இந்த சமூகத்தில் புரிந்துகொள்ளப்படாமல் கடந்து செல்லப்படும் பல பெண்களின் உளவியல் வலி!

‘பாலன்’ திரைப்படத்தைச் சுற்றி வரும் சில விமர்சனங்களைப் பார்க்கும்போது, அந்தப் படத்தின் தாயைக் குறித்து “சுயநலவாதி”, “தன்னையும் தன் பிள்ளையையும் தவிர வேறு யாரையும் நம்புவதில்லை” போன்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இந்தக் கதாபாத்திரத்தை வெறும் சுயநலம் என்ற ஒரு வார்த்தைக்குள் அடைத்துவிடுவது, படம் பேசும் உளவியலின் முக்கியமான பகுதியையே தவறவிடுவதாகத் தோன்றுகிறது. பாலனின் தாய் ஏன் அப்படி நடந்து கொள்கிறாள் என்பதைப் புரிந்துகொள்ள, அவளது கடந்த காலத்தையும், அவள் எதிர்கொண்ட அனுபவங்களையும் புரிந்துகொள்ள வேண்டும்.

படத்தில் பாலனின் தாய் கூறும் இரண்டு கதைகள் மிகவும் முக்கியமானவை. படம் தொடங்கும்போது அவள் ஒரு கதையைச் சொல்கிறாள். பின்னர் படத்தின் மத்தியில் ஒரு மூதாட்டியிடம் தனது வாழ்க்கையையே ஒரு கதையாகச் சொல்கிறாள். ராஜகுமாரியாக வாழ வைப்பதாக நம்ப வைத்து அழைத்துச் சென்றவன், பின்னர் அவளை அடிமையாக நடத்தி துன்புறுத்துகிறான். ஒரு கட்டத்தில் அவனது துன்புறுத்தலுக்குப் பயந்து, அவனது அடிமையாகவே மாறிப்போகிறாள் அந்தப் பெண். அவனது தொல்லைகள் எல்லை மீறியபோது, தன்னுடைய நிலைநிற்றலுக்காக வேறு வழியின்றி அவனை கொலை செய்கிறாள். அப்போது அந்த ராஜகுமாரி கர்ப்பிணி.

இந்தக் கதையின் பின்னால் பாலனின் தாயின் வாழ்க்கை அனுபவம் மறைந்திருக்கிறது. ராஜகுமாரி என்று நம்ப வைத்து அழைத்துச் சென்றவன், அவளது வாழ்க்கையை அடிமைத்தனமாகவும் துன்பமாகவும் மாற்றியிருக்கிறான். மனிதர்களை நம்பியதன் விளைவாக தனக்கு ஏற்பட்ட இந்த அனுபவம், அவளுக்குள் மனிதர்கள் மீதான நம்பிக்கையை முற்றிலுமாக உடைத்திருக்கிறது. அதனால்தான் அவளது நடவடிக்கைகளை வெறும் சுயநலம் என்று பார்க்க முடியாது.

படத்தில் வெளிப்படும் மற்றொரு முக்கியமான உளவியல் நிலை Hypervigilance. அதாவது, எப்போதும் ஏதாவது ஆபத்து வரப்போகிறது என்று எதிர்பார்த்து, தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்கும் மனநிலை. அவளுக்கு யாராவது உதவ வந்தாலும், “இவர் ஏன் உதவுகிறார்?”, “இதற்குப் பின்னால் என்ன நோக்கம் இருக்கிறது?”, “இவர் என்னைப் பயன்படுத்தப் போகிறாரா?” என்ற கேள்விகள் மனதிற்குள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கின்றன.

சிறையில் இருக்கும் ஒரு பெண்ணை விடுதலை செய்ய அவள் உதவும் காட்சி இதற்கு முக்கியமான உதாரணம். உதவி என்ற பெயரில் நெருங்கிய ஒருவர், அதற்குப் பதிலாக அவளது உடலைப் பயன்படுத்த முயற்சிக்கிறார். இதுபோன்ற அனுபவங்கள் அவளது மனதில் ஏற்கனவே இருந்த அச்சத்தை மேலும் வலுப்படுத்துகின்றன. யாராவது உதவ வந்தாலும், அதற்குப் பின்னால் ஏதாவது சுயநலம் இருக்கும் என்ற எண்ணம் அவளுக்குள் ஆழமாகப் பதிந்துவிடுகிறது.

வறுமை, பாதுகாப்பின்மை, சமூக அவமதிப்பு, துன்புறுத்தல், ஏமாற்றம் போன்ற அனுபவங்களை ஒருவர் தொடர்ந்து எதிர்கொள்ளும்போது, உலகம் பாதுகாப்பான இடம் என்ற அடிப்படை நம்பிக்கையே உடைந்துவிடலாம். பலமுறை வாழ்க்கையை மாற்ற முயன்றும் தோல்வியை சந்தித்ததால், “நல்லது எதுவும் நீடிக்காது” என்ற நம்பிக்கையும் உருவாகலாம். அதனால்தான் உண்மையான அன்பும் உதவியும் கிடைத்தாலும், அதை நம்புவதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் அவளால் முடியவில்லை.

“எனது மகளாகவும், எனது பேரப்பிள்ளையாகவும் எனது வீட்டில் வந்து தங்கிக் கொள்ளுங்கள்” என்று அன்புடன் அழைக்கும் உணவுக்கடை பெண்ணிடமிருந்தும் அவள் ஓடுகிறாள். “உன்னையும் உன் பிள்ளையையும் எனது பிள்ளை போல பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்லும் ஒருவரிடமிருந்தும் தப்பித்து ஓடுகிறாள். வாழ்க்கை முழுவதும் மனிதர்கள் மீதான நம்பிக்கையை இழந்ததால், நல்லவர்களிடமிருந்தும் தப்பிப்பதே அவளுடைய பாதுகாப்பு முறையாக மாறிவிட்டது.

பாலன் மட்டுமே அவளுடைய உலகம். அவனுக்கு ஏதாவது தீங்கு நேருமோ, யாராவது அவனைப் பயன்படுத்திக் கொள்வார்களோ என்ற அச்சத்தால் மற்றவர்களை நம்ப மறுக்கிறாள். அதே பயத்தையே பாலனுக்கும் கற்றுக்கொடுக்கிறாள். அவள் மற்றவர்களை மட்டும் நம்பாதவள் அல்ல; தன்னையே அன்புக்கும் உதவிக்கும் தகுதியானவள் என்று நம்ப முடியாத ஒரு ஆழமான மனநிலையிலும் இருக்கிறாள்.

இதுதான் ‘பாலன்’ திரைப்படத்தின் எழுத்தின் சிறப்பு. பாலன், பவித்ரன், அப்பாஸ் உள்ளிட்ட ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் உருவாக்கிய உளவியல் இருக்கிறது. அதை வசனங்களால் மட்டும் விளக்காமல், காட்சிகள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் மூலமாக படம் பார்வையாளர்களிடம் கடத்துகிறது. அதனால்தான் இதை நான் “One of the Finest Writing” என்று குறிப்பிட்டிருந்தேன்.

நம்மைச் சுற்றிலும் இதுபோன்ற பல பெண்கள் இருக்கிறார்கள். அவர்களின் நடவடிக்கைகளை மட்டும் பார்த்து “சுயநலம்”, “திமிர்”, “யாரையும் நம்புவதில்லை” என்று எளிதாக தீர்ப்பு வழங்குகிறோம். ஆனால், “அவள் ஏன் இப்படி மாறினாள்?” என்று கேட்பதில்லை. சில நேரங்களில் நாம் சுயநலம் என்று நினைப்பது, உண்மையில் பல ஆண்டுகளாக அனுபவித்த வலியிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள உருவான ஒரு மனப்பாதுகாப்பாக இருக்கலாம். அந்த உண்மையைப் புரிந்துகொள்ளச் செய்வதுதான் ‘பாலன்’ திரைப்படத்தின் மிகப்பெரிய பலம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top