hq720

காலத்துக்கும் காலரை தூக்கிவிட்டுக்கொள்ள அதுவே பிறவிக்கும் போதுமானதும்கூட! ‘ரோஜா’

11 / 100 SEO Score

1991 ல் இயக்குநர் சிகரம் K.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘அழகன்’ திரைப்படத்தில் ஸ்வப்னா என்கிற கதாபாத்திரத்தின் வழியாக திரைத்துறைக்குள் நுழைந்தவர் மதுபாலா.

பாலச்சந்தரின் திரைப்படத்தில் இவர் அறிமுகமானதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. மும்பையில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண் மதுபாலா. அவரின் தந்தை ஹிந்தி திரைப்படங்கள் சிலவற்றை தயாரித்திருக்கிறார். அவரின் தயாரிப்பு நிறுவனத்திற்கு வந்த இயக்குநர் ஒருவர் மதுபாலாவை அங்கே பார்த்துவிட்டு, தனது படத்தில் அறிமுகப்படுத்துவதாக கேட்டிருக்கிறார். அப்படித்தான் முதல் வாய்ப்பு மதுபாலாவிற்கு அமைந்திருக்கிறது. அதற்காக நடிப்புப் பயிற்சி பள்ளிக்கும் அவரை அனுப்பியிருக்கிறார்கள். நடிகை ஹேமமாலினியின் மாமாவின் மகள் மதுபாலா, அந்த விஷயம் மீடியாவிற்குத் தெரிந்து , ஹேமமாலியின் கசின் அறிமுகமாகிறார் என ஒரு வார பத்திரிகையில் மதுபாலாவின் புகைப்படத்தோடு செய்தியாக வந்திருக்கிறது. ஆனால், நடிப்பு சரியாக வராத காரணத்தால் , அந்த இயக்குநருக்கு திருப்தி இல்லாமல், மதுபாலாவை அந்தப் படத்தில் இருந்து நீக்கிவிடுகிறார்.

அந்த சம்பவத்தால் அப்செட் ஆகிற மதுபாலா, அதே துறையில் ஜெயித்துக் காட்ட வேண்டும் என்பது போல தனக்குள் உறுதி ஏற்று, சினிமாத்துறைக்கு ஆயத்தாமாகும் பயிற்சிகளை, தானே செய்து கொண்டிருந்திருக்கிறார். இன்னொரு பக்கம், ஏர் ஹாஸ்ட்ரஸ், ஸ்டெனோ, ரிசப்ஷனிஸ்ட் இப்படியான வேலைகளுக்கும் முயற்சித்துக் கொண்டும் இருந்திருக்கிறார். அப்படியான நேரத்தில், கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து பாலச்சந்தரின் கண்ணில் அந்த ஹிந்தி பத்திரிகையில் வந்த மதுபாலாவின் புகைப்படம் பட, அதில் ஹேமமாலியின் உறவினர் என்ற செய்தியை பார்த்து, சென்னையில் இருக்கும் ஹேமமாலியின் அம்மா வீட்டிற்கு ஃபோன் செய்து விசாரித்து, ‘அழகன்’ படத்தின் ஸ்வப்னாவாக மாறியிருக்கிறார். நிராகரிக்கப்பட்ட படம் ஒன்றிற்காக எடுக்கப்பட்ட புகைப்படமே பாலச்சந்தரின் மோதிரக் கையால் குட்டு வாங்க காரணமாகவும் அமைந்திருக்கிறது. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்பது மதுபாலாவின் வாழ்வில் நிஜமான தருணம் அது!

அழகன் திரைப்படத்தில் மம்முட்டி, பானுப்பிரியா, கீதா என நடிப்பில் நிரூபித்த பெரும் கலைஞர்களோடு எடுத்த எடுப்பில் நடிப்பில் சமமாக போட்டிப் போடக்கூடிய கதாபாத்திரம் மதுபாலாவிற்கு. துறுதுறுவென சேட்டை செய்து கொண்டிருக்கும் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி, முதல் படத்திலேயே நடிப்பில் டிஸ்டிங்ஷன் அடித்திருந்தார். பாலச்சந்தர் அப்படி வேலை வாங்கி மதுபாலாவை ஜொலிக்க வைத்திருப்பார். மதுபாலாவிற்கு அது பதின்ம வயது என்பதால் அழகியாகவும் வெளிப்பட்டார். குறிப்பாக ‘துடிக்கிறதே நெஞ்சம்’ மற்றும் ‘தத்தித்தோம்’ என இரண்டு அழகிய பாடல்கள் அவருக்கு அமைந்து இருந்தன. அவற்றில் தனது நடனத்திறமையையும் வெளிக்காட்ட முதல் படத்திலேயே நல்ல வாய்ப்பும் அவருக்கு அமைந்திருந்தது. அதை சரியாக பயன்படுத்தியும் இருந்தார்.

இதே வருடத்தில் , ஹிந்தியில் அஜய் தேவ்கன் ஹீரோவாக அறிமுகமான ‘Phool Aur Kaante’ என்கிற ஹிந்திப் படத்தில் மதுபாலா, ‘மது’ என்கிற பெயரில் ஹிந்தியிலும் அறிமுகம் ஆகிறார். நடிப்பு சரியாக வரவில்லை என்று ஒதுக்கப்பட்ட அதே ஹிந்தி சினிமாவில், தான் அறிமுகம் ஆகிற முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிக்கைக்கான ஃபில்ம்ஃபேர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் மதுபாலா தனது பெயரை இடம்பெறச் செய்தார். இந்தப் படத்தில் மெழுகு பொம்மை போன்ற தோற்றத்தில் அழகிலும் மதுபாலா அசரடித்திருப்பார்.

அடுத்ததாக , ‘ஒத்தையாள் பட்டாளம்’, ‘நீலகிரி’ என மலையாளத்தில் நல்ல நல்ல கதாபாத்திரங்களில் சில படங்கள் செய்கிறார். மீண்டும் தமிழுக்கு பாலச்சந்தரே தனது லட்சிய திரைப்படமான ‘வானமே எல்லை’யில் வாய்ப்பு கொடுக்கிறார். வயதான கோடீஸ்வரனுக்கு மனைவியாகி, திருமணத்தன்றே தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் வீட்டை விட்டு ஓடிப்போகிற கதாபாத்திரம். அதிலும் தேர்ந்த நடிப்பில் வெளிப்பட்டார் மதுபாலா.

இந்த நிலையில்தான் பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனத்திற்கு மணிரத்னம் அவர்கள் ஒரு திரைப்படம் இயக்க கையெழுத்திடுகிறார். ரோஜாவாக மாறுகிற அந்த திரைப்படத்திற்கு, நாயகி தேடல் தொடங்குகிறது.. கதாநாயகியை மையமாகக் கொண்டு நகர்கிற அந்தக் கதைக்கு புதுமுகங்கள் தொடங்கி அன்றைய லைம்லைட் நாயகிகள் வரை ஆலோசிக்கப்படுகிறார்கள்.. அப்போது, பாலச்சந்தரின் பரிந்துரையில் மதுபாலா உள்ளே வருகிறார். மதுபாலாவிற்கு இன்றும் அடையாளமாக இருக்கும் ரோஜா அப்படியாக அமைந்தது. தயாரிப்பாளரின் பரிந்துரை, போக அவரே பெரும் இயக்குநர் என்கிற போது அவரின் பரிந்துரையைத் தட்ட முடியாமல்கூட மணிரத்தினம் , மதுபாலாவை ரோஜாவாக்க முடிவு செய்திருக்கலாம். ஆனால், படமாக உருவான பின், மதுபாலாவைத் தாண்டி இன்னொருவரை ரோஜாவாக மணிரத்தினத்தாலயே கற்பனையே செய்திருக்க முடியாத அளவு, சிறப்பான பர்ஃபார்மராக மதுபாலா இந்த படத்தில் வாழ்ந்திருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

பாவாடை சட்டை அணிந்து துறுதுறுவென நெல்லையின் கிராமம் ஒன்று ‘சின்ன சின்ன ஆசை’ என பாடித்திரியும் விடலைப்பெண்ணாக அறிமுகமாகி, எதிர்பாரா நேரத்தில் திருமண பந்தத்தில் நுழைந்து, புதுமணத் தம்பதியாக இருக்கும் சூழலிலேயே தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொண்ட தன் கணவனை மீட்க எடுக்கும் முயற்சி வரை மதுபாலா தனது நடிப்பால் தொடர் ஆச்சரியங்களை நிகழ்த்திய திரைப்படம் இது. அந்த மேஜிக் நிகழ மணிரத்தினத்தின் கதாபாத்திர உருவாக்கம் மற்றும் இயக்கம் பெரிய காரணம்.

ரோஜாவின் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கில் ‘அல்லாரி பிரியடு’ என்கிற திரைப்படத்தில் டாக்டர் ராஜசேகரின் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பு. ரம்யா கிருஷ்ணன் – மதுபாலா இருவருக்கும் நடிப்பில் சமமான வாய்ப்பினை வழங்கிய திரைப்படம் இது. இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டானவை. மதுபாலாவின் கெரியரிலேயே அவரை உச்சமான அழகியாக காட்டிய திரைப்படம் என்கிற அடையாளத்தினை இந்த அல்லாரி பிரியடுக்கு கொடுக்கலாம். இந்தப் படம் ‘யாருக்கு மாப்பிள்ளை யாரோ’ என்கிற பெயரில் தமிழிலும் வெளியாகி நன்றாக ஓடியது.

‘ரோஜா’ ஹிந்தியிலும் பெரிய வெற்றி அடைந்த நிலையில் , மதுபாலாவிற்கு தொடர் ஹிந்தி வாய்ப்புகள் அமைய, தமிழில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் நடித்தார்.. அப்படியாக நடித்தவருக்கு ரோஜாவிற்குப் பிறகு தமிழில் அமைந்த சிறந்த வாய்ப்பு , இயக்குநர் ஷங்கரின் முதல் படமான ‘ஜெண்டில் மேன்’. 1993 ல் வெளியான இந்தப் படத்தில் அர்ஜூன் ஜோடியாக சுசீலா என்கிற கதாபாத்திரத்தில் சிறப்பான பங்களிப்பைச் செய்திருந்தார் மதுபாலா. அர்ஜுனை ஒருதலையாக காதலிக்கும் வெகுளிப் பெண் போல ஆரம்பக் காட்சிகளில் வருபவர், அர்ஜுனின் குற்றப் பின்னணி அறிந்து வெகுண்டு எழும் கோபக்காரியாக, பிறகு உண்மை தெரிந்து அஜுனுக்கு உறுதுணையாக மாறுவது என மதுபாலாவிற்கு நடிக்க நல்ல தீனி போட்ட திரைப்படம் இது. இந்தப் படத்தில் ‘என் வீட்டுத் தோட்டத்தில்’, ‘ஒட்டகத்த கட்டிக்கோ’ மற்றும் ‘உசிலம்பட்டி பெண்குட்டி’ என மூன்று முத்திரைப் பாடல்களில் மதுபாலாவின் நடனத்திறமை அற்புதமாக பதிவாகியிருக்கும்.

ஜெண்டில் மேன் அத்தனை பெரிய வெற்றி அடைந்தும் , மதுபாலாவிற்கு அடுத்து உடனடியாக தமிழில் படங்கள் அமையவில்லை. ஹிந்தியில்தான் நடித்துக் கொண்டிருந்தார். இடையிடையே மலையாளம், கன்னடம், தெலுங்கு சினிமாக்களில் ஓரிரு படங்கள் செய்திருந்தார். 1994 ஆம் ஆண்டு மனோஜ்குமார் இயக்கத்தில் பிரசாந்த் ஜோடியாக ‘செந்தமிழ்ச் செல்வன்’ திரைப்படத்தில் மீண்டும் தமிழுக்கு வந்தார் மதுபாலா. இந்தப் படத்தில் மதுபாலாவிற்கு நல்ல கதாபாத்திரம், என்றாலும் ஒட்டுமொத்தமாக ஒரு திரைப்படமாக அதன் கதையில் வலுவில்லாத காரணத்தால் தோல்வியடைந்தது. இந்தப் படத்தில் மதுபாலாவிற்கான ஒப்பனைகளில் மிகவும் சொதப்பி இருப்பார்கள். ‘ரோஜா’, வில் சந்தோஷ் சிவனும், ‘ஜென்டில் மேனில்’ ஜீவாவும் மதுபாலாவின் பிளஸ்களை பிராதனப்படுத்தி கேமரா கோணங்கள் வைத்து, மதுபாலாவை நம்மிடையே பேரழகியாக காட்டியிருந்ததை, இந்த ‘செந்தமிழ்ச் செல்வன்’ திரைப்படத்தில் சல்லி சல்லியாக நொறுக்கிப் போட்டிருப்பார்கள். மதுபாலாவிற்கான தமிழ் வாய்ப்புகள் மொத்தமாக இல்லாமல் போக இந்தப் படமும் ஒரு காரணமாக என்னளவில் ஒரு தோணல் உண்டு.

இதன் பிறகு , 1996 ல் பிரபுதேவா ஜோடியாக ‘மிஸ்டர் ரோமியோ’ மற்றும் பிரபுவின் ஜோடியாக ‘பாஞ்சாலங்குறிச்சி’ ஆகிய இரண்டு படன்களில் நாயகியாக நடித்தார். இவற்றில் ‘மிஸ்டர் ரோமியோ’ திரைப்படத்தில் ‘தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை’ என்கிற பாடலில் பிரபு தேவாவிற்கு ஈடுகொடுத்து அவர் ஆடிய நடனம் மறக்க முடியாத ஒன்று. சீமானின் ‘பாஞ்சாலக்குறிச்சி’ திரைப்படத்தில் பொட்டுக்கன்னி என்கிற கதாபாத்திரத்தில் முதன் முதலாக கிராமத்துப் பெண்ணாக நடிக்கும் வாய்ப்பு, சிறப்பாகவும் நடித்திருந்தார். ‘உன் உதடோர செவப்ப’ , ‘சின்ன சின்ன பனித்துளி’ ,’ஆத்தோரம் தோப்புக்குள்ள’ என பாடல் காட்சிகளில் மதுபாலாவை அழகாக காட்டிய திரைப்படங்களில் இந்தப் பாஞ்சாலங்குறிச்சிக்கும் ஓர் இடமுண்டு. இதன் பிறகு தமிழில் அவருக்கான வாய்ப்புகளே இல்லாமல் போய்விட்டன. அதே நேரத்தில், ஹிந்தியில் சொல்லிக்கொள்ளும்படியா எண்ணிக்கையில் படங்கள் தொடர்ந்து அவருக்கு அமைந்தன. எனினும் அவை சொல்லிக் கொள்ளும்படியான கதாபாத்திரங்கள் என்றும் சொல்ல முடியாது.

தமிழில் வாய்ப்பில்லாமல் போனவர், சன் டிவியில் ‘காவேரி’ என்கிற குறுந்தொடர் ஒன்றில் 2000த்தின் தொடக்க ஆண்டுகளில் நடித்திருந்தார். 2014 ல் ‘வாயை மூடி பேசவும்’ திரைப்படத்தின் மூலம் குணச்சிதிர கதாபாத்திரம் ஒன்றில் மீண்டும் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றவர், தொடர்ச்சியாக ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழி திரைப்படங்கள்,வெப் சீரிஸ் என தற்போது பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

மதுபாலா, தமிழில் நாயகியாக நடித்தத் திரைப்படங்களின் எண்ணிக்கை வேண்டுமானால் சொற்பமாக இருக்கலாம்.. ஆனால் அவர் சிறந்த நடிகை, சிறந்த நடனக் கலைஞர் என்பதனை இந்த சொற்ப வாய்ப்புகளிலேயே அழுத்தமாக நிரூபித்திருக்கிறார். அவரின் ஒட்டுமொத்த கெரியருக்குமே ‘ரோஜா’ என்கிற ஒற்றைப் படமே போதும். இனியும்கூட அவர் எத்தனையோ வாய்ப்புகளில் பிராகசிக்கக்கூடும் ஆனாலும் அவரின் அடையாளம் ‘ரோஜா’வை மிஞ்சிய ஒன்றாக மாறவே முடியாது. அவர் காலத்துக்கும் காலர் தூக்கிவிட்டுக்கொள்ள அதுவே பிறவிக்கும் போதுமானதும்கூட!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top