94ம் ஆண்டு மதுரையில் ஏதோ திரையரங்கில் மறு வெளியீடு செய்யப்பட்ட போது முதல் முறையாகப் பார்த்தேன். ஒன்னாப்போ, ரெண்டாப்போ படித்துக் கொண்டிருந்த சமயம். படத்துல மூணே மூணு ஃபைட் தான் என கூட்டிட்டு போன சித்தப்பாவிடம் அங்கலாய்த்து கொண்ட நினைவு.
பின்னர் 11ம் வகுப்பு படிக்கும் போது டிவியில் பார்த்தேன். படம் முழுதாக புரியவில்லை என்றாலும் அதன் உயிர்ப்பான, அசலுக்கு நெருக்கமானக் காட்சிகள் ஈர்த்தது. பெரும்பகுதி ப்ளாஸ்டிக்கான சினிமாக்கள் மத்தியில் ஒரு நல்ல படம் போலும் ‘தேவர் மகன்’ என்ற உணர்வு ஏற்பட்ட நினைவு.
பின்னர் சினிமா ஆர்வமும் சினிமா குறித்த தேடலும், புரிதலும் வளர்ந்துக் கொண்டிருந்த கட்டங்களில் ‘தேவர் மகன்’ மீண்டும் சில முறை பார்க்க நேர்ந்தது. இப்போது கோபுரத்தின் கீழிருந்து அண்ணார்ந்து பார்ப்பவனைப் போல்.. அதன் திரைக்கதையும் திரையாக்கமும் வியக்க வைத்தது, கற்றுக் கொடுக்க ஆரம்பித்தது.
முன் முடிவுகளற்ற மனதோடும், அது ஒரு சாதிவெறிப் படம் என கருத்துக்கள் திணிக்கப்பட்ட மனதோடும் என இரு நிலைகளிலும் ‘தேவர் மகனை’ பார்த்திருக்கிறேன். மொத்தமாக எனக்கு ஏற்பட்ட புரிதலை முன்வைக்கிறேன்.
கிராமியங்களை மையம் கொண்டிருக்கும் பற்பல தமிழ் படங்களின் கதைக்கரு தான் தேவர் மகனிலும்.
ஆண்டை குடும்பங்களின் பங்காளிச் சண்டை. நல்ல ஆண்டை எதிர் விஷம ஆண்டை. இந்த கதை லைன் தான் தேவர் மகனும். எஜமான், சின்னக் கவுண்டர், நாட்டாமை அனைத்திலும் அது தான்.
எஜமான்.. வானவராயன்- வல்லவராயன் சண்டை. வில்லனின் சூழ்ச்சி, ஹீரோவின் இன்னல், ஹீரோ சூழ்ச்சிகளை முறியடிப்பார். சுபம். சின்னக் கவுண்டர்- சந்தனக் கவுண்டர் பங்காளிப் பகை. சூழ்ச்சி, மீட்சி, சுபம். நாட்டாமை எதிரி பண்ணையார் குடும்பங்கள் பங்காளிச் சண்டை. சூழ்ச்சி, மீட்சி, சுபம். இந்த அடிப்படை லைனில் கதையில் சிற்சில மாற்றங்களோடு, சுவாரஸ்யமாக இந்தப் படங்கள் இருக்கும்.
தேவர் மகனிலும் இதே லைன் தான். ஆனால், தேவர் மகன் வேறுபட்டு நிற்கும் இடங்கள் எது.?
இத்தகையை ஆண்டை குடும்பங்களின் அதிகாரச் சண்டையில் நிலமற்ற ஏழை மக்கள் பலி ஆகிறார்கள்.
ஆண்டை குடும்பங்களுக்கு ஆதரவாக ‘கும்பல் மனநிலை’ க்குள் ஆட்படுவதற்கு அவர்களுக்கு சாதிய பெருமித தூண்டல் காரணமாக இருக்கிறது. என்று அழுத்தமாக சொன்ன படம் தேவர் மகன்.
பெரிய தேவரை சித்தரிக்கும் காட்சிகளிலும், மாயத் தேவரை சித்தரிக்கும் காட்சிகளிலும் அவர்களது சாதி பெருமிதவாதம் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
ஆனால், அந்த பெருமிதவாதத்தின் விளைவுகள் என்னென்ன என்பதைத் தான் மொத்த படமும் அழுத்தமாக பேசியிருக்கும். அந்த விளைவை பதிவு செய்தல் தான் படத்தின் மையம் என்பதும், படத்தின் அரசியல் என்பதும்.
அந்த சாதி பெருமிதவாதத்தின், கும்பல் மனநிலையின் விளைவுகள் என்னென்ன??
கோவில் பூட்டை உடைத்ததால் கலவரம். இசக்கியின் கை பறிபோனது. இரு தரப்பிலும் பலத்த உயிர்சேதம், பலருக்கு படுகாயம். ஏழைகள் பலி ஆகிறார்கள்.
அந்த நிலையிலும் ‘உங்களுக்காக கையைக் கொடுத்தது பெருமை’ என்ற தொனியிலே இசக்கி பேசுவார். சக்தி அதனை கொஞ்சமும் ரசிக்காமல் மறுதலிப்பார்.
அடுத்த விளைவு என்ன?
ஏரிக்கரையை தகர்த்து விடுவான் மாயன். ஏழை மக்கள் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து ஒரு குழந்தை இறந்து விடும்.
மனமுடையும் சக்தி.. ‘இந்நிலத்தில் ஏழைகளின் துயர்களை கண்டும், இனி என் கனவு தான் முக்கியம் என பறந்து விட முடியாது. என்ற மனநிலைக்கு வருகிறார்.
“சக்தியின் கனவை அந்நிலம் காவு வாங்குகிறது.”
அடுத்த காட்சிகளில் பெரிய தேவர் இறக்க, சக்தி அவர் இடத்தில் அமர்கிறார்.
அடுத்த விளைவு என்ன?
பிரிந்து கிடந்து பகை வளர்க்கும் சூழலை மாற்ற, பிரிவினை வேலியை அகற்றி ஒற்றுமைக்கு வித்திடுகிறார் சக்தி. ஒரு திருமண பந்தத்தின் வழியாக இதனை சாதிக்க முயல்கிறார் சக்தி.
ஆனால், ஆண்டை குடும்ப பகைக்குள் சிக்க அஞ்சி.. திருமணத்தின் போது ஓடி விடுகிறார் மணமகன். ஊர் ஒற்றுமையையும், கொடுத்த வாக்கையும் காப்பாற்ற பஞ்சவர்ணத்தை தானே திருமணம் செய்கிறார் சக்தி.
“பானுவுடனான சக்தியின் காதலை அந்நிலம் காவு வாங்குகிறது”.
அடுத்த விளைவு என்ன?
தேர் ஊர்வலத்தில் குண்டு வைக்கிறான் மாயன். பல அப்பாவி ஏழைகள் உயிரிழக்கிறார்கள்.
இத்தொடர் வன்முறைகளில் ஏழைகள் பலியாவதற்கும், மாயனின் பழி வெறிக்கும் முடிவு கட்ட எண்ணுகிறார் சக்தி. அந்தப் போராட்டத்தில் மாயனை சக்தி கொல்ல நேர்கிறது.
கொலையை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோமென இசக்கி உள்ளிட்டவர்கள் கூறுகிறார்கள். ‘ஏத்துக்கிட்டதெல்லாம் போதும், புள்ளக் குட்டிகளை படிக்க வையுங்க’ எனக் கூறும் சக்தி சிறைச்சாலை செல்கிறார்.
“சக்தியையே அந்நிலம் காவு வாங்குகிறது”.
இதுவரை திரைக்கதையில் பயணித்த இரண்டு பிரதான இழைகள் ஒன்றோடொன்று பிணைந்து முத்தாய்ப்பாகிறது இறுதிக் காட்சியில்.
முதல் இழை – ஆண்டைகளின் பழி பகைகளுக்கு ஏழைகள் தொடர்ந்து பலி கொடுக்கப்பட்டார்கள். இம்முறை அது நிகழ்வதை தடுக்கிறார் சக்தி. அடுத்த தலைமுறையையாவது படிக்க வைத்து ஆண்டைகளின் பெருமிதவாதத்திலிருந்தும், கும்பல் மனநிலையிலிருந்தும் விடுவியுங்கள். என்பதே ‘புள்ளக் குட்டிகள படிக்க வையுங்க’ என்ற ஒற்றை வரியின் அர்த்தம்.
இரண்டாம் இழை – தூவலூர் நிலத்தை விட்டு பறக்க நினைத்த சக்தியை உள்வாங்கிய அந்நிலம்.. வன்முறை வேண்டாம் வேண்டாம் என்று கூறிய சக்தியை இறுதியில் காவு வாங்குகிறது.
சக்தியின் நவீன கனவு மலர்களை… தூவலூரில் ஆழப் பிடித்திருக்கும் அவன் வேர் காவு வாங்குகிறது. இங்கு சக்தியின் வேர் என்பது, காலம் காலமாக அவன் சார்ந்த ஆண்டை வம்சாவளிகள் பேசிய பெருமிதவாதமும், அனுபவித்த அதிகாரமும், வளர்த்த பகையும்.
படத்தை வேறு உயரத்துக்கு எலிவேட் செய்யும் மற்றொரு அம்சம்.. சக்தியின் கதாபாத்திர வடிவமைப்பு.
நவீன கனவுகள் கொண்ட சக்திக்கும் – சாதிக்குழு பிரதிநிதி சக்திக்குமான அகவயப் போராட்டத்தின் வழியே.. நிலவுடைமைச் சமூகத்தின் வன்முறை விழுமியங்கள் மீது, நவீன தாராளவாத சிந்தனை நிகழ்த்திய உரையாடலே ‘தேவர் மகன்’.
இப்படத்தில் வரும் ஆண்டைகளும், ஏழைகளும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் தாம். ஆண்ட பெருமை பேசும் சாதியினரில் 90% அதிகமானோர் நிலமற்ற ஏழைகளே.!
அவர்கள் ஆண்ட சாதி பெருமிதவாதத்திற்குள் சிக்கி பலியாகாமல்.. கல்வியை நோக்கி நகரவேண்டும் என்பதே தேவர் மகனான.. நவீன சக்தியின் குரல்.!!
இப்படத்தின் சில காட்சியனுபவங்களை எப்படி பேசாமல் விடுவது.!!
சக்தியின் அறையில் பானு சக்தியோடு உரையாடும் போது.. சக்தி, பஞ்சவர்ணம் திருமண புகைப்பட ஃப்ரேமை பார்த்து விடுகிறார். கோபத்தில் அந்த ஃப்ரேமை எடுத்து தூக்கிப் போடப் போய்.. ஆனால் கீழே போடாமல் மடியில் வைத்து அழுவாள். அப்போது காபி எடுத்து வரும் பஞ்சவர்ணம்.. அந்த ஃப்ரேமை பத்திரமாக அணைத்து எடுத்துச் செல்வாள்.
பேரதிர்ச்சியின் நிலையிலும்.. வேறொருத்தியின் வாழ்க்கையை தான் தொந்தரவு செய்யக்கூடாது என்ற பானுவின் மனமும். ‘உங்களுக்குள் ஆயிரம் இருக்கலாம். ஆனால், இது எனது வாழ்க்கை’ என்ற பஞ்சவர்ணத்தின் மனமும் எவ்வளவு அழகாக, நுட்பமாக காட்சி மொழியில் கடத்தப்பட்டிருக்கிறது.
ஒரு காட்சியில் பஞ்சவர்ணத்திடம் ‘என்னைய கட்டிக்க சம்மதமா? எனக் கேட்பார் சக்தி. ‘சரினு சொல்லு’ என சாடை காட்டும் அப்பாவை பார்க்க எத்தனிப்பார் பஞ்சவர்ணம். அதனைத் தடுக்கும் சக்தி.. ‘நீ பதில் சொல்’ என்பார். பஞ்சவர்ணம் நாணத்தோடு தலையாட்டும் வினாடியில் அற்புதமான இசை கொடுத்திருப்பார் ராஜா. திரைமொழியில் இசையை எத்தருணத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாமில் இருக்கும் போது ‘நான் ஊருக்கு போகலைங்கய்யா’ என பெரிய தேவரிடம் சொல்வார் சக்தி. உடனே பெரியத்தேவர் ‘அதான் சொல்றாகள.. கேன்சல் கேன்சல்’ என கணக்கரைப் பார்த்து குழந்தையின் குதூகலத்தோடு சொல்வார். சிவாஜி எனும் மகா கலைஞனின் நுட்பமான நடிப்பு மிளிரும் அந்தத் தருணம். ஆஹா!!
இறுதியில் சக்தி, மாயனை வெட்டிக் கொன்ற அரிவாளோடு வருகையில்.. எதிர்படும் மாயனின் தாயாரைப் பார்த்து மன்னிப்பு கோரும் உடல் மொழியில் நின்று அழுவார். தாயார், மாயன் மீது கடும் கசப்பில் இருந்தாலும்.. தாய்ப்பாசத்தில் மார்பில் அடித்து அழுவார். அரிவாளோடு வந்து மன்னிப்பு கோரும் நல்லவனுக்கு எதிரே நின்று, தீயவனின் தாய் அழும் இந்த காட்சியின் ஸ்டேஜிங் என் வாழ்நாளில் மறக்கவே முடியாத பிம்பமாக மனதில் நிலைத்தது. வன்முறையை பெருமிதமாக எண்ணும் நிலத்தில்.. தற்காப்புக்காக தற்செயலாக நிகழ்த்திய வன்முறைக்கு குற்ற உணர்வு கொண்டு கண்ணீர் சிந்துகிறான் சக்தி. அதற்கான தண்டனையையும் ஏற்றுக் கொள்கிறான்.
அதே போல.. ரயில் ஒவ்வொரு முறை வரும் போதும், சக்தியை அந்நிலம் மெள்ள உள்ளிழுக்க ஆரம்பித்திருப்பதை கவனிக்கலாம். இறுதியில் கொலைக் கைதியாக அதே ரயிலில் செல்வார் சக்தி.
இவ்வளவு சிறப்புகளைக் கொண்டிருக்கும் இப்படத்தில் ‘போற்றிப் பாடடி பொண்ணே’ பாடல் வரிகளும், ‘சாந்து பொட்டு சந்தனப் பொட்டு’ பாடல் வரிகளும் நிச்சயம் ஆட்சேபத்திற்குரியது தான். இப்பாடல் வரிகளைத் தவிர்த்திருக்கலாம் என்ற ஆதங்கம் எனக்கு எப்போதும் உண்டு.
ஆனால், ஒரு பாடலின் வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு ‘ஆண்டை பெருமித வன்முறைகளுக்கு’ எதிராக அழுத்தமாக உரையாடிய அத்துனைக் காட்சிகளையும் வசதியாக மறந்து விடுவது, தனது முன்முடிவின் பாற்பட்டது மட்டுமே.
‘காதல்’ திரைபடத்தில் சாதி வெறியர்கள் காதலர்களை பிரிக்கும் காட்சி நம்மை உலுக்கியதென்றால்.. அதைக் கூட தங்கள் பெருமிதத்திற்காக வரித்துக் கொண்ட சாதி வெறி மடையர்கள் உண்டு.
‘பாண்டவர் பூமி’ படத்தில் சாதி ஆணவத்தில் தங்கை கொல்லப்படும் காட்சி நம்மை உலுக்கியதென்றால்.. அதையும் தங்கள் பெருமிதமாக எடுத்துக் கொண்ட சாதி வெறியர்கள் உண்டு.
அது அக்காட்சிகளின் பிழையா என்றால் நிச்சயம் இல்லை.
அதே போல் சாதி பெருமிதவாதத்தின் விளைவுகளை பதிவு செய்யுமுன், அந்தந்த கதாபாத்திரங்களின் உளவியலை நிஜத்திற்கு நெருக்கமாக பதிவு செய்வதை.. தனது பெருமிதவாதமாக சில சாதி வெறியர்கள் எடுத்துக் கொள்வது அக்காட்சிகளின் பிரச்சனை அல்ல.
ஒரு வன்முறையாளனை, ஒரு குடிகாரனை, ஒரு ஏமாற்றுக்காரனை பதிவு செய்வதாலேயே அக்காட்சிகள் அவற்றிற்கு ஆதரவான காட்சிகள் அல்ல. அதன் விளைவுகளை அடுத்து வரும் காட்சிகள் காத்திரமாக சொல்கிறதா இல்லையா என்பதே ஒரு படத்தின் மையத்தையும், அதன் அரசியலையும் தீர்மானிக்கும். அவ்வகையில்.. சாதி பெருமிதவாதத்தின், கும்பல் மனநிலையின் மோசமான விளைவுகளை ‘தேவர் மகன்’ காட்சிக்கு காட்சி மிக காத்திரமாக, அழுத்தமாக பதிவு செய்தது. மாறாக பல நாயக துதி கிராமியப் படங்கள் சாதி பெருமிதவாதத்தின் விளைவுகள் என எதைனையும் பேசியிருக்காது. வெறும் நல்லவன், கெட்டவன் சண்டை மட்டுமே அப்படங்கள். அதனால் தான் அவைகள் மேம்போக்கான.. ஆனால், சாதி பெருமிதவாதப் படங்கள்.
‘தேவனா இருக்குறது முக்கியமா? மனுசனா இருக்குறது முக்கியமா?
‘ஏத்துக்கிட்டதெல்லாம் போதும். புள்ளக் குட்டிகளை படிக்க வையுங்க’.
கலையின் பேரழகோடு முன் வைக்கப்பட்ட இந்த குரல்கள் காலங்கள் கடந்து ஒலிக்கும். சமாதானத்தை நோக்கிய இன்னும் பலப் படங்களுக்கு வித்திடும்.
