Ilayaraja

நான் ஏரிக்கரை மேலிருந்து… அவரின் குரலில் வெளிப்படும் பிரத்யேக ஒலி, பிறவிக்குமான ஒளி!

5 / 100 SEO Score

90களில் பால்யம், பதின்மத்தை கடந்த பலரும் , ‘சின்னத்தாயி’ திரைப்படத்திற்காக ராஜா கொடுத்த இந்த ‘நான் ஏரிக்கரை மேலிருந்து’ பாடல் மீது ஒரு தீரா மையலைக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக, கிராமப்புறத்தை பின்னணியாகக் கொண்டவர்களுக்கு இது மனதுக்கு மிக நெருக்கமான பாடலாக இருக்கும்.

நானும் இந்த காலகட்டத்தில் பதின்மத்திற்குள் நுழைந்தவன் என்பதாலும், கிராமப்புறப் பின்னணியைக் கொண்டவன் என்பதாலும் இந்தப் பாடலின் மீது இயல்பாகவே அணுக்கம் உண்டானது.

‘சின்னத்தாயி’ திரைப்படம் வெளியான போது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.. எங்கள் ஊரில் நடந்த திருமணம் ஒன்றில், VCR ல் ‘சின்னத்தாயி’, ‘தங்கமனசுக்காரன்’ மற்றும் ‘தெற்குத்தெரு மச்சான்’ மூன்று படங்களையும் ஓட்டினார்கள். அன்றைய நாளில் , கிராமப்புறத்தின் விசேஷ வீடுகளில் இப்படி VCR மூலம் புதிய திரைப்படங்களை ஓட்டுவது கௌரவக் குறியீடாக இருந்தது. ஊரில் ஏதேனும் சுப நிகழ்வு என்று தெரிந்தாலே , அவங்க வீட்டுல என்ன படம் ஓட்டுவார்கள் என்கிற பேச்சுத்தான் சிறுவர்கள் மத்தியில் பேசுபொருளாக இருக்கும்.

அப்படி ஆர்வமாக பள்ளி நாட்களில் , என்னுடைய பால்ய நண்பர்களோடு கொட்டும் பனியில் அமர்ந்து பார்த்த இந்தத் திரைப்படம் அந்த வயதிலேயே பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியது. சிறப்பான திரைப்படங்களில் ஒன்று. இந்தப் படத்தில், ‘அரும்பரும்மா சரம் தொடுத்த’, ‘ஆறுமுகம் மங்கலத்தில்’, ‘நான் இப்போதும் எப்போதும்’, ‘நான் ஏரிக்கர மேலிருந்து’, ‘கோட்டையவிட்டு’ என அனைத்துப் பாடல்களுமே சிறப்பானவையாக இருந்தும், இந்தப் படத்தினைப் பார்த்த நாளில் ‘கோட்டையவிட்டு வேட்டைக்குப் போகும் சுடலமாட சாமி’ பாடல் மட்டுமே நினைவில் தங்கியது. படத்தில் சிறுவர்கள் ஒன்றாக சேர்ந்து பாடுவதாக வரும் வெர்ஷன் அன்றைய நாளில் சிறுவனாக இருந்த எனக்கு எளிதாக கணெக்ட் ஆகியிருக்கக்கூடும், மேலும், படத்தின் கதையை ஒட்டி சுடலமாடசாமியை பாடுபொருளில் கொண்டிருந்ததாலும் தனித்து தெரிந்திருக்கலாம்.

ஆனால் , பின்னாளில் மற்ற பாடல்களைப் பின் தள்ளி, ‘நான் எரிக்கரை மேலிருந்து’ பாடல் மட்டுமே மனதை முழுமையாக ஆக்கிரமித்தது. ‘பதினாறு வயதானால் பருவத்தில் எல்லோருக்கும் படர்கின்ற காதல் அதிசயம்’ என்று வைரமுத்து அவர்கள் சொன்னது போல, பதின்மத்தில் அந்த அதிசய கணங்களைக் நானும் கடந்திருக்கிறேன்.. அதை காதல் என்றெல்லாம் சொல்ல இயலாது, அதற்கு முந்தைய பெயரில்லா ஒரு நிலை.. அங்கே பார்வை பரிமாற்றங்களும், காரணமில்லா குறுநகைகளும் மட்டுமே நிரம்பி இருக்கும்.. அப்படி பட்டாம்பூச்சி பறந்த நாட்களில், என்னையறியாமல் என்னுடைய நோட்டில்,

‘கையேந்தும் ஆட்டுக்குட்டி கன்னிப்பெண்ணா மாறாதோ

மையேந்தும் கண்ணக் காட்டி மையல் தீர பேசாதோ’

என இந்தப் பாடலின் வரிகளைத்தான் எழுதி வைத்திருந்தேன். இப்படி ஒரு வரியின் மீது கவனம் சென்ற காலத்தில்தான் இந்தப் பாடலும் எனக்குள் ஆக்கிரமிப்பை முழுதாக செய்திருக்க வேண்டும் என்று இப்போது முடிவு செய்கிறேன்.

என்ன மாதிரி வரிகள் இவை.. மேலோட்டமாக பார்க்க எளிமையாக தெரிந்தாலும், காட்சி படிமமாக பார்க்க , அதுவும் ஆட்டுக்குட்டியை கையேந்திய அனுபவம் கொண்டவர்களுக்கு இந்த வரிகள் இன்னுகூட கூடுதலாக சிலிர்ப்பை உண்டு பண்ணக்கூடியது. வாலி எழுதிய வரிகள் என்றாலும் , இந்தப் பாடலை படமாக்கிய விதத்தின் அடிப்படையில் இயக்குநர் கணேஷ் ராஜாவின் விஷுவல் சென்ஸை உள்வாங்கியதில் எனக்கு ஒரு தோணல் உண்டு. பாடலின் சூழலை வாலி அவர்களுக்கு விளக்கும்போதே, நாயகன் இப்படியான சூழலில், கையில் ஆட்டுக்குட்டியை ஏந்தி நின்றெல்லாம் பாட வேண்டும் என்கிற ஒரு சிறு விதையினை கொடுக்க, அதை வாலி விருட்சமாக்கி இருக்க வேண்டும் என்பதே அந்தத் தோணல். காரணம், ஒரு பாடலாசிரியருக்கு காதல் அரும்பும் சூழல் என்பதே பிராதானமாக இருக்கும், காதல் உணர்வுகளை அவர்களால் எளிதாக சொற்களைக் கோர்த்து வரிகளாக்கிவிட முடியும், ஆனால் இப்படியான காட்சிப்படிமங்களோடு ஒரு வரி வந்து விழுகிறது என்கிற இடத்தில் இயக்குநரின் கதை சொல்லல் அல்லது சூழலை விவரிக்கும் நேர்த்தியினால் ஒரு பாடலுக்குள் நிகழ்கிற கூடுதல் அழகாக என் பார்வை இருக்கிறது. இதுதான் உறுதி என்று சொல்லவில்லை, எனக்கு அப்படி ஒரு தோணல் இருக்கிறது. எந்த அளவு , அந்த வரிகள் என்னை வசியப்படுத்தியிருந்தால், இப்படியான தோணல்களை நான் கொண்டிருப்பேன் என்கிற ரசிக போதையை உணர்த்துகிறேன்.. அவ்வளவே!

பாடலை கேட்கிற அனுபவத்திற்குள் வருவோம்.. ராஜாவின் இசையே எப்படி ஷாட்ஸ் வைக்க வேண்டும் என பிரித்துக் கொடுத்துவிடும் என்பார்கள்.. அதற்கு இந்தப் பாடல் மிகப்பெரிய உதாரணம். நீரோட்டம், மேகக்கூட்டம் நகர்வது, பறவைகள் பறப்பது, கட்டை வண்டிகள் செல்வது, ஆட்டுக்குட்டி ஓடுவது இப்படி அனைத்திற்குமே இசையிலேயே இயக்குநரின் வேலையை எளிதாக்கிக் கொடுத்திருப்பார். இப்பாடலில் தபேலாதான் மேலோங்கித் தெரியும், அது கிராமத்து இசை ரசிகனிடம், அவனுடைய மண் வாசத்தை நுகர்கிற மாதிரியான ஒரு மயக்கத்தைத் தரக்கூடியது. அப்படி கிராமத்து இளைஞர்களை மயக்கும் கலையை பின்னணி இசையில் ராஜா கச்சிதமாக செய்த பாடல்களில் இது முதன்மையானது.

இப்படி ஒரு தெம்மாங்கு மெட்டில் ஜேசுதாஸை ராஜா எப்படி யோசித்தார் என்பது ஒரு ஆச்சரியம். எஸ்.பி.பியோ மனோவோ பாடியிருக்க வேண்டிய மெட்டு.. ஆனால், ராஜாவின் மெட்டு என்கிற போது, ஜேசுதாஸ் அவர்களையும் தெம்மாங்குத் தமிழில் ரசிக்க முடியும் என உணர்த்திய பாடலாக இது அமைந்தது. இதற்கு முன்னர் ஜேசுதாஸ், ‘மேகங்கருக்குது மழ வர பாக்குது’, ‘ஏரிக்கர பூங்காத்தே’ என்றெல்லாம் ராஜாவின் இசையிலேயே பாடியிருகிறார் என்றாலும் , இந்த ‘ஏரிக்கரை மேலிருந்து’ பாடலில்தான் ‘சோறுதண்ணி வேணுமுன்னு தோணல’ என்றெல்லாம் வரிகளைக்கொண்ட முழுமையான மண் மணக்கும் மெட்டு ஒன்றில், அவரின் குரல் ஒலித்த பாடல் எனலாம். அதனை அவர் சிறப்பாகவும் பாடியிருந்தார்.

இந்தப் பாடலின் மற்றொரு பெரிய வசீகரம் ஸ்வர்ணலதா!, ஜேசுதாஸ் முடித்த பின், கிராமிய மணத்தோடு கோவை கமலா அவர்களின் குரலில் ‘நான் மாமரத்தின் கீழிருந்து’ என செல்லும் மெட்டு, ஒரு அழகிய குறு இடையிசையைக் கடந்து ஸ்வர்ணலதாவிடம் வரும்.. ‘நான் மாமரத்தின் கீழிருந்து’ என ஸ்வர்ணலதா, தனது பதின்மத்தின் குரல் கொண்டு ஆரம்பிக்கும்போதே புல்லரிக்க ஆரம்பித்துவிடும். அதுவும் அந்த ‘முன்னும் பின்னும்’ உச்சரிப்பெல்லாம் அப்படியொரு மயக்கத்தைத் தரும். ‘காணல’, ‘தோணல’ என வரிகளை முடிக்கிற இடங்களில் அவரின் குரலில் வெளிப்படும் பிரத்யேக ஒலி, பிறவிக்குமான ஒளி!

போலவே,

‘மச்சான் கை பட்டாக்கா முச்சூடும் தீராதோ,

அக்காளின் பொண்ணுக்கோர் பொற்காலம் வாராதோ’

என்கிற இடமும் மீண்டும் மீண்டும் ஸ்வர்ணலதாவின் குரலுக்காகவே கேட்கத் தூண்டுகிற வரிகளாக இருக்கும்.

ஊரில் இருந்த நாட்களிலேயே இப்படி எல்லாம் அணு அணுவாக ரசித்த இந்தப் பாடல், சென்னைக்கு பிழைப்பு நிமித்தம் வந்த பின் என்ன மாதிரியான தாக்கத்தை உண்டு பண்ணுகிறது தெரியுமா? இந்தக் காலகட்ட பாடல்களை ஒலிக்க விட்டால், ஊரில் இருக்கிற சுகம் கிடைக்கும்.. அதிலும் குறிப்பாக இந்தப் பாடல் செய்கிற தாக்கமோ மிகப் பெரியது. பாடலின் முதல் இடையிசையில் மேகம் பறக்கிற மாதிரி ஒரு இசை துணுக்கு வரும்.. அந்த இசையைக் கேட்கும் போது , அப்படியே துல்லியமாக என்னால் என்னுடைய பதின்மத்திற்குள் நுழைந்துவிட முடிகிறது.. சம்பா அறுவடை நேரத்தில் சில நேரம் கடும் மழை நாட்களாக அமைந்துவிடும்.. அந்த மாதிரி நாட்களில் வானம் வெட்டாப்பு விடுகிற இடைவெளியில், சாலையில் வைக்கோலை காய வைப்பார்கள்.. அந்த வெட்டாப்பு விட்ட வானத்தில் பஞ்சு பஞ்சாக கொழுத்த மேகங்கள் பறக்கும்.. அவற்றைப் பார்த்துக்கொண்டே அந்த வைக்கோலில் குட்டிக்கரணம் அடித்து விளையாடிய நாட்களை இந்த பாடலின் அந்த இடையிசை தத்ரூபமாக எனக்குள் கொண்டு வரும்.

கூடுதலாக, பதின்மம் வரை கிராமத்திலும், அதன் பிறகு நகரத்திலுமாக நாட்கள் ஓடுவதில், கிராமிய நினைவுகள் மனதில் இருந்தாலும், என்னால் முழுமையான கிராமத்தானாக ஊருக்குச் சென்றால் இருக்க முடிவதில்லை, நம்மின் நினைவில் தங்கியிருக்கும் கிராமமாகவும் அது இல்லை. போலவே முழு நகரத்தானாகவும் என்னால் மாற முடியாது.. இது ஒரு மாதிரி திரிசங்கு நிலை.. இப்படியான சூழலில், இந்த ‘நான் ஏரிக்கரை மேலிருந்து’ மாதிரியான பாடல்களைக் கேட்கிற போது, அது அப்படியே கலப்படமற்ற அந்த 90களின் எனது கிராமத்தையும் , அன்றைய மனிதர்களையும் அப்படியே கண் முன்னே கொண்டு வருவதால் இந்தப் பாடலுடனான நெருக்கம் , ‘feeling fine sipping wine’ போல ஆகிவிட்டது. இது, கற்பனையானது எனத் தெரிந்தும் அதற்குள் தொலைந்து போகிற கிறுக்குத்தனத்தை தெரிந்தேதான் செய்கிறேன். என் காலத்துக்கும் அதை செய்வேன், செய்து கொண்டேவும் இருப்பேன்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top