ரவி பாபு ஆக்ஷன் காட்சிகளில் தெறிக்க விட்டிருக்கிறார். ஒவ்வொரு ஆக்ஷன் காட்சிகளும் அதிரடியாக படமாக்கப்பட்டு இருக்கிறது. கார் ஷெட்டில் போடப்படும் சண்டை காட்சி படத்தின் ஹைலட் என்று கண்டிப்பாக சொல்லலாம். பிளாஷ் பேக்கில் வரும் எமோஷனல் காட்சிகளிலும் அவரது நடிப்பு கவனிக்க வைக்கிறது.
தேஜுவாக நடித்த சிறுமியின் நடிப்பு அருமை. வீடியோ இருக்கும் பகுதிகளுக்கான க்ளூவை சொல்லும் காட்சி ஒவ்வொன்றும் சிறப்பு. அதே போன்று ரவி பாபுவின் தோழர்களாக நடித்தவர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
படத்தில் நடித்த பிற கலைஞர்கள் அனைவரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.
பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவாளரின் கடுமையான உழைப்பு ஆக்ஷன் காட்சிகளை படமாக்கிய விதத்தில் தெரிகிறது.
படத்தின் இயக்குனராகவும் இருக்கும் ரவி பாபு முதல் பாதியை விறுவிறுப்பாக நகர்த்தி இருக்கிறார்.
இரண்டாம் பாதியில் தான் அந்த டெம்போ குறைவாக இருக்கிறது. திரைக்கதையிலும் இயக்குனர் கூடுதல் கவனத்தை செலுத்தி இருக்கலாம். ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குனர் திரைக்கதைக்கும் அதனை கொடுத்திருக்கலாம். லாஜிக் மீறல்களும் படத்தில் அதிகம்.
மொத்தத்தில் ஆக்ஷன் பட ரசிகர்கள் மிஸ் பண்ணக் கூடாத இந்த அதிரடியான படத்தை விருப்பமுள்ளவர்கள் Aha video Telugu OTT ல் காணலாம்.
