Jana nayagan

‘ஜன நாயகன்’ விமர்சனம்: ஜனநாயகமா… ஜனமும் ‘கன்’னும் சம அளவில்!

11 / 100 SEO Score

கே.வி.என். புரொடக்ஷன்ஸ் சார்பில், தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி வெங்கட் கே. நாராயணா தயாரிப்பில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கதாநாயகனாக நடிக்க, பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள ‘ஜன நாயகன்’ படத்தை ஹெச். வினோத் எழுதி இயக்கியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரக் காலத்தில் உருவான இந்த திரைப்படம், தேர்தல் முடிந்து த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகு வெளியாகியிருப்பது இதன் அரசியல் வாசிப்பையே மாற்றி அமைக்கிறது.

இது பாலகிருஷ்ணா நடித்த ‘பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் ரீமேக். ஆனால், வெறும் காட்சி-க்கு-காட்சி நகலாக இல்லாமல், பல மாற்றங்களைச் செய்து தமிழ்நாட்டு அரசியல் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்க முயன்றிருக்கிறார் வினோத்.

அசல் படத்தில் துணை முதல்வர் கதாபாத்திரம் நேர்மையின் அடையாளமாக இருந்தது. அதை அப்படியே வைத்திருந்தால் இந்தப் படத்தின் அரசியல் நோக்கமே பாதிக்கப்பட்டிருக்கும். எனவே, பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சில வெற்றிகரமாக அமைந்தாலும், சில இடங்களில் அந்த மாற்றங்களே கதைக்கு சுமையாக மாறுகின்றன.

விஜய்… படத்தின் மிகப்பெரிய பலம்

இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் யார் என்றால், அது விஜய்தான்.

‘வாரிசு’ போன்ற பலவீனமான படங்களைக்கூட தனது ரசிகர்களின் ஆதரவால் வெற்றிப்படமாக மாற்றியவர் விஜய். அதுவும் அரசியல் அடையாளத்துடன் வெளியாகும் படம், அதிலும் அவர் முதல்வராக பதவி ஏற்ற பிறகு வெளியாகும் படம் என்றால், ரசிகர்கள் கொண்டாடாமல் இருப்பார்களா?

பாடல், நடனம், சண்டை, சென்டிமென்ட், அரசியல் வசனங்கள் என தனது வழக்கமான பாணியில் விஜய் திரையை முழுவதுமாக ஆக்கிரமிக்கிறார். காரின் கண்ணாடியை ஏற்றிவிட்டு மேலே பார்த்து “சூரியனை” முறைக்கும் காட்சி, அரசியல் குறியீட்டை வெளிப்படையாக பேசுகிறது.

வினோத்தின் இயக்கம்

பிரம்மாண்டமான காட்சியமைப்புகள், சிறப்பான படமாக்கல், கடுமையான உழைப்பு ஆகியவை இயக்குநர் வினோத்தின் திறமையை மீண்டும் நிரூபிக்கின்றன.

குறிப்பாக, வயலில் இருந்து கடலைப் பறித்துவிட்டு, செடியை மீண்டும் நட்டு “அரசியல்வாதி என்றால் என்ன?” என்று விளக்கும் காட்சி ரசிக்க வைக்கிறது.

ஜெயில் சண்டைக்காட்சியில் “No War… Only Art…”, “Le Respect” போன்ற வாசகங்களை பயன்படுத்தியிருப்பது இயக்குநரின் சிக்னேச்சர் டச்.

சென்டிமென்ட் காட்சிகளும் பல இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

தொழில்நுட்பம்

அனிருத் ரவிச்சந்திரனின் பாடல்கள் அனைத்தும் உற்சாகத்தை ஏற்படுத்துகின்றன. பின்னணி இசையில் வரும் தீம் சிறப்பாக இருந்தாலும், அதையே மீண்டும் மீண்டும் பயன்படுத்தியிருப்பது சலிப்பை தருகிறது. பல இடங்களில் அது வெறும் “ஃபில்லர்” இசையாக மட்டுமே மாறுகிறது.

சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு பிரம்மாண்டத்தையும் உணர்வையும் ஒரே நேரத்தில் பதிவு செய்கிறது.

எடிட்டர் பிரதீப் ராகவ் இந்த முறை எந்த குறையும் சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்.

அனல் அரசுவின் சண்டைக் காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இருந்தாலும், சில இடங்களில் வன்முறை தேவையற்ற அளவுக்கு அதிகமாகிறது. குறிப்பாக, வில்லனை வெட்டிய பின் கோடாரியில் வழியும் ரத்தத்தை விஜய் நாக்கால் நக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அது ஜனநாயக ஹீரோவின் பிம்பத்தை விட, குரூரமான ஹீரோவின் தோற்றத்தை உருவாக்குகிறது.

நடிகர்கள்

பாபி தியோல் வலுவான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஆனால் ஆரம்பத்திலேயே அவரது கொடூரத்தை முழுமையாக காட்டிவிட்டு, இடைவேளைக்குப் பிறகு “அவர் ஏன் இப்படியானார்?” என்ற பிளாஷ்பேக் சொல்வதால் அந்த பகுதி உயிரிழந்து விடுகிறது.

பூஜா ஹெக்டேவுக்கு பெரிதாக செய்ய ஒன்றும் இல்லை.

மமிதா பைஜூ சிறப்பாக நடித்திருந்தாலும், அசல் படத்தில் ஸ்ரீலீலா ஏற்படுத்திய தாக்கம் அளவுக்கு இல்லை.

கவுதம் மேனன் தோற்றத்தில் பொருத்தமாக இருந்தாலும், நீண்ட வசனங்களில் அவரது வசன உச்சரிப்பும் இடைவெளிகளும் இயல்பாக அமையவில்லை.

பிரகாஷ் ராஜ் தனது அனுபவத்தால் மீண்டும் ஒரு முறை கம்பீரமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

அரசியல் பேசும் படம்

இந்தப் படத்தின் முக்கிய நோக்கமே அரசியல் விமர்சனம்.

“எங்க தாத்தா… எங்கப்பா… இப்ப நான்… அடுத்து என் பையன்… நாங்கதான் ஆளுவோம்…”

என்ற வசனம் குடும்ப அரசியலை நேரடியாக விமர்சிக்கிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நினைவூட்டும் காட்சி, மாவட்ட செயலாளர்களின் அதிகாரம் குறித்த வசனங்கள், “டார்ச் லைட் அடிச்சு தேடினாலும் உன் கட்சி தெரியல” போன்ற வசனங்கள் என பல அரசியல் சுட்டிக்காட்டுகள் படம் முழுவதும் நிறைந்துள்ளன.

ஆனால் ஒரு சிக்கல் இருக்கிறது.

இந்தப் படம் வெளியான நேரத்தில் விஜயே ஆட்சியில் இருப்பதால், பல வசனங்கள் எதிர்பாராத வகையில் Backfire ஆகின்றன.

“இளைஞர்கள் எல்லாம் டாஸ்மாக்குல கையே விட்டுக்கிட்டே இருக்கான்…”

“பத்து வருடம் முன்னாடி சாராயம் காய்ச்சினவன்… கந்து வட்டி பண்ணவன்… இப்ப அரசியல்வாதி…”

“அவனும் இவனும் மாத்தி மாத்தி ஆண்டு ஏமாத்தினது போதாதுன்னு இன்னொருத்தன் வந்துட்டான்…”

இந்த வசனங்கள் இப்போது திரையில் ஒலிக்கும்போது, பார்வையாளர்களுக்கு “அடடே!” என்ற உணர்வே அதிகமாக வருகிறது.

லாஜிக்?

இந்தப் படத்தில் லாஜிக்கைத் தேட ஆரம்பித்தால், படம் முடிவதற்குள் ரசிகர்களே வந்து கேள்வி கேட்டவரை அடித்துவிடுவார்கள் போல.

வெற்றிகொண்டான் என்ற ஒரு கோப்பை முப்பது பேர் சேர்ந்து அருங்காட்சியகத்தில் பொருள் தேடுவது போல தேடும் காட்சி…

ஒரு சத்தம் கேட்டால் மகளுக்கு மூச்சுத்திணறல் வரும் என்பதை நிரூபிக்க, ஜெயிலர் தானே கோப்பை தூக்கி எறிந்து சோதனை நடத்தும் காட்சி…

இப்படி ஏராளமான வசதிக்கேற்ற திரைக்கதை முடிவுகள் இருக்கின்றன.

பகவந்த் கேசரியுடன் ஒப்பிடும்போது…

குழந்தைகளிடம் தவறான தீண்டல்கள் குறித்து பாலகிருஷ்ணா பேசும் காட்சி அசல் படத்தில் மிக வலுவாக இருந்தது. இந்தப் படத்தில் அந்த தாக்கம் சற்று குறைந்திருக்கிறது.

“One Last Dance” பாடலில் விஜய் வழக்கம்போல அசத்துகிறார். ஆனால் இசையிலும் காட்சியமைப்பிலும் இன்னும் படைப்பாற்றல் இருந்திருக்கலாம். விஜய்யின் சினிமா பயணத்தை இசை மற்றும் நடன பாணிகளின் மாற்றங்கள் மூலம் கொண்டாடியிருக்கலாம்.

மேலும், முழுப் படமும் ஒரு நேரடி தெலுங்கு மாஸ் படத்தின் உணர்வைத் தருகிறது. ரீமேக் என்றாலும் தமிழுக்கே உரிய அடையாளத்தை இன்னும் வலுவாக உருவாக்கியிருக்கலாம்.

இறுதியாக…

குறைபாடுகள் ஏராளம்.

லாஜிக் தடுமாற்றங்கள் இருக்கின்றன.

அரசியல் வசனங்களில் சில இடங்களில் தானே சிக்கிக் கொள்கிறது.

ஆனால்…

கத்தவும், கதறவும், விசில் அடிக்கவும், கொண்டாடவும் ரசிகர்களுக்கு விஜய் இருக்கிறார்.

அவர்களுக்கு அது போதும்.

மொத்தத்தில்… ‘ஜன நாயகன்’ — ஜனநாயகத்தைப் பேசும் படம்; ஆனால் ஜனமும் ‘கன்’னும் சம அளவில் கலந்த ஒரு மாஸ் அரசியல் திரைப்படம்.


பின்குறிப்பு

“‘தமிழக முதல்வர் விஜய் நடிக்கும்…’ என்ற வாசகத்துடன் ஒரு திரைப்படம் வெளியாகியிருப்பது விஜய்க்கு மட்டுமே கிடைத்த வரலாற்றுச் சிறப்பு” என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் அது முழுமையான உண்மை அல்ல.

எம்.ஜி.ஆருக்கும் அந்த வாய்ப்பு இரண்டு முறை கிடைத்தது.

1977 ஜூன் 30 அன்று அவர் முதல்வராக பதவியேற்றார். அதன்பிறகு வெறும் 45 நாட்களில் ‘மீனவ நண்பன்’ வெளியானது. விரும்பியிருந்தால் அதன் தலைப்பில் “தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் நடிக்கும்” என்று சேர்க்க முடிந்தது. அவர் அவ்வாறு செய்யவில்லை.

அதேபோல், ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தின் படப்பிடிப்பை பதவியேற்பதற்கு முன்பே இரவு பகலாக உழைத்து முடித்துவிட்டு, பின்னர் முதல்வராக பதவியேற்றார். அந்தப் படம் வெளியானபோதும் அவர் முதல்வராக இருந்தார். அப்போதும் “தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் இயக்கி நடித்த படம்” என்று விளம்பரப்படுத்தும் வாய்ப்பு இருந்தது. அதையும் அவர் பயன்படுத்தவில்லை.

அந்தக் காலத்தில் அதிகாரப் பதவியும் திரைப்பட விளம்பரமும் ஒன்றாக கலக்கக் கூடாது என்ற எண்ணம் இருந்தது.

காலம் மாறிவிட்டது.

அதனால்தான் இந்தப் படத்தைப் பற்றிய விவாதமும் வெறும் சினிமாவைத் தாண்டி அரசியலாக மாறியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top