1991 ல் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ திரைப்படத்திற்காக ராஜா கொடுத்த அனைத்து பாடல்களும் சிறப்பானவை. கிராமிய கதைக்களம் என்றால் ராஜாவிற்கு மண்வாசத்துடனான மெட்டுகள் அருவி மாதிரி கொட்டும், அதுவும் பாரதிராஜாவின் படங்களில் அது பேரருவி அவதாரம் எடுத்துவிடும்.
‘பரணி பரணி பாடி வரும் தாமிரபரணி’, ‘சிட்டாஞ் சிட்டாங்குருவி’, ‘கருத்த மச்சான்’ , ‘ஏ மரிக்கொழுந்து’ என மண் மணக்க ஒவ்வொரு மெட்டும் தனித்து சிலாகிக்கப்பட வேண்டிய ரகம். இவை அனைத்துமே பிடித்த பாடல்கள்தான் என்றாலும் ஏனோ ‘பூ பூ பூ பூத்த சோலை’ பாடல்மீது எனக்கு தனி மயக்கம் உண்டு. இந்தப் படத்தில் , நகரத்தில் படித்துவிட்டு கிராமத்துக்கு வரும் இளம் காதல் ஜோடிக்கான ஒரு பாடல் தேவைப்படுகிற இடத்தில் ராஜா கொடுத்த மெட்டுதான் இந்த ‘பூ பூ பூ பூத்த சோலை’
மேற் சொன்ன மற்ற பாடல்களில் இருந்து இந்தப் பாடல் மட்டும் தனித்து நிற்கும். இந்தப் பாடலில் இடம்பெறும் நாயகன் – நாயகிக்கு வேர் கிராமம் என்றாலும், நடை உடை பாவனைகளில் நகர நாகரிகத்தின் தாக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த இரண்டு விஷயமும் இந்தப் பாடலின் பின்னணி இசையிலும் வரிகளிலும் பிரதிபலிப்பது போலவே இருக்கும். பின்னணியில் ரிதமாக ஒலிக்கும் தபேலா கிராமத்தின் வேராகவும், அமரனின் தேர்ந்த கவிதை நடையிலான வரிகள் நாயகன் நாககிக்கு படித்தவர்களின் காதல் என்கிற அடையாளத்தையும் வழங்குவது போல இருக்கும்.
இந்தப் பாடலை பொருத்த மட்டில் சூழலுக்கும் மெட்டு அமைத்து, வரிகளின் பொருளுக்கும் சேர்த்து இசை பிரவாகம் நடத்தியிருப்பார் ராஜா. பாடலின் தொடக்கத்திலேயே வண்டுகளின் ரீங்காரம் போல ஒரு சத்தம் ஒலிக்க ஆரம்பிக்கும்.. அது, பூ பூத்த சோலைகளில் கேட்கக் கிடைக்கும் சத்தம். பாடல் முழுக்க அந்த சோலையின் சூழலை இந்த இசை உணரக் கொடுத்தபடி இருக்கும். தபேலாக்கூட வழக்கத்திற்கு மாறாக, ஒரு மான் குட்டியின் துள்ளல் போல தாவி தாவி ஒலிக்கும்.. அது அந்தக் காதலரின் பதின்ம வயதின் துள்ளலுக்கு அத்தனை பொருந்தி போயிருக்கும்.
இந்தப் பாடலின் ராஜாவை எத்தனை வியக்கிறேனோ, அதற்கு நிகராக அமரனின் வரிகளும் வியப்பினைத் தரும். இந்தப் பாடலில் அடுக்கி வரும் சந்த நடை , சொற்களின் தேர்வு இவற்றையெல்லாம் கவனித்து இது வாலியின் வரிகளாகத்தான் இருக்கும் என ரொம்ப காலம் நினைத்திருந்தேன். நினைத்ததென்ன அப்படித்தான் நம்பி வாலியை வியந்து கொண்டிருந்தேன்.
பிறகுதான் இந்தப் படத்தின் வாலி பாடல்களே எழுதவில்லை என்கிற விஷயம் அறிந்து, தேடிய போது அமரன் நெய்த தமிழ்க்கோவை என்பதை அறிந்து வியப்பு இரட்டிப்பானது. உண்மையில் , அமரனின் பாடலாசிரியர் திறமையை நாம் பெரிதாக அறியாததாலயே அந்த வியப்பு பெரிதாக வருகிறது. அமரனும் இவற்றை எல்லாம் எளிதாக கடந்து செல்கிறார்.. அவரின் திறமையின் மீது அவரே சந்தேகம் கொள்கிறவராகவே தன்னை அவர் வெளிப்படுத்திக் கொள்வதாலும்கூட அவரை நாம் சாதரணமாக கடந்துவிடுகிறோமோ என்கிற எண்ணம் சமீப காலமாக அவரை தொடர்ந்து உள்வாங்குதலில் வருகிறது.
‘நேற்றொரு கோலமடி
நேசமிது போட்டது பாலமடி’
நேசத்தால் இரு மனங்களுக்கு இடையில் பாலம் போடுவது என்பது எத்தனை ரசமான கற்பனை.
‘இரவுகள் முழுவதும் தலைவன் மடி
இனிமைகள் இணைந்தபடி’
‘உறவுகள் உணர்வுகள் உயர்ந்தபடி
உடலது நனைந்தபடி’
காதலும் காமமும் எத்தனை இயல்பாக அழகிலோடு சொற்களாக வந்து விழுந்திருக்கின்றன. அதுவும் மடி, படி என மெட்டில் சந்தத்தோடும் பொருளோடும் நெருடலே இல்லாமல் இப்படி சொற்களில் விளையாடிய இடத்தில்தான் நான் வாலியின் நினைவைக் கொண்டேன். இதெல்லாம் பாடலுக்குள் உள்ளே வந்து வியக்கிற விஷயங்கள்.. ஆனால் பல்லவியிலேயே சோலை, பூமாதுளை, புலாங்குழல், பூவின் மடல், பூவை மனம், பூங்காவனம் என அந்த பூ என்று ஆரம்பிக்கிற பல்லவியை அணுசரித்து அழகுக்கூட்டும் சொற்களிலே அமரன் கவனிக்க வைத்துவிடுவார்.
எஸ்.பி.பியும் ஜானகியும் அப்படி அனுபவித்துப் பாடியிருப்பார்கள். குறிப்பாக, அந்த ‘பூ பூ பூ’ என அவர்கள் பாடுகிற போது, ஓரிடத்தில் பாடியது போல மற்றொரு இடத்தில் பாடாமல் காட்டும் வேறுபாடுகள் பாடலுக்கு கூடுதல் ஈர்ப்பினை அள்ளி வழங்கி இருக்கும்.
‘ஏற்றுது பாரமடி இரு விழிகள் எழுதிய கோலமடி’ வரியில் அந்த ஏற்றுது என்கிற சொல்லினை ஏதோ பாரம் ஏற்றுகிற ஓர் இயல்பிலேயே எஸ்.பி.பி பாடுகிற இடத்திற்கு காத்திருந்து ரசித்த காலம் உண்டு. இப்போது, நேரடியாக அங்கே கர்சரை இழுத்து வைத்து ரிப்பீட் செய்து கேட்பது காலம் கொடுத்த கொடை.
இத்தோடு முடிந்ததா? இல்லை, இந்தப் பாடலின் காட்சி வடிவிற்குள் வந்தாலும், பாரதிராஜா அத்தனை சுவாரஸ்யத்தை செய்து வைத்திருப்பார். பாடலுக்கென்று நடன அமைப்பாளர்கள் இருந்தாலுமேகூட பாரதிராஜாவின் கற்பனையும் அந்த கோரியோவில் கலந்தே இருக்கும். நாயகனும் நாயகியும் ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டு ஓடுவது போலவும், பிறகு சட்டென ஒரே சேர நின்று, பிறகு மீண்டும் ஓடுவது போன்ற காட்சிகள் இவரின் நாயகன் நாயகிகளிடம் இருக்கும்.
இந்தப் பாடலிலும் அந்த மொமண்ட்ஸ் அழகோடு பதிவாகி இருக்கும். பசுமையான லொக்கேஷனில் இள மான்குட்டிகள் போல, ஆடிப்பாடும் பதின்ம வயது ராம் அர்ஜுனும், அஸ்வினியும் அத்தனை ரசிக்க வைப்பார்கள். அம்பிகா – ராதாவின் தம்பியான இந்த ராம் அர்ஜூன் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக இருந்து , இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.
இந்தப் பாடலில் அவரின் மேனரிஷங்களில் குட்டி ரஜினியை கவனிக்க முடியும். இரண்டு இடங்களில் அவர் ஸ்டைலாக நடத்து வருவது, அப்படியே ரஜினியின் தாக்கத்திலானது. ஆனாலும், ரசிக்கும்படி செய்திருப்பார். அது போக மிச்ச அநேக ஷாட்களிலும் அஸ்வினியின் பதின்ம அழகுதான் இந்தப் பாடலின் காட்சி வடிவத்தில் பிரதானமாக நம் கண்களை குத்தகை எடுத்துக் கொள்ளும். அப்படியொரு வேறுபட்ட அழகு அது!
