சென்னையில் உள்ள பெரம்பூர் பகுதியில் வாழ்ந்து வருபவர் சீதா கிருஷ்ணா. தெலுங்கு மொழி பேசும் குடும்பத்தில் பிறந்த சீதா கிருஷ்ணா தாய் சரளா,தந்தை பாஸ்கர்,தம்பி சிரஞ்சீவியுடன் வசித்து வருகிறார். இவர்களுடன் புகுந்த வீட்டில் கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டில் இருக்கும் சகோதரி சத்தியவதியும் அவர்களுடனே இருக்கிறார்.
பாஸ்கர் ரெயில்வேத் துறையில் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர். எந்நேரமும் நண்பர்களுடன் ஜாலியாக இருப்பவர். சிரஞ்சீவி அரசாங்கப் பணியில் இருப்பவர். சீதா கிருஷ்ணா உடற்பயிற்சி கோச்சாக இருந்து வருபவர். சரளா மாவு அரைத்து விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார்.
சரளா எதற்கெடுத்தாலும் நம்ம ஆளுங்க என்று ஜாதியைப் பற்றி பேசி வருபவர். இந்த நிலையில் சீதா கிருஷ்ணா அதே பகுதியில் வசிக்கும் மேஜிக் என்கிற ஆங்கிலோ இந்தியப் பெண்ணை கல்லூரி காலம் முதல் காதலித்து வருகிறார்.
மேஜிக் சீதா கிருஷ்ணாவுடன் நட்பாக மட்டும் பழகுகிறாரே தவிர வேறு எந்த எண்ணமும் அவருக்கு இல்லை. தன்னுடைய ஒரு தலையான காதலை மேஜிக் ஏற்றுக் கொள்வாரோ மாட்டாரோ என்ற தவிப்புடன் சீதா கிருஷ்ணா இருக்கிறார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய காதலை அம்மா ஏற்றுக் கொள்வாரோ மாட்டோரோ ஏதாவது பிரச்சினை ஆகுமோ என்று சீதா கிருஷ்ணா குழப்பத்திலேயே இருக்கிறார்.
இதனிடையே தன்னுடைய தம்பி மகளுக்கு சீதா கிருஷ்ணாவை திருமணம் செய்து வைக்க சரளா பேசி முடித்து விடுகிறார். அதே நேரத்தில் ஒருதலை காதலாக இருந்த சீதா கிருஷ்ணாவின் காதலை மேஜிக் ஏற்றுக் கொள்கிறார்.
மேஜிக்கின் வீட்டிலும் காதலுக்கு ஒப்புக் கொள்கிறார்கள். சீதா கிருஷ்ணா மேஜிக்குடனான காதலை தந்தை பாஸ்கரிடம் சொல்லி அவரது சம்மதத்தை பெறுகிறார்.
நம்ம ஆளுங்க நம்ம ஜனங்க என்ற கொள்கையுடன் இருக்கும் சரளா மகனுடைய காதலை ஏற்றுக் கொண்டாரா அம்மாவின் சம்மதத்தை சீதா கிருஷ்ணா பெற்றாரா சீதா கிருஷ்ணாவிற்கு நிச்சயம் செய்த திருமணம் என்ன ஆனது அதைப் பற்றி மேஜிக்கிற்கு தெரியுமா சத்தியவதி மீண்டும் கணவனுடன் சேர்ந்து வாழ்ந்தாரா இறுதியில் நடந்தது என்ன என்பது தான் படத்தின் மீதிக்கதை.
சீதா கிருஷ்ணாவாக பாரி இளவழகன் தன்னுடைய துடிப்பான நடிப்பால் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து விடுகிறார்.
ஒரு தலையாக காதலிக்கும் போதும் காதலை மேஜிக் ஏற்றுக் கொண்ட பிறகும் அம்மாவை நினைத்து காதலில் இருந்து பின் வாங்க நினைக்க முயலும் போதும் பின் இறுதிக் காட்சியில் மாவு வாங்கறவன் எல்லாரும் உன் ஜாதிக்காரனா என்று பொறி பறக்க பேசும் போதும் பாரி இளவழகன் நேர்த்தியாக நடித்திருக்கிறார். நகைச்சுவை நடிப்பிலும் ரசிக்க வைக்கிறார்.
மேஜிக்காக ரம்யா ரங்கநாதன் அழகாக காட்சி தந்து அருமையாகவும் நடித்திருக்கிறார். காதலிக்க ஆரம்பித்த பிறகு பாரியின் அம்மா சரளாவின் முன் பவ்யமாக நடிக்க முயலும் போதும் லவ் வேற பிடிச்சிருக்கு வேற என்று பேசும் போதும் பேருந்தில் பாரியை அவமானப்படுத்தி விட்டு வலியின் வேதனையை உணர வைக்கும் போதும் நன்றாக நடித்திருக்கிறார்.
சரளாவாக ரோஜா பொட்டு வைச்சா மேரியம்மா மாரியம்மாவாக முடியாது என்று பேசும் போதும் பொறுப்பில்லாமல் இருந்த கணவன் நண்பர்களுடன் சுற்றிக் கொண்டு செலவழிக்கும் போது மாவுக்கடை வைத்து உங்களை எப்படி ஆளாக்க நான் கஷ்டப்பட்டேன் என்று பேசும் போதும் சம்மந்தியம்மாவிடம் பொறி பறக்க பேசும் போதும் ரோஜா அற்புதமாக நடித்திருக்கிறார்.
பாஸ்கராக சேத்தனும் தன் பங்கிற்கு நடிப்பில் கலக்கியிருக்கிறார்.உன் விருப்பத்தை பாக்கிறேயே புள்ளயோட சந்தோஷத்தை யோசிச்சு பாத்தியா என்று கேட்கும் போதும் சூப்பரா இங்கிலிஷ் பேசறியே என்று பாரியிடம் கேட்கும் காட்சியிலும் சேத்தனின் நடிப்பு அருமை. தந்தையும் மகனும் நண்பர்களாக பழகுவது ரசிக்க வைக்கிறது.
படத்தில் நடித்த கோபி, இஸ்மத் பானு மற்றும் பிற கலைஞர்கள் அனைவரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் காட்சிகளை அழகாக படமாக்கியுள்ளார்.
படிப்பு இருக்கிற பொண்ணை யாரும் அடிமையாக்க முடியாது மனுஷனுக்கு Character தான் முக்கியம் போன்ற வசனங்கள் ரசிக்க வைக்கிறது.
இயக்குனராகவும் இருக்கும் பாரி இளவழகன் குணம் தான் முக்கியம் ஜாதி முக்கியமில்லை என்கிற கோணத்தில் காதல் கதையை உருவாக்கி அதனை நகைச்சுவை கலந்து இயக்கியுள்ளார்.
முதல் பாதி மெதுவாக சென்றாலும் இரண்டாவது பாதியில் படம் சுவாரஸ்யமாக செல்லும் வகையில் இயக்கியுள்ளார். காதல்,நகைச்சுவை மற்றும் எமோஷன் என காட்சிகளை பார்த்து பார்த்து அமைத்து இயக்கியுள்ளார்.
குறிப்பாக ஜாதி மீது ரோஜா வைத்திருந்த பார்வையை உடைத்தெரியும் காட்சி அருமை. கடைசி அரைமணி நேரம் படம் அற்புதம்.
மொத்தத்தில் சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைக்கும் இந்த படத்தை ஒரு முறை அவசியம் காணலாம்.
