raakh series

பில்லா–ரங்காவின் தூக்குத் தண்டனையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட தொடர் தான் “ராக்”!

10 / 100 SEO Score

70களின் பிற்பகுதியில் இரண்டு சிறுவர்–சிறுமியின் கொடூரமான கொலை மற்றும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பில்லா–ரங்காவின் தூக்குத் தண்டனையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட தொடர் தான் “ராக்”.

ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, அதே காலக்கட்டப் பின்னணியில் புனைகதை வடிவில் இயக்குநர் இந்த தொடரை உருவாக்க முயன்றுள்ளார்.

1978ஆம் ஆண்டு, சுமன் மற்றும் சாஹில் இருவரும் பாடுவதற்காக ரேடியோ ஸ்டேஷனுக்கு செல்கின்றனர். ஆனால் எந்த பேருந்தும் வராத நிலையில், குறித்த நேரத்திற்கு செல்ல வேண்டுமே என்று சுமன் கவலைப்படுகிறார்.

இதனிடையே, தங்களது மகள் பாடுவதை கேட்க ஆவலாக இருந்த அவரது தாய், நிகழ்ச்சி முடிந்ததும் ஏன் சுமன் பாடவில்லை என்று கேட்டு, கணவரை என்ன விஷயம் என்று பார்த்து வர அனுப்புகிறார்.

ரேடியோ ஸ்டேஷனுக்கு சென்ற பிறகுதான் சுமனும் சாஹிலும் அங்கு வரவே இல்லை என்ற தகவல் தெரிய வருகிறது. உடனே நண்பர்கள் வட்டத்தில் விசாரிக்கும் போது எந்த தகவலும் கிடைக்காததால், வேறு வழியின்றி காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்கள்.

இந்த வழக்கை ஜெயப்பிரகாஷ் யாதவ் என்ற உதவி ஆய்வாளர் விசாரிக்க ஆரம்பிக்கிறார். தீவிர தேடலுக்குப் பிறகு, இருவரது உயிரற்ற சடலங்கள் ரிட்ஜ் பகுதி அருகே கிடைக்கின்றன.

தங்களது இரண்டு பிள்ளைகளையும் அந்த கோலத்தில் பார்த்து, அவர்களின் பெற்றோர் உடைந்து போகிறார்கள்.

சுமனையும் சாஹிலையும் கொன்றது யார்? உதவி ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் குற்றவாளியை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தினாரா? இந்த வழக்கில் ஜெயப்பிரகாஷ் சந்தித்த சவால்கள், இடர்பாடுகள் என்ன? அவற்றை அவர் எப்படி கையாண்டார்? ஜெயப்பிரகாஷிற்கு குற்றவாளியை கண்டுபிடிக்க யாராவது உதவி செய்தார்களா? இறுதியில் நடந்தது என்ன? என்பதே சீரிஸின் மீதிக்கதை.

ஜெயப்பிரகாஷாக அலி ஃபசல், புலனாய்வு அதிகாரியாக அமைதியாகவும் அதே நேரத்தில் அழுத்தமாகவும் நடித்து அசத்தியிருக்கிறார். அலியின் நடிப்பு தொடருக்கு மிகப் பெரிய பலம்.

குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்க ஊர் ஊராக அலைவதும், இறந்த குழந்தைகளுக்கு நீதி கிடைக்க போராடும் போதும் அவர் நேர்த்தியாக நடித்துள்ளார்.

சாதி மற்றும் அதிகார வர்க்க சவால்களை எதிர்கொண்டு, தன்னுடைய முதல் பெரிய வழக்கை அவர் கையாளும் விதம் ரசிக்க வைக்கிறது.

பெற்றோர்களாக நடித்துள்ள சோனாலி பிந்த்ரே மற்றும் அமீர் பஷீர் இருவரும் பிள்ளைகளை இழந்த சோகத்தை அருமையாக வெளிப்படுத்தியுள்ளனர். அந்த சோகத்தை பார்வையாளர்களிடம் கடத்துவதில் அமீரின் நடிப்பில் அழுத்தம் சற்று அதிகம்.

சுமன், சாஹில் கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் அந்த வேடங்களுக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளனர்.

பாபுவாக நடித்த ஆகாஷ் மகிஜா, ரஜ்ஜோவாக நடித்த ரமன்தீப் யாதவ் இருவருக்கும் இடையே இருக்கும் விசித்திரமான பிணைப்பு, வன்முறைப் போக்கு மற்றும் மனநிலையை இயக்குநர் ஆழமாகக் காட்டியுள்ளார். இருவரும் நடிப்பில் மிரட்டியுள்ளனர்.

ஜெயப்பிரகாஷின் தந்தையாக நடித்த ராகேஷ் பேடியின் நடிப்பு கவனிக்க வைக்கிறது. பார் நடனக் கலைஞராக நடித்த முகுந்த் பாலின் கதாபாத்திரத்தின் மூலம் ஏழைகளின் வாழ்வாதாரப் போராட்டத்தை இயக்குநர் காட்டிய விதம் அருமை.

புலனாய்வு பத்திரிகையாளராக நடித்த அன்ஷுல் சவுகானின் நடிப்பு ரசிக்க வைத்தாலும், அவரது கதாபாத்திரம் கதைக்கு முழுமையாக ஒட்டாமல் இருப்பது போன்ற உணர்வை தருகிறது.

தொடரில் நடித்த பிற கலைஞர்கள் அனைவரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் தொடருக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இயக்குநர் பிரோசித் ராய், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இந்த தொடரை உருவாக்கி இயக்கியுள்ளார்.

இரண்டு பிள்ளைகளுக்கும் நடந்த விபரீதத்தை காட்டிய விதம் பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கிறது. எட்டு பகுதிகள் கொண்ட இந்த தொடர் மெதுவாக நகர்கிறது.

தேவையற்ற வன்முறை காட்சிகளும், தொடரில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆபாச வார்த்தைகளும் பார்ப்பவர்களின் பொறுமையை சோதிக்கின்றன.

குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை இந்த வெப் சீரிஸ் காட்டுகிறது. அதே நேரத்தில், சமூகம் எந்த அளவிற்கு கெட்டுப் போயிருக்கிறது என்பதை வெளிப்படையாக காட்டிய விதம் நமக்குள் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

மொத்தத்தில், மெதுவாக நகரும் இந்த தொடரை ஒரு முறை காணலாம்.

தொடரை காண விருப்பமுள்ளவர்கள் Amazon Prime Video-வில் காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top