சரத்குமாரின் ‘கேப்டன்’ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழிலும் தெலுங்கிலும் வெளிவந்தது. அந்தப் படத்தில், ‘கன்னத்துல வை’, ‘இடுப்பு அடிக்கடி புடிக்குது’, ‘உனக்கு ஒரு மச்சம்’ , ‘கண்ணில் ஆடும் ரோஜா’ என சிற்பி கொடுத்த அத்தனை மெட்டுகளுமே ஹிட் ரகங்கள். இவற்றில் ‘கன்னுத்துல வை’ இன்றளவும் டவுன் பஸ்களில் தவிர்க்க முடியாத பாடலாக ஒலித்துக்கொண்டிருக்கும் மெட்டு. கேட்டதும் ஈர்க்கக்கூடிய வெகுஜன சுவார்ஸ்யக் கூறுகளை ,அந்தப் பாடல் தாராளமாகக் கொண்டிருப்பதே காலம் கடந்தும் கிராமப்புறங்களில் அந்தப் பாடல் இன்றும் நின்று கோலோச்சிக்கொண்டிருக்கிறது.
ஆனால், கேப்டன் திரைப்படம் என்றால் எனக்கு முதலில் நினைவு வருவதும், பிடித்த பாடலாகவும் இருப்பது எஸ்.பி.பி – ஸ்வர்ணலதா இணை குரலில் வந்த ‘கண்ணில் ஆடும் ரோஜா’ பாடல்தான். இந்தப் பாடலின் பெரிய சுவாரஸ்யம் ஸ்வர்ணலதாவின் குரலும், அவருக்கே உரித்தான சங்கதிகளும் என்பேன்.
இந்தப் பாடலின் தெலுங்கு வடிவத்தையும் முதலில் கேட்டுவிட்டு, பிறகு தமிழில் கேட்பது இன்னும்கூட வித்தியாசமான அனுபத்தை வழங்கும். ‘மாடே ராணி மைனா’ என தெலுங்கில் தொடங்கும் இந்தப் பாடலை எஸ்.பி.பியோடு சித்ரா இணைந்து பாடியிருப்பார். சித்ரா, மிகவும் மென்மை தோய்ந்ததொரு பாவத்தில் இந்த மெட்டினை அணுகியிருப்பார். மாறாக, எஸ்.பி.பியின் குரலோ அழுத்தமாக ஒலித்து, ஒட்டு மொத்த பாடலிலும் எஸ்.பி.பியே பிரதானமாகத் தெரிவார். ஆனால் தமிழ் வடிவத்தில் ஓடுதளம் தேவையின்றி நின்ற இடத்திலேயே விமானம் மேலெழும்பினால் எப்படியிருக்கும்? என்கிற கற்பனைக்கு வடிவம் கொடுப்பது போல, கணீர் என ‘கண்ணில் ஆடும் ரோஜா’வை ஆரம்பிக்கிற இடத்திலேயே முற்றிலும் ஸ்வர்ணலதா தனது மெட்டாக மாற்றியிருப்பார்.
‘வார்த்தை வாழ்க்கை ரெண்டும் வந்ததோ’ என்ற வரியின் முடிவில், பிடிக்கு நழுவும் மீனின் செயலாக வழுக்கிக் கொண்டு ஓடும் ’ஹோ ஓ ஓ’ சங்கதிக்காகவே அவ்வளவு பிடித்த பாடல் இது. ‘வெற்றிக் குங்குமமே ஓஹோ’, ‘சங்கமமே ஓஹோ’ என தொடர்ச்சியாக ஸ்வர்ணலதாவின் குரலில் வரும் அந்த ‘ஓஹோ’ சங்கதிகளும் அதற்கு இணையாக கூட்டு சேரும் புல்லாங்குழலும் சொல்லில் கடத்திவிட முடியாத ஒரு மாய மயக்கத்தை உண்டு செய்யும். ‘சோலை பூங்கொடி தாலி கொண்டதோ’ வரியில் அந்த பூங்கொடியை அவர் இழுத்துக்கொண்டே செல்கிற இசைக்குறிப்பும் இந்தப் பாடலில் நம் செவிகளுக்கான ஜாக்பாட் சங்கதி!
போலவே, ‘அந்த மெத்தை வித்தை’ என இரண்டாம் சரணத்தில் எஸ்.பி.பி, ஓரிடத்தில் நிறுத்த, ஸ்வர்ணலதா ’ஹோ ஓ’ என்று இதே சங்கதியை கொடுப்பார்.. அந்த இடத்தில் , அதுவரை ஒலித்த ‘ஒஹோ’க்களில் இருந்து மாறுபட்டு, கையின் பிடியில் நழுவிய மீன், விருட்டென்று தண்ணீருக்குள் பாயல் போடுவதானத் தொனியில் துரித கதியில் அத்தனை வளைவு நெளிவுகளோடு ஈர்ப்பாக இருக்கும். இதன் காரணமாகவே , மனப்பதிவில் இது ஸ்வர்ணலதாவின் தனிப்பாடல் என்கிற அளவிற்கு தங்கி இருக்கிறது. ஸ்வர்ணலதாவின் தனித்துவம் சிறப்பாக பதிவாகிய பாடல்களில் இந்த ‘கண்ணில் ஆடும் ரோஜா’ பாடலுக்கும் ஒரு சிறப்பிடம் கொடுக்கலாம்.
