1991 ல் பாலச்சந்தரின் ‘அழகன்’ படத்தில் அறிமுகம். மதுபாலாவின் தோழியாக இரண்டு காட்சிகளில் எட்டிப் பார்த்துவிட்டுச் செல்வார். எனினும், டைட்டில் கார்டில் ‘அறிமுகம்’ யுவராணி என இவருக்கு ‘பாலச்சந்தரின் அறிமுகம்’ என்கிற அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
1992 ல் வெளியான ‘புது வருஷம்’ மற்றும் ‘தம்பிக்கு ஊருக்கு புதுசு’, 1993 ல் வெளியான ‘மின்மினிப் பூச்சிகள்’ ஆகிய படங்களிலும் யுவராணிக்கு டைட்டில் கார்டில் அறிமுகம் என்றே வந்தது. இவற்றில் ‘புது வருஷம்’ படத்தில் ‘ரத்னா’ என்றும் , ‘மின்மினிப் பூச்சிகள்’ படத்தில் ‘பார்கவி’ என்றும் பெயர் சூட்டப்பட்டு அறிமுகப்படுத்தி இருப்பதை எல்லாம் இக்கட்டுரைக்கான தேடலில் அவதானிக்க முடிந்தது.
தோல்விப் படங்களான இவற்றையெல்லாம், இந்தப் படங்கள் வெளியான நாட்களில் பார்த்திராவிட்டாலும், நாஸ்டால்ஜிக் உணர்வு உந்தித் தள்ளும் போது, இணையத்தில் 90’ஸ் படங்களைத் தேடிப் பார்ப்பது வழக்கம். அப்படியான சந்தர்ப்பங்களில் இந்தப் படங்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். இந்தப் படங்களில் வரும் பதின்ம வயது யுவராணியிடம் இன்னதென்று சொல்ல முடியாத ஒரு வசீகரம் இருந்திருக்கிறது.
குறிப்பாக, யுவராணியை மிக அழகான கோணங்களில், அழகான காஸ்ட்யூம்களில் காட்டிய படம் என்கிற அடையாளத்தை ‘மின்மினிப் பூச்சிகள்’ படத்திற்கு வழங்கலாம். அந்த அளவிற்கு, இந்தப் படத்தில் யுவராணி வருகிற ஒவ்வொரு ஃப்ரேமிலும் அழகியாகத் தெரிகிறார்.
அழகனிற்குப் பிறகு இத்தனைப் படங்கள் நடித்திருந்தாலும் அவரைப் பற்றி பெரிதாக யாருக்கும் தெரிந்திராத சூழலில்தான், 1993ல் பாலச்சந்தர் தனது ‘ஜாதி மல்லி’ படத்தில் மீண்டும் யுவராணிக்கு ஒரு நல்ல வாய்ப்பினை வழங்கியிருந்தார். வினீத்தின் ஜோடியாக பெர்லின் என்ற கதாபாத்திரத்தில் யுவராணி கலக்கியிருந்தார். அழகு, நடிப்பு, நடனம் என அனைத்திலும் கவனிக்க வைக்கும் விதத்தில் இந்தப் படத்தில் யுவராணி வெளிப்பட்டிருந்தார்.
அதே நாளில் வெளியான கங்கை அமரனின் ‘கோயில் காளை’ படத்தில் வாய் பேச முடியாத ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படங்களில் நடித்ததன் பயனாக ‘செந்தூர பாண்டி’ படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களின் இயக்கத்தில் விஜயுடன் நடிக்கிற வாய்ப்பு அமைந்தது. விஜய்க்கே அது இரண்டாவது படம்தான். எனினும் விஜயகாந்த் என்கிற மாஸ் நடிகரின் இருப்பினால் அந்தப் படம் வெற்றிப்படமாக அமைந்ததில் விஜயோடு சேர்ந்து யுவாராணிக்கும் ஒரு பரவலான வெளிச்சம் கிடைத்தது. குறிப்பாக ‘சின்ன சின்ன சேதி சொல்லி’ பாடலில் இளமைத் துள்ளலோடு அவர் ஆடிய நடனம் பலரையும் ஈர்த்தது. ‘புன்னகை அரசி’ என உண்மையில் யுவராணியை அடையாளப் படுத்தலாம். அந்த அளவிற்கு யுவராணியின் புன்னகை முகம் இந்தப் பாடலுக்கு பெரிய வசீகரத்தைக் கொடுத்திருக்கும்.
1994 ல் பாலச்சந்தரின் ‘டூயட்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வந்து பிரபுவிடம் ‘எந்த கடையில அரிசி வாங்குறீங்க’ என்கிற ஃபேமஸ் டயலாக்கை பேசிவிட்டுச் சென்றார். தொடர்ந்து , அன்றைய நாளில் மினிமம் கேரண்டி நாயகனாக தமிழில் வலம் வரத் தொடங்கியிருந்த ஜெயராம் அவர்களோடு ‘நிலா’ படத்தில் இரண்டாவது நாயகியாக ஒரு டாக்டர் கதாபாத்திரத்தில் வருவார். அந்தப் படத்திலிருந்துதான் சற்று பூசிய உடற்வாகில் இன்னும் கூடுதல் வசீகரமாகத் தெரிந்தார் யுவராணி.
அன்றைய நாளில் பிரேம் என்றொரு NRI நடிகர், வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தோடு வந்து ‘அந்த நாள்’ ,’வரார் சண்டியர்’ என்றெல்லாம் வருடத்திற்கு ஒரு படம் எடுப்பதை சாங்கியமாக வைத்திருந்தார். அந்த வகையில் 1994 ல் அவர் தாயாரித்து இயக்கிய ‘வீரமணி’ என்கிற படத்தில் யுவராணி நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் ‘ஆகாயம் பூமி’ என்றொரு நல்ல பாடல் இருக்கும். அதிலும் யுவராணி புஷ்டியான உடல்வாகில் மெழுகு பொம்மை போல இருப்பார்.
இதே காலக்கட்டத்தில் ராம்கியின் ஜோடிகளில் ஒருவராக ‘சின்ன மேடம்’ படத்திலும் நடித்திருந்தார். இந்தப் படத்தில் வினிதா நாயகி என்றாலும் , அவருக்கு நெகடிவ் ஷேட் இருக்கும், அவரின் தங்கையாக வரும் யுவராணிதான் நாயகியாகத் தெரிவார். மின்மினிப் பூச்சிகள் படத்தில் பதின்ம வயது அழகில் அள்ளியவர், இதில் இன்னும் சற்று மெச்சூர்ட் லுக்கில் அத்தனை களையாக இருப்பார். இந்தப் படத்தின் ‘சின்ன சின்ன இடங்களைத் தொட்டு வைக்கிறாய்’, ‘முத்து முத்து பெண்ணொருத்தி’ என இரண்டு அட்டகாசமான டூயட் யுவராணிக்கு. இந்தப் படம் ஓடியிருந்தால் யுவராணி முன்னணி நடிகை பட்டியலில் இணைந்திருக்க வாய்ப்பு அமைந்திருக்கும். கம்ளீட் ஹீரோயின் மெட்டியலாக உருமாற்றம் அடைந்த படமாக இதனை அடையாளப்படுத்தலாம்.
இம்மாதிரி சூழலில்தான், 1995ல் சூப்பர் ஸ்டாரின் ‘பாட்ஷா’ படத்தில் அவரின் தங்கைகளில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பு அமைகிறது. ஏற்கனவே , 1993ல் தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு தங்கையாக ‘முட்டா மேஸ்திரி’ படத்திலும் நடித்திருக்கிறார். ஆனாலும், பாட்ஷா வாய்ப்பின் போது, யுவராணி ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்து சிறிது கவனிப்பையும் பெற்றுக் கொண்டிருந்த சமயமாக இருந்ததால், அந்த டைமில் தங்கையாக நடிக்க வேண்டுமா என தயங்கியவர், பிறகு , சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என்று முடிவு செய்து அதிலும் நடித்தார். தங்கை என்றாலும் மனதில் நிற்கும் நல்ல கதாபாத்திரமாக அது அவருக்கு அமைந்தது.
இதே ஆண்டில், 1995 ல் விக்னேஷின் ஜோடியாக ‘செல்லக்கண்ணு’ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் தேவா கொடுத்த அத்தனைப் பாடல்களும் முத்து என்று சொல்லலாம். ‘வண்டியில மாமம் பொண்ணு’ பாடல் இன்று வரை கிராமங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்தப் பாடலில் வரும் யுவராணின் சின்ன சின்ன குறும்புத்தனங்கள் கொள்ளை கொள்ளும் என்றாலும், இதே படத்தில் மலேசியா வாசுதேவனும் – ஸ்வர்ணலதாவும் பாடிய ‘ராக்க முத்து ராக்கம்மா ராங்கு பண்ணிப் பார்ப்போமா’ பாடலில் இளமை வனப்பில் தெறிக்க விடுவார் யுவராணி. இதே வருடத்தில் பாரதிராஜாவின் ‘பசும்பொன்’ பட வாய்ப்பும் அவருக்கு அமைந்தது. அந்தப் படத்தில் இவர் ஏற்றிருந்த தேன்மொழி கதாபாத்திரம் ரகளையானது. அதில் இவருக்கு அமைந்த ‘தாமர பூவுக்கும் தண்ணிக்கும்’ பாடலில் மான்குட்டி போல அவர் துள்ளி துள்ளி ஆடிய நடனம் யாராலும் மறக்க முடியாத ஒன்று. ‘பசும்பொன்’ வெளியான அதே நாளில்தான் அர்ஜூனின் ‘கர்ணா’வும் வெளியானது. கர்ணாவில் ‘ஏ ஷப்பா ஏஷப்பா’ பாடலுக்கு மட்டும் வந்து போனாலும் யுவராணிக்கு அது ஒரு முத்திரைப் பாடலாக அமைந்தது.
1996 ல் சரவணனின் ஜோடியாக ‘திரும்பிப் பார்’ மற்றும் பாண்டியராஜனின் ஜோடியாக ‘மாப்பிள்ளை மனசு பூப்போல’ என இரண்டு படங்களில் நடித்திருந்தார். இவற்றில் ‘திரும்பிப் பார்’ ஆவரேஜாக ஓடிய படமாக அமைந்தது. அந்தப் படத்தில் வரும் ‘வாள வயசுப்புள்ள வட மதுர வாழைக்கொல்ல’ பாடல் யுவராணியின் ரசிகர்களுக்கு என்றே வைக்கப்பட்ட விருந்தாக அமைந்தது.
1997 ல் பிரமாண்ட தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனின் தயாரிப்பில் உருவான ‘சக்தி’ படத்தில் நாயகியாக ஒப்பந்தம் ஆனார். மீண்டும் வினீத்தின் ஜோடியாக இதில் நடித்திருந்தார். இந்தப் படமும் பெரிதாக ஓடவில்லை. ஆனாலும் யுவராணியை மிக உச்சமான அழகில் வெளிக்கொண்டு வந்த ‘அச்சு வெல்லமே’ , ‘மானா மதுரப் பொண்ணே’ , ‘முத்தம் கொடுத்தால்’ என மூன்று அட்டகாசமான பாடல்கள் இந்தப் படத்தில் இருந்தன.
பார்க்க அம்சமாகவும், கூடவே நடிக்கவும் தெரிந்த நடிகையாக இருந்தும், இத்தனைப் படங்களில் நடித்த பின்னரும்கூட முன்னணி நாயகி என்கிற அடையாளத்தை யுவாரணியால் பெறவே முடியவில்லை. ‘சக்தி’ படத்தோடு திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனவர், அதன் பிறகு கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகவும், தொலைக்காட்சி தொடர்களில் வில்லியாகவும் பயணத்தைத் தொடர ஆரம்பித்துவிட்டார்.
யுவராணி முன்னணி கதாநாயகி என்கிற அடையாளத்தை பெற முடியாமல் வேண்டுமானால் போயிருக்கலாம் , ஆனால் அவருக்கென்று ஒரு ரசிகர் வட்டம் இருப்பதை இணைய புழக்கம் வந்ததன் பின் நிறைய கவனிக்க முடிந்தது. நானுமேகூட இணைய புழக்கம் வந்ததன் பின் யுவராணி படங்களாகத் தேடி பார்த்தே ரசிகனாக மாறினேன். அவ்வகையில் அவர் ரசிகர்களின் மனங்களை வென்ற நாயகிகளில் ஒருவராக என்றைக்கும் இருப்பார்!
